
அன்புள்ள அம்மா...
நான், 14 வயதான சிறுமி; 8ம் வகுப்பு படிக்கிறேன்; கொரியன் மொழி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கற்றுக் கொள்ள புத்தகங்களை, எங்கள் ஊர் முழுவதும் தேடி விட்டேன்; கிடைக்கவில்லை.
கொரியன் மொழி கற்றுக் கொள்ள புத்தகங்கள் எங்கு கிடைக்கும், எவ்வாறு வாங்குவது... விபரங்களை தயவுசெய்து தெரிவியுங்கள்!
அன்பு மகளே...
கொரியன் திரைப்படங்களையும், கொரியன் நெடுந்தொடர்களையும் பார்த்து கொரியன் மொழி கற்றுக்கொள்ளும் ஆசை வந்திருக்கும் என நம்புகிறேன்.
கொரியன் திரைப்பட கதைகளை திருடி, நிறைய ஹிந்தி தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன.
கொரியன் மொழி கற்றுக்கொள்வது வேலை வாய்ப்பை அதிகரிக்கிறது; உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் கொரியன், 16வது இடத்தை வகிக்கிறது.
வடகொரியா, தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ மொழி கொரியன் ஆகும். இது, எட்டு கோடி பேரால் பேசப்படுகிறது.
'கற்றுக் கொள்ள மிகவும் சிரமமான மொழிகளில் ஒன்று கொரியன்...' என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகில் முடியாதது என்று ஏதுமில்லை; கொரியனை மூன்றே மாதங்களில் கற்றுக் கொள்ளலாம்.
இந்த மொழி கற்க, லிங்கோடீர், டியோ லிங்கோ, மெம்ரைஸ், ஹலோ டாக், கொர்லிங்க் டாக் டு மீ, மாண்ட்லி, லேர்ன் கொரியன் பிரேசஸ் அண்ட் வெர்ட்ஸ், டெங்குகோ ஹாங்குல், டோங்சா மற்றும் ட்ராப்ஸ் போன்ற அலைபேசி செயலிகள் உதவும்.
கொரியன் எழுத்து வடிவத்தை, 'ஹங்குதல்' என்பர்; இந்த மொழியில் ஆங்கிலம் அதிகம் கலந்திருக்கும். அதனால், கேலியாக, 'கொங்கிலீஷ்' என்பர். கொரியன் மொழியில், 24 எழுத்துகள் உண்டு.
அவற்றில், 10 மெய்யெழுத்து; 14 உயிரெழுத்துகள்.
மெய்யெழுத்துகள் பேசுபவரின் வாய் அமைப்பை ஒத்திருக்கும்; உயிரெழுத்துகள், பூமி, சூரியன், மனிதனை குறிக்கும்.
கொரியனில், 'இசட்' உச்சரிப்பு எழுத்து இல்லை; பேசும் போது, 'யோ' உச்சரிப்பு மிகவும் நல்லது; எழுத்து வடிவம் ஒலி குறிப்பு மிக்கது.
இந்த மொழியை கற்றுக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவும்.
* கொரியன் ஹங்குதல் எழுத்து வடிவத்தை முழுமையாக கற்றுக்கொள்ளவும்
* கொரியனுக்கும், ஆங்கில மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சரியாக அறியவும்
* கொரியன் பாப் பாடல்களை கேட்கவும்
* கொரியன் மொழி கற்றுக்கொள்ளும் சீனியர்களிடம் அதிகம் பேசவும்
* கற்பதை ஜாலியான மனோபாவத்துடன் அணுகவும்
* தினமும் கற்றல் உதவி மின்னட்டைகளை வாசிக்கவும்
* கடின வார்த்தைகளை, எளிய வார்த்தைகளாய் பிரித்து புரிந்து கொள்ளவும்
* கொரியன் மேட் சிம்பிள், கொரியன் பார் பிகினர்ஸ், இன்டகிரேடட் கொரியன், கம்ப்ளீட் கொரியன், எலிமென்டரி கொரியன், மை வீக்லி கொரியன், வொக்கா பிலரி கொரியன், ப்ரம் ஜீரோ, 500 அடிப்படை கொரியன் வினைச்சொற்கள், ஹங்குல் மாஸ்டர் போன்ற புத்தகங்களை வாங்கி வாசிக்கவும். இவை, அமேசானில் கிடைக்கும்
* தென் கொரிய தலைநகர் சியோலில், 'டாக் டூ மீ இன் கொரியன்' என்ற இணையதளம் உள்ளது; இதன் மூலம் கொரியன் கற்றுக்கொள்ளலாம்
* சென்னையில், கொரியன் கிளாஸ் என்ற அமைப்பு, 'எண்.166, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10' என்ற முகவரியில் இயங்குகிறது. இது ஆன்லைன் மூலம் கொரியன் மொழிக் கற்று தருகிறது. இதன் தொலைபேசி எண்: 98408 33186.
கொரியன் கற்றுக்கொள்ள விரும்பும் அன்பு செல்லமே... உன் வாழ்க்கை வளம்பெற வாழ்த்துகள்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

