PUBLISHED ON : மார் 12, 2022

அன்புள்ள ஆன்டி...
நான், 18 வயதான இளம்பெண்; சராசரி உயரம் மற்றும் மாநிறத்தில் இருப்பேன். பிளஸ் 2 முடித்து, செவிலியர் கல்லுாரியில் பிரவேசித்துள்ளேன்.
உலகின், கவர்ச்சிகரமான பெண்ணாக மாற விரும்புகிறேன். அழகாய் இருக்கும் ஹாலிவுட் மற்றும் தமிழ் சினிமா நடிகைகளுக்கு மேலுதட்டில், முகவாயில் மச்சம் அமைந்திருக்கிறது.
எனக்கோ மச்சம் இல்லை; என்ன சாப்பிட்டால் உடலில் புதிதாக மச்சங்கள் உருவாகும்.
'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம், செயற்கையாக மச்சத்தை விரும்பிய இடத்தில் வைத்துக் கொள்ள முடியுமா...
மச்சம் பற்றி கூடுதல் தகவல்கள் கூறி, தகுந்த ஆலோசனை தாருங்கள் ஆன்டி.
அன்பு மகளே...
மச்சத்தை, ஆங்கிலத்தில், 'மெலோனோசைட்டிக் நெவஸ்' என்பர்.
மச்சம், மெலானின் நிறமிகளின் ஒழுங்கின்மை திரட்சியால் ஏற்படுகிறது. இது, கருப்பு, பழுப்பு, பிங்க் மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும்.
சில மச்சங்கள் பிறவியிலேயே தோன்றும்; சில, 10 வயதுக்கு பின், 20 வயதுக்கு பின், 30 வயதுக்கு பின் என தோன்றும்.
வெண்மை நிறத்தில் இருப்போருக்கும், சூரிய வெளிச்சத்தில் அதிகம் நிற்பவருக்கும் உடலில், அதிக மச்சங்கள் தோன்றும். ஒருவருக்கு, 50க்கும் மேற்பட்ட மச்சங்கள் இருந்தால், தோல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது.
சாதாரணமாக மச்சங்கள், 6 மி.மீ., அளவுக்கு மேல் இருந்தால், மெலனோமா புற்றுநோய் கட்டிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மச்சத்தில், ரத்தக்கசிவு இருந்தால், தோல் நோய் மருத்துவரை அணுக வேண்டும்.
ஆண்களுக்கு பின்னங்கழுத்திலும், பெண்களுக்கு கீழ் பின்னங்காலிலும் அதிகம் மச்சங்கள் இருக்கும்.
மச்ச சாஸ்திரம் என்ன சொல்கிறது என பார்ப்போம்...
* வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும்
* இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் செலவாளி என பொருள்
* நடு புருவத்தில் மச்சம் அமைந்தால் ஞானம் அதிகம்
* மூக்கில் மச்சம் இருந்தால் சினிமாவில் வெற்றி கிடைக்கும்
* வலது தாடையில் இருந்தால் அதிர்ஷ்டம்
* இடது தாடையில் இருந்தால் பெற்றோருக்கு சொத்து விரயமாகும்
* வலது காதில் இருந்தால் அதிர்ஷ்டம்
* இடது நெற்றியில் இருந்தால் உடல் உபாதை ஏற்படும்
* வலது கண்ணில் இருந்தால் கட்டாய வெற்றி கிடைக்கும்.
இப்படி எல்லாம் சிலர் கூறுவர். இவை, அறிவியல் பூர்வமான முடிவுகள் அல்ல.
இளம் வயது பெண்களுக்கு முகத்தில் இருக்கும் மச்சம் கவர்ச்சியை அதிகரிக்கும்; வயது முதிர்ந்த பெண்களுக்கு முகத்தில் இருக்கும் அதே மச்சம் அவலட்சணம் தரும்.
தேவையற்ற மச்சங்களை, கை வைத்தியம் செய்து அகற்றலாம்; ஆப்பிள் சிடார் வினிகர், அரைத்த பூண்டு, சிறிதளவு அயோடின், பைனாப்பிள், கடல் உப்பு, வெங்காய சாறு, தேயிலையை மச்சத்தில் தடவி கரைக்கலாம்.
மாதத்திற்கு ஒருமுறை கண்ணாடி முன் நின்று, உடலின் மச்சங்களை ஆய்வு செய்வது நல்லது. சினிமா நடிகையரின் மச்சங்கள் பொதுவாக செயற்கையானவை; ஸ்டிக்கர் ஒட்டியிருப்பர் அல்லது ஐப்ரோ பென்சிலால் வரைந்திருப்பர்.
சந்தையில் விற்கும், ஸ்டிக்கர் மச்சங்களை வாங்கி, நீயும் ஒட்டிக் கொள்ளலாம். குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம், மச்சம் பொருத்திக் கொள்ளலாம்; ஆனால், அது தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
கல்வி சான்றிதழிலும், பாஸ்போர்ட்டிலும் மச்சங்களை கேட்டு குறிப்பர்; மற்றபடி மச்சங்களால், 10 காசுக்கு கூட பிரயோஜனமில்லை.
மாசு மருவற்ற மஞ்சள் பூசிய முகமே அழகானது; உயர் கல்வியாலும், சேவையாலும், நீ உலகின் அழகான பெண்ணாகலாம்.
எந்த உணவை சாப்பிட்டும், உடலில் மச்சங்களை உருவாக்க முடியாது; மச்சத்தை கண்டு மலைக்காதே மயிலே!
- அன்புடன், பிளாரன்ஸ்.
