
அடுக்குமாடி கட்டட சுற்றுச்சுவர் மீது ஒரு சோம்பேறி பூனை உல்லாசமாக படுத்திருந்தது. சுவரின் அருகில் வேப்ப மர நிழலில், இளைப்பாறிய தெரு நாயிடம், ' நாக்கை தொங்க போட்டு மூச்சு வாங்குகிறாயே... நடந்து களைத்து விட்டாயா...' என்று கேட்டது.
கேலி செய்த பூனையை, 'எடை போட்டால் அரை கிலோ கூடத் தேற மாட்டாய்... தேவையின்றி சீண்டாதே; உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்...' எனக் கோபத்துடன் கூறியது நாய்.
சினம் கொண்டு மாட்டு தொழுவத்துக்குள் ஓடியது பூனை.
அது, பசு மாட்டுக்கு தீனி போடும் நேரம்.
எஜமானை காணவில்லை.
பரிதவிப்பில், 'அம்மா...' என கத்தியது பசு.
இதைக் கேட்டதும், 'வேளை தவறாமல் சாப்பிடுகிறாய்... மலைப் போல் உடல் கொழுத்திருக்கிறது... ஆனாலும் பலநாள் பட்டினி கிடந்தது போல், காது செவிடாகும் வகையில் அலறுகிறாயே...' என்று திமிராக கேட்டது பூனை.
பற்களை, 'நர... நர...' என கடித்த பசு, 'ஒரே முட்டில், உன் குடல் வெளியே சரிந்து விடும்; பேசாமல் ஓரமாகப் போய் விடு...' என கொதித்தது.
பயந்த பூனை, குலை நடுங்கியவாறு திண்ணையில் படுத்தது.
அதில் சில எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. அதில் ஒன்று, பூனையின் காதுக்குள் புகுந்துவிட்டது.
ஆத்திரத்துடன், 'ஏய் எறும்பே... சிறிது நேரம் கூட துாங்க விடாமல் தொந்தரவு செய்கிறாயே...' என சீறியது பூனை.
'நாங்கள் சுறு சுறுப்பானவர்கள்; உண்ணும் உணவு உடலில் ஒட்ட வேண்டும் என்பதற்காக உழைத்து வாழ்கிறோம்; உறங்கி வழிபவரையும், வீணாக பேசுகிறவரையும் கண்டால் பிடிக்காது. இது, திருமகள் வாசம் செய்யும் இல்லம்; உன்னை போன்ற சோம்பேறிக்கு இடம் இல்லை...' என்றது எறும்பு.
வெட்கி தலைகுனிந்து, 'இனி உழைத்து தான் உண்ணவேண்டும்' என்ற முடிவுடன், வேட்டைக்கு புறப்பட்டது பூனை.
செல்லங்களே... உழைத்து வாழப் பழகுங்கள்.
பி.கனகராஜ்

