தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (140)

இளஸ் மனஸ்! (140)

இளஸ் மனஸ்! (140)


PUBLISHED ON : ஏப் 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புமிக்க ஆன்டி...

தென் தமிழக கிராமத்தில் வசிக்கும் சிறுமி நான்; வயது, 12. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறேன்.

சினிமா நடிகர்கள் மீது எனக்கு மிகப்பெரிய அபிமானம் உண்டு; என் தோழி, 'சினிமா நடிகர்களுக்கு, சிறுநீர், மலம், ஏன்... வியர்வை கூட வராது... பிறக்கும் போதே, மேக்கப் செய்து, சினிமாவில் நடிக்க அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கு, 100 பக்க வசனத்தை கூட, மனப்பாடம் செய்யும் சக்தி உண்டு! தமிழகத்தின் முதல்வராகும் ஆசிர்வாதமும் இருக்கிறது...' என்கிறாள். இது உண்மையா ஆன்டி... எனக்கு குழப்பமாக உள்ளது. தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு,

ப.அக் ஷயா.


அன்பு மகளுக்கு...

உன் தோழியின் அறியாமை, அப்பாவித்தனத்தை கண்டு வருந்துகிறேன்.

சினிமா நடிகர், நடிகையர் எல்லாம், சாதாரணமானவர்கள் தான்; அவர்களும் பசி வந்தால் சாப்பிடுகின்றனர்; தினமும், மலம் கழிக்கின்றனர்; தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ப சிறுநீர் கழிக்கின்றனர்.

வெயிலில் நின்றாலோ, அதிகம் உழைத்தாலோ அவர்களுக்கும் வியர்க்கும். மேக்கப் இல்லாத போது, 'பெர்சனாலிட்டி'யில், நுாற்றுக்கு, 30 மதிப்பெண்கள் வாங்கும் அவர்கள், மேக்கப்புக்கு பின், 80 மதிப்பெண்கள் வாங்குகின்றனர்.

நீரில் கலையாத, 'வாட்டர் புரூப்' மேக்கப் கூட உண்டு; வழுக்கை தலை உள்ள நடிகர்கள், 'விக்' அணிந்து கொள்கின்றனர்.

தொப்பை இருந்தால், 'பெல்ட்' அணிந்து வயிற்றை இறுக்கி கொள்கின்றனர்; சினிமா காட்சியை படம் பிடிக்கும் போது, வயிற்றை எக்கி கொள்கின்றனர்.

இப்போது, நடிகர்களின் முக சுருக்கம், உடல் தடிமனை மறைத்து, இளமையாக காட்டும் உத்திகள் பல வந்து விட்டன.

மேக்கப் இல்லாத வெள்ளை தாடியில் நடிகர் ரஜினிகாந்தை நீயும், உன் தோழியும் பார்த்தது இல்லையா...

நுாற்றில், 90 சதவீத நடிகர்களுக்கு ஞாபகசக்தி மிகவும் குறைவு.

நடிக்கும் போதே, கேமராவுக்கு தெரியாமல், சினிமா உதவி இயக்குனர் ஒருவர் வசனங்களை வாசிப்பார். அவர் கூறுவதை கிளி பிள்ளை போல ஒப்பிக்க வேண்டியது தான்.

ஒரு பக்கம் வரும் காட்சியைக் கூட, 'ஷாட் ஷாட்' களாய் பிரித்து எடுப்பர். ஆனால், விதி விலக்காக மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், 30 பக்க வசனங்களை ஒரு சில முறை படித்து, உணர்ச்சி பூர்வமாய் மாடுலேஷனுடன் ஒப்பிப்பாராம்.

அவர் கூட கட்சி துவங்கி, அரசியலில் தோற்றார்.

நம் நாட்டில் நடப்பது மக்களாட்சி; ஜனநாயக முறைப்படி ஓட்டு போட்டு, யாரை வேண்டுமானாலும் முதல்வராக்கலாம்.

ஒருவர் ஆக் ஷன் நடிகராக பிரகாசிக்க, ஆயிரம் பேர் பின்னணியில் உழைக்கின்றனர்.

நடிகர் பேசும் வசனம் யாரோ எழுதி கொடுத்தது; சண்டைக் காட்சியில் நடிகர் குத்துவது போல நடிக்க, 100 ஸ்டண்ட் நடிகர்கள் பொய் ரத்தம் பூசி விழுகின்றனர்.

ஆபத்தான காட்சியில் நடிகருக்கு பதில், 'ஸ்டண்ட் டபுள்' நடிப்பார். ட்ரிக் சாட், அனிமேஷன், மார்பிங், சவுண்ட் எபக்ட், இசை, வசனம், பாடல்கள் எல்லாம் சேர்த்து, ஒருவரை சூப்பர் ஸ்டாராக்கி விடுகிறது.

சினிமாவை வெறும் பொழுது போக்காய் பார்க்க பழக வேண்டும்; அதன் மாயையில் சிக்கிக் கொள்ள கூடாது.

முறையான கல்வியறிவுடன் கூடிய, விழிப்புணர்வே இந்திய அரசியலை மேம்படுத்தும்.

ஒன்று தெரியுமா உனக்கு...

எல்லாரும் நடிகர்கள் தான்... நாம் வாழ்க்கையில் நடிக்கிறோம்; நடிகர்கள், சினிமாவில் நடிக்கின்றனர்.

உண்மையில், சினிமா நடிப்பவர்களை விட, நாமே சிறந்த நடிகர்கள்; ஒவ்வொரு நாளும், தினுசு தினுசான முகமூடிகள் அணிந்து நடிக்கிறோம்!

சினிமா மோகத்தை கொன்றொழித்து வாழ்க்கையில் முன்னேற பழகுங்கள் செல்லங்களே!

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us