PUBLISHED ON : ஆக 09, 2019

அன்புள்ள மெடோஸ் ஆன்டிக்கு...
கல்லுாரியில், முதுகலை கணிதம், முதல் ஆண்டு படிக்கும் மாணவி; பள்ளியில் துவங்கி, இன்று வரை, படிப்பில் நான் தான் முதலிடம். மிக நன்றாக பாடுவேன். கர்நாடக இசையை முறையாக பயின்று, இளநிலை வகுப்பில், முதலிடம் பெற்றுள்ளேன்; படிப்பும், பாட்டும் என் இரு கண்கள்.
இப்ப என் பிரச்னையை கூறுகிறேன்...
இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது தான், வெற்றிக்கு அடிப்படை என்பது புரிகிறது. ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை; என்னைச் சுற்றி இருப்பவர்களை, தெளிவாக எடை போட தெரியவில்லை.
யாரிடம், என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை தெரியாமல் குழம்புகிறேன். பலவித சூழ்நிலைகளைப் புரிந்து, அதற்கேற்ப நடக்கும் சாமர்த்தியம் மிகவும் குறைவு; அந்த வாழ்வியல் கலையில் மிகவும் பின்தங்கியிருக்கிறேன்.
என் உறவினர், நண்பிகள் என, பலரும் இது பற்றி அறிவுரை கூறுவர். தவறு செய்யும் போது, உரிமையாக கண்டித்து, புத்திமதி சொல்வர். அந்த நிமிடம், அதை தெளிவாகப் புரிந்து கொள்வேன். ஆனால், அதே தவறை திரும்பவும் செய்கிறேன்.
படிப்பிலோ, பாட்டிலோ ஏற்படும் பிழைகளை திருத்திக் கொள்வதைப் போல், வாழ்க்கை பாடத்தை சரியாக திருத்த முடியவில்லை. இதற்காக, மிகவும் வருந்தி, தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறேன். நான் வாங்கும், பரிசுகள், கை தட்டல், பாராட்டு யாவும் நொடிப் பொழுதில் மறந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறேன்.
நான், நிஜ வாழ்க்கைக்கு தகுதியானவளாக மாற, உங்கள் அறிவுரை தேவை.
அன்புள்ள மகளுக்கு...
படிப்பிலும், இசையிலும் சிறந்து விளங்கும் நீ, வாழ்க்கையில், இன்னும், குழந்தையாக, பக்குவப்படாமல் இருக்கிறாய். வெளிப்படையாக, விகல்பமின்றி பேசுவது, உன் பலம்; அதுவே, பலவீனமும் கூட.
தினமும், பலரை சந்திக்கிறோம்; அவர்கள் ஒரே மாதிரியாகவோ, ஒரே கருத்து உள்ளவர்களாகவோ இருப்பதில்லை.
அதனால், அவரவர்களுக்கு ஏற்ற வகையில் பேசுகிறோம்; நமக்கு நன்கு பழக்கமான அலுவலக பணியாளரை, உரிமையுடன் பெயர் சொல்லி அழைப்போம்; அதுபோல, உயர் அதிகாரியை அழைக்க முடியுமா...
அதனால், மனிதர்களுக்கு ஏற்ப, அணுகுமுறையை மாற்றிக் கொள். ஒருவரிடம் பேசும் போது, நிதானமும், எச்சரிக்கை உணர்வும் தேவை; கவனமாக இருக்க வேண்டும்.
படுக்க சிறிது இடம் கொடுத்தால், மடத்தைப் பிடிக்கும் ஆசாமிகள் நிறைந்த உலகம் இது; நீ தான், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒருவரிடம் கருத்து மோதல் ஏற்படும் போது, நயமாக மனம் புண்படாதவாறு, வாதத்தை எடுத்து வைத்தால், அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்வர்.
வாழ்க்கையில், அனுபவமே சிறந்த பாடம்; அதை படித்த பின் தான், பலர் பக்குவபடுகின்றனர். சிலர், அறிவுக் கூர்மையால், வாழ்க்கையை பக்குவமாக எதிர்கொள்கின்றனர்.
இடம், பொருள், அறிந்து செயல்பட்டால், அதற்கு கிடைக்கும் பலனே தனி. யாரிடம் என்ன பேச வேண்டும்; எதை பேசக் கூடாது என்பதை தீர்மானிக்க பழகிக்கொள். உன் திறன் அறிந்து, நன்கு யோசித்து, அளந்து பேசு.
'சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை...' என்ற கவியரசரின் நிதர்சன வரிகளை நினைவில் கொண்டு, வாழ்க்கையை வெற்றிகொள். வாழ்த்துகள் மகளே!
- அன்புடன், மெடோஸ்.
