PUBLISHED ON : ஏப் 09, 2022

பஞ்சமுகி கிராமத்தில் வசித்தான் பஞ்சாமி. கடைந்தெடுத்த கஞ்சன்; எச்சில் கையால், காக்கை விரட்ட மாட்டான்.
ஒரு நாள் -
'அம்மா... இன்னொரு கவளம் சாதம் போடுங்க...'
பசியால் வாடிய பஞ்சாமியின் மகன் கேட்டான்.
இதை கவனித்த பஞ்சாமி, 'வயிறு புடைக்க சாப்பிட வேண்டுமா; இங்கே, பணம் கொட்டியா கிடக்கு. அரை வயிறு சாப்பிட்டா போதும்; எழுந்து போ...' என விரட்டினான்.
அவன் மனைவி உடுத்திக் கொள்ள, உருப்படியான புடவை இல்லை. எப்போதும் கிழிசல், நைந்த புடவையுடன் இருப்பாள்.
கஞ்சனாக இருந்த பஞ்சாமி ஒருநாள் இறந்தான்.
எமலோக சபையில் நிறுத்தப்பட்டான்.
'பஞ்சாமி புண்ணிய ஆத்மா... சொர்க்கத்தில் இடம் தந்து, அமரச் செய்யணும்...'
கணக்கு வாசித்தார் சித்திர குப்தர்.
'கஞ்சன், படுபாவி... இவனுக்கு சொர்க்க பதவியா... என்ன உளறுகிறீர்...'
கடிந்தார் எமதர்மர்.
'பஞ்சாமி கஞ்சன் தான்; ஆனால், பூலோகத்தில் பக்கத்து வீட்டு நண்பருக்கு, உதவி செய்துள்ளான்...'
'அப்படி என்ன பேருதவி செய்துவிட்டான்...'
'பூலோகத்தில், அவன் நண்பனின் தாய் இறந்தாள்; பணம் இல்லாமல் உடலை எரியூட்ட முடியாமல் தவித்தனர்... கர்ம காரியங்கள் செய்ய ஏராளம் பணம் தந்து, சமயத்துக்கு உதவி செய்தான் பஞ்சாமி...
'இதற்கு ஏழெழு ஜென்மத்துக்கும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளான் நண்பன்... அதை கேட்ட பஞ்சாமி, 'பிறந்ததும், என் தாய் மரணம் அடைந்து விட்டார்; குழந்தையாக இருந்ததால், தகனம் செய்ய கொடுத்து வைக்கல; அதனால், உன் தாயின் ஈமச்சடங்குக்கு உதவி செய்தேன். அதை என் தாய்க்கு செய்ததாக கருதி கொள்கிறேன்' என பதில் சொல்லியிருக்கிறான்...
'பெற்றெடுக்காத தாய்க்கு, இறுதி காரிய செலவு செய்பவன் புண்ணியவான்; அந்த வகையில், சொர்க்கத்தில் இடம் பெற தகுதி உள்ளவன் பஞ்சாமி...'
எடுத்துரைத்தார் சித்திரகுப்தர்.
'சரி... அடுத்த வழக்கை எடு...' என்றார் எமதர்மர்.
'இதோ நிற்கும் மன்னன்... பூலோகத்தில் கஷ்டப்பட்டவருக்கு பேருதவி செய்தான். குழந்தைகளுக்கு, புத்தகம் வழங்குவதில் துவங்கி, படிப்பு செலவுகள் ஏற்பது போன்ற சமூக தொண்டு ஆற்றியுள்ளான்...
'ஏழைகளுக்கு வேலை வாங்கி தந்தான்; முதிர் கன்னியருக்கு, திருமணம் முடித்து வைத்தான்...
'ஆனால் மகாபாவி, மனைவி பேச்சை கேட்டு, வயதான தாயாரை, முதியோர் இல்லத்தில் சேர்த்தான். இறந்த தாயின் உடலை பார்க்க மறுத்தான்... வசதி வாய்ப்பு, தெம்பு, திராணி இருந்தும், பெற்ற தாய்க்கு கர்ம காரியம், ஈமச்சடங்கு செய்யவில்லை. இவனை நரகத்திற்கு அனுப்பி, வேதனை அனுபவிக்க உத்தரவு இடுங்கள்...' என்றார் சித்திர குப்தர்.
'அப்படியே ஆகட்டும்...'
கட்டளை பிறப்பித்தார் எமதர்மர்.
குழந்தைகளே... பெற்ற தாயை மதித்து பாதுகாப்போம்!
- அ.ராமன்
