PUBLISHED ON : ஏப் 09, 2022

சகாரா பாலைவனம்!
சோலையாக இருந்து, உலகின் மிகப்பெரிய பாலைவனமாக மாறியது சகாரா. ஆப்ரிக்காவின் வட பகுதியில், 94 லட்சம் சதுர கி.மீ., பரப்பில் உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, சாட், எகிப்து, மேற்கு சகாரா, லிபியா, மாலி, முருட்டானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனுசியாவில் பரந்து விரிந்துள்ளது.
மொத்த பரப்பில், 30 சதவீதம் மட்டுமே மணல் மூடி உள்ளது. சரளைக் கற்கள், 70 சதவீத இடத்தில் உள்ளன.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், பூமி முழுதும், பனிக்கட்டியே சூழ்ந்து இருந்தது. பருவ நிலை மாற்றத்தால், பனிக்கட்டி உருகிய இடங்களில், தாவரம், புல், பூண்டுகள் முளைத்தன; உயிரினங்கள் தோன்றின.
சகாரா நிலப்பரப்பு, 6,000 ஆண்டுக்கு முன் வரை செழிப்பாக இருந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் அங்கு காற்று அழுத்தம் குறைய துவங்கியது. இதனால் மழை பொழிவு குறைந்தது.
குறைந்த காற்று, சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தால், அங்கு வெப்பம் அதிகரித்தது. நீர் நிலைகள் வற்றி, தாவரங்கள் கருகி, உயிரினங்கள் அழிந்தன. பாலைவனம் உருவானது.
அது சோலைவனமாக இருந்ததற்கு சாட்சியாக டைனோசர், முதலை, வன விலங்குகளின் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன. மலைகளில், பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. பழங்காலத்தில் மனிதர்கள் வசித்ததற்கான ஆதாரம் இது.
சகாராவில் நீராதாரம் உள்ள பகுதிகளில் தற்போது, 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். அதில், 20 லட்சம் பேர் நாடோடிகளாக சுற்றித் திரிகின்றனர்.
இங்கு வெப்பம் சராசரியாக, 100 முதல், 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். ஜூலையில் 116 டிகிரிக்கு மேல் நிலவும்; சில நேரம், 130 டிகிரி வரை அதிகரிக்கும்.
சகாரா, அசிசியா பகுதியில், 136 டிகிரி வெப்பம், 1922ல் பதிவாகியிருந்தது. இதுதான், இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை. இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவும்.
கோடை முடியும் நேரத்தில், அல்ஜீரியா பகுதியில் அதிகமாக குளிர் இருக்கும். அங்கு, 1979ல் வீசிய பனிப்புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
சகாராவில் சராசரியாக ஆண்டுக்கு, 25 மி.மீ., மழை பொழிகிறது. அதிகபட்சமாக, 250 மி.மீ., வரை பெய்வதுண்டு; பல பகுதிகளில் முற்றிலும் மழையில்லை.
கடும் வெப்பம் நிலவினாலும், இங்கு 2,800 வகை தாவரங்கள் வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்கள் தான் அதிகம். 70 வகை விலங்குகள் வசிக்கின்றன. அவற்றில், 20 பாலுாட்டி வகையை சேர்ந்தவை. சிறுத்தை, மான், முயல், காட்டு ஆடு, காட்டு நாய், நரி, தீக்கோழியும் காணப்படுகின்றன.
பாலைவனத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. அப்போது, புழுதி காற்று ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்தை தாக்கும்.
உலகிலேயே பெரிய நைல்நதி சகாரா பாலைவனத்தை ஊடுருவி பாய்கிறது. பல ஆறுகள் பாலைவன மணல் பகுதியில் ஓடி அங்கேயே மறைகின்றன. இவற்றில், ஐந்து ஆறுகள் மிகப் பெரியவை. அவை ஓடும் பகுதி சோலையாக காட்சியளிக்கிறது.
சகாராவில், செம்பு, இரும்பு தாதுகள் அதிகம் உள்ளன.
பூமியின் தென்முனையான அன்டார்டிகாவின் மொத்த பரப்பளவு, 1.38 கோடி சதுர கி.மீ., வெப்பம் அதிகரிப்பால், பனி உருகி பரப்பளவு சுருங்கி வருகிறது. அதே நேரம், சகாரா பாலைவன பரப்பு விரிவடைகிறது.
இதே நிலை நீடித்தால், சகாரா பாலைவனம் மேலும் பெரிதாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு
