PUBLISHED ON : செப் 12, 2020

அன்பு பிளாரன்ஸ்,
இரு மகன்களின் தாய் நான். மூத்தவனுக்கு வயது 17; பிளஸ் 2 படிக்கிறான். இளையவன், 4ம் வகுப்பு படிக்கிறான்; இதுவரை, நான்கு பள்ளிக்கூடங்கள் மாறிவிட்டான். அவன் பிரச்னை சற்று வினோதமானது.
பள்ளியில் இறைவணக்க நேரம், ஆசிரியை வகுப்பெடுக்கும் நேரம், மதிய உணவு இடைவேளை நேரம், மாலை விளையாட்டு வகுப்பு என, எப்போதும் சக மாணவர்களில் சிலர், இளையமகனை தலையில் குட்டுகின்றனர்; கன்னத்தில் அறைகின்றனர்; தொடையில் கிள்ளுகின்றனர்; முதுகில் சாத்துகின்றனர்.
தினமும் பள்ளி விட்டு வரும் போது, அழுதுகொண்டே இந்த புகார்களை சொல்கிறான். 'டீச்சர்கிட்ட, 'கம்ளயிண்ட்' பண்ண வேண்டியதுதானே...' என கேட்டால், 'எதுக்கு பார்த்தாலும் அடுத்த பசங்கள புகார் பண்ணிக்கிட்டே இருக்கியா...'ன்னு, அவர்களும் நாலு சாத்து சாத்துவதாக கூறுகிறான்.
'பள்ளியில் விசாரிக்கிறோம்...' என்றால் மறுத்துவிடுகிறான். இந்த பிரச்னையால், 'ஸ்கூலை மாத்திடு' என கூறிக் கொண்டே இருக்கிறான்.
'அடிப்பவனை பதிலுக்கு, திருப்பி அடிக்க வேண்டியதுதானே...' என்றால், 'எருமை மாடு மாதிரி இருக்குறவனுங்கள, நானெப்படி அடிக்குறது...' என்கிறான்.
பிறரிடம் அடி வாங்குவது என் மகனின் முகராசியா... என்ன பண்ணலாம் பிளாரன்ஸ். நல்ல வழி ஒண்ணு சொல்லுங்க...
அன்புள்ள அம்மா...
சக மாணவர்களிடம் அடி வாங்குவதாக கூறும் மகனின், தலையிலோ, முதுகிலோ, தொடையிலோ காயங்களை பார்த்திருக்கிறீர்களா...
அடித்த மாணவர்களை அடையாளம் காட்டச் சொல்லி, 'நீங்க ஏம்ப்பா அடிக்குறீங்க... ஏடாகூடம் ஆயிட்டா, குற்றவாளி ஆய்டுவீங்கேளப்பா... மாதம் ஒருமுறை நான் வருகிறேன். உங்க ஆவலாதிகளை என்னிடம் கூறுங்கள்...' என, வலியுறுத்தலாமே.
பள்ளி ஆசிரியையிடம் இதம்பதமாக கூறி, அடிப்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக தள்ளி அமர வைக்கலாமே.
நான்கு பள்ளிகளிலும், சகமாணவர்கள் அடிப்பதாக ஒரே வகை புகார் கூறுவது அசாதாரண விஷயம். கீழ்கண்ட விஷயங்களை கவனிக்கவும்.
* மகன் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்கிறானா
* தினமும் காலையில் எழுந்து விருப்பமாக பள்ளி செல்கிறானா
* தெருச்சிறுவர்களிடம் சண்டை போடுவானா
* சண்டை போட்டால் அடிப்பானா, அடி வாங்குவானா
* மகன் முன், கணவருடன் வாய், கை சண்டை போடும் பழக்கம் உங்களுக்கு உண்டா
* பொய் பேசும் பழக்கம் அவனிடம் உள்ளதா
* விடுமுறை நாட்களில், யாருடன் சேர்ந்து விளையாடுகிறான்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கவும்.
எனக்கு என்னவோ, 'அவன் யாரிடமும் அடி வாங்குவதாக தெரியவில்லை. இவன் தான் சக மாணவர்களை தாக்குறான்...' என, கருதுகிறேன்.
மகன் சொல்வதெல்லாம், அக்மார்க் உண்மை என, நம்பக்கூடாது. தீர விசாரிப்பதே நல்லது. எனக்கு தெரிந்து, 90 சதவீத மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் செய்வது படு அலர்ஜியான விஷயம். அத்துடன் கண்டிப்பான பள்ளி என்றால் எட்டிக்காய்.
அவன் பேச்சை கேட்டு நகரின், 40 பள்ளிக்கூடங்களுக்குமா மாற்றுவீர்கள். மகன் சொல்வது உண்மை என்றால், சகமாணவர்களை நாசுக்காக கண்டிக்கலாம்; சக பெற்றோருடன் பேசி சமாதானப்படுத்தலாம்.
மகன் சொல்வது பொய் என்றால், பெரியவனான பின், விரும்பத்தகாத சமூக விளைவு ஏற்படும்; பொய்யன் என சமூகம் அவனை இகழும்.
இளமையில் படிப்பு என்பது கடமை. 'படிப்புதான், உன்னத நிலைக்கு உயர்த்தும். படிக்காவிட்டால் குப்பையாக வீசப்படுவாய்-' என அறிவுரை கூறவும். வீட்டுபாடம் செய்வதில் அவனுக்கு உதவவும். நல்ல மனநல ஆலோசகரிடம் அழைத்து போய் அறிவுரை கொடுக்கவும்.
- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.
