PUBLISHED ON : நவ 06, 2021

அன்பு மிக்க ஆன்டி...
என் வயது, 17; பிளஸ் 2 படிக்கும் மாணவி. சொந்தமாக மனை வாங்கி, தனி வீடு கட்டும் கனவை என் தந்தை நிறைவேற்றியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன், 1,200 சதுர அடி மனை வாங்கி, வங்கிக் கடன் பெற்று, 975 சதுர அடியில், இரட்டை படுக்கையுடன் கூடிய வீடு கட்டியுள்ளார். அதில் அழகான மொட்டை மாடியுள்ளது.
சமீபத்தில் மாடியில் தோட்டம் அமைப்பது பற்றி பேசினாள் என்தோழி; மொட்டை மாடியில், காய்கறி தோட்டம் அமைக்க ஆசைப்படுகிறேன்; தகுந்த ஆலோசனை வழங்குங்கள் ஆன்டி.
அன்புள்ள மகளுக்கு...
மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது, ஒரு வீட்டுக்கு கிரீடம் அணிவிப்பது போன்றது. மாடி தோட்டம் அமைப்பதன் மூலம், வீட்டிற்கு உள்ளேயும், வீட்டை சுற்றியும் இயற்கையாக ஜரிகை பார்டர் நெய்யலாம். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கலாம்.
மாடி தோட்டம் அமைக்க, கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
* முதலில், ஏற்கனவே மாடி தோட்டம் அமைத்து, வெற்றி பெற்றவர்களை கலந்தாலோசிப்பது நலம்
* பெங்களூருவில், ஜடாயு மொட்டை மாடி தோட்டம் வளர்ப்பு ஆலோசனை மையம் உள்ளது. அதை போல, உங்கள் ஊரில், எதாவது மையம் இருந்தால், அவர்களிடம் இடத்தை காட்டி ஆலோசனை பெறலாம்
* உங்கள் ஊரின் தட்பவெப்பநிலை, தண்ணீர், மண் வளத்தை அவதானித்து, என்ன வகை செடிகளை வளர்ப்பது என முடிவெடுக்கவும்.
சில விஷயங்களை மனதில் கொள்ளவும்...
* சூரிய வெளிச்சம் முழுமையாக தோட்டத்தில் விழ வேண்டும்
* குறைந்த அளவு செலவில் தோட்டம் அமைத்தல் சிறப்பு
* வளர்க்கும் செடிகள் நன்கு சுவாசிக்க, சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
* பூச்சி அரித்த பகுதிகளை, 'ட்ரிம்' செய்ய வேண்டும்
* செடிகளுக்கு, தேவைக்கு அதிகமாய் தண்ணீர் ஊற்ற வேண்டாம்
* சமையலறை கழிவு, காய்ந்த இலைகள், வாழைப்பழ தோல், உருளைக்கிழங்கு தோல், மாட்டு சாணம், பூஞ்சருகுகளால் இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்தலாம்
* காய்கறி செடிகளுக்கு இடையே பூஞ்செடி வளர்க்கலாம்
* அடுத்த மாடி தோட்டங்களுடன், உங்கள் தோட்டத்தை ஒப்பிட வேண்டாம்
* பூச்சிகளை விரட்டக்கூடிய லெமன் கிராஸ் போன்ற நறுமண தாவரங்களை வளருங்கள்
* ஒரே வகை செடிகள் இன்றி, சுழற்சி முறையில் வளருங்கள்
* பூச்சி தாக்குதல் இருந்தால் வேப்பெண்ணெய் தெளிப்பது சிறப்பு
* மாடி தோட்டத்தில் மாலை நேரங்களில் இளைப்பாறலாம்.
மாடி தோட்டம், கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்; ஆரோக்கியத்தை கூட்டும்; உடலில், 'செரோடினின்' சுரக்க வைக்கும்; மறதி நோயை போக்கும்; கவனத்தை குவிக்கும்; சமயம் அறிந்து செயல்படும் மனநிலையை பரிசளிக்கும்.
மாடியில் தோட்டம் அமைக்க விரும்பும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
- அன்புடன், பிளாரன்ஸ்.
