
அன்புமிக்க பிளாரன்ஸ்...
என் வயது 35; சத்துணவு கூடத்தில், ஆயாவாக பணிபுரிகிறேன். கணவர், தனியார் நிறுவனத்தில், கணக்கராக பணிபுரிகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.
மூத்தவனுக்கு, 12 வயது; 6ம் வகுப்பு படிக்கிறான். இளையவளுக்கு, 10 வயது; 4ம் வகுப்பு படிக்கிறாள். இருவருமே ஒழுங்கீனத்தின் மொத்த உருவங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தால், தலையணைகளும், போர்வைகளும் அலங்கோலமாய் கிடக்கும். முரட்டுத்தனமாக வற்புறுத்தாவிட்டால், பல் துலக்க மாட்டார்கள்; குளிக்க மாட்டார்கள்; தலை வார மாட்டார்கள்.
அழுக்கு துணிகளை வீடு முழுக்க போட்டிருப்பர்; கசங்கிய உடை அணிந்து பள்ளிக்கு செல்வர்; தேனீர் குடித்தால், டம்ளரை கழுவாமல் அப்படியே போட்டு வைத்திருப்பர்.
சாயங்காலம் மண்ணில் விளையாடி, அப்படியே வீட்டுக்குள் நுழைவர்; பாட புத்தகங்களும், நோட்டுகளும், அட்டை போடப்படாமல் இருக்கும். வீட்டுக்குள் இறைந்து கிடக்கும் அழுக்கு துணிகளின் மீது தவழ்ந்து விளையாடுவர்.
எவ்வளவு கண்டித்தாலும் திருந்த மாட்டேன் என்கின்றனர். இவர்களை திருத்த ஒரு வழி சொல்லுங்கள்.
அன்புள்ள அம்மா...
பிரபஞ்சமே, ஒழுங்கீனத்திலிருந்து ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல வீடுகளில், குழந்தைகள் ஒழுங்கீனமாகதான் இருக்கின்றனர். அவர்களின் அழகிய முன்மாதிரி பெற்றோர் தான்.
பெற்றோரின் உணவு விருப்பம், நடத்தை, பழக்க வழக்கங்களை தான் குழந்தைகள் நகலெடுக்கின்றனர். உங்கள் குறை உங்களுக்கு தெரியாது; உங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள். ஒழுக்கமாக சுயகட்டுபாட்டுடன் இருங்கள்; குழந்தைகள் முன், மரியாதையான வார்த்தைகளை பேசுங்கள்.
குடும்பத்தின் நான்கு அங்கத்தினர்களும், காலை 6:00 மணிக்கெல்லாம் எழ வேண்டும். அலாரம் வைத்து எழுந்தாலும் சரிதான்; எழுந்தவுடன், படுக்கைகளை தட்டி போட்டு, போர்வைகளை மடித்து வையுங்கள்.
நான்கு நாட்கள், ஒரு வாரம் குழந்தைகள் அலட்சியமாக இருப்பர்; அதன்பின், குற்ற உணர்ச்சி மிகுந்து, படுக்கையை ஒழுங்கமைத்து, போர்வைகளை மடித்து வைப்பர். குழந்தைகள் உபயோகிக்கும் பற்பசை வித்தியாசமான வண்ணங்களாக இருக்கட்டும்; பொம்மை படம் போட்ட, 'டூத் பிரஷ்' வாங்கி கொடுங்கள்.
காலை எழுந்தவுடன் பல் துலக்குங்கள்; அவர்களும் துலக்குவர். வாரத்துக்கு ஒரு நாள் தலைக்கு குளிக்கட்டும்; தினமும் உடலுக்கு குளிக்கட்டும்.
ஒவ்வொருவருக்கும் தனி சோப்; தனி பூத்துவாலை; குளிக்க சுடுதண்ணீர் கேட்டால் போட்டுக் கொடுக்கவும். சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுங்கள். சாப்பிட்ட தட்டையும், தேநீர் குடித்த டம்ளரையும் கழுவி வையுங்கள். உடுத்தி களைந்த துணிகளை அதற்கான கூடையில் போடுங்கள்.
விடுமுறை நாளில், கை, கால் நகங்களை வெட்டி குப்பையில் சேருங்கள். வீட்டு சாவிகளை தொங்க விட, பிரத்யேகமான ஸ்டாண்ட் பொருத்துங்கள். விடுமுறை நாளில், துணிகளை துவைக்க கற்று கொடுங்கள்.
எதை குழந்தைகளுக்கு அறிவுரையாக கூறுகிறீர்களோ, அதை முன்னோடியாக நீங்களே சிறப்பாக செய்யுங்கள். வீட்டிலேயே, 'அயர்ன்பாக்ஸ்' வைத்து ஆடைகளை தேய்க்கக் கற்றுக் கொடுக்கவும்.
மகள், மகனுடன் மனம் விட்டு பேசவும். சுய சுத்தம் பேணி, வீட்டையும் துாய்மையாய் பராமரியுங்கள். அது, நால்வரின் கூட்டு பொறுப்பு என்பதை உணர்த்துங்கள்.
எதற்கும் திருத்த மறுத்தால், இருவரையும் எதாவது உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்கவும். அங்கு நிலவும் ராணுவக் கட்டுப்பாடு முழுமையாக திருத்தி விடும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

