PUBLISHED ON : ஜூலை 01, 2023

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 17; பள்ளியில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. பள்ளி நேரம் தவிர, தமிழ் திரையிசை பாடல்கள் கேட்டு ரசிப்பேன்.
திரைப்படங்களில், சோகம், சந்தோஷ நிகழ்வுகளுக்கு ஏற்ப, பின்னணி இசை வருவது போல, நிஜ வாழ்க்கையிலும், பின்னணி இசை வந்தால் எப்படி இருக்கும்.
உயிரினத்தை படைக்கும் போதே, இறைவன் பின்னணி இசை ஒலிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கலாமே என்பது தான் என் கேள்வி.
பதில் சொல்லுங்க ஆன்டி...
இப்படிக்கு,
ஆர்.கிருஷ்ணலட்சுமி.
அன்பு மகளே...
திரைப்படம் என்பது, 120 - 150 நிமிடங்கள் திரையில் தோன்றும் கேமரா பதிவு காட்சி தொகுப்பு. இதில், நாடகத்தனமும், மிகைப்படுத்தலும் நிறைந்திருக்கும். நிஜ வாழ்வில் நடக்கும் சலிப்பூட்டும் விஷயங்களை, திரைப்படத்தில் கத்தரித்திருப்பர்.
ஒரு திரைப்படம், இயக்குநரின் பார்வையையும், விருப்பத்தையும் பொறுத்து காட்சிகளாய் விரியும். திரைப்படத்தில், கதாநாயகன், வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கும்.
நிஜ வாழ்க்கையில், மனிதர்களை அப்படி தனித்தனியாக பிரிக்க முடியாது.
திரைப்படத்தில், ஒரு நபர், சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருப்பார். ஆனால், நிஜ வாழ்க்கையில், சீரற்ற குழப்பமான நிகழ்வுகள் கும்மியடிக்கும்.
திரைப்படங்களில், மகிழ்ச்சி, சோக காட்சிகளை உணர்ச்சிபூர்வமாக்க பின்னணி இசை கோர்த்திருப்பர்.
பின்னணி இசை அமைக்க, நுாற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் ஒருங்கிணைந்திருப்பர்.
திரைப்படத்தில், ஒரேயொரு கதாநாயகன், அவன் வாழ்க்கையில் நடக்கும், நல்லது கெட்டதுக்கு பின்னணி இசை அமைத்து விடலாம்.
நிஜ வாழ்க்கையில், உலகில், 800 கோடி பேர் உண்டு. அவர்களுக்கு, தனித்தனி வாழ்க்கைகள் உள்ளன; ஒவ்வொரு மனிதருக்கும், ஒரு பின்னணி இசை ஒலிக்க செய்வது சாத்தியமா...
திரைப்படத்தில், காட்சியை உணர்ச்சிப்பூர்வமாக்க, பின்னணி இசை தேவை. நிஜ வாழ்க்கையில், சம்பவங்களை உணர்ச்சிபூர்வமாக்க மனங்கள் போதும்.
எதிராளி கூறும் ஒற்றை வார்த்தையை, கடித்து குதறி, குடும்பத்திற்குள் உறவு சிக்கல்களை ஏற்படுத்தி விடுவர், சண்டை போடும் மனிதர்கள்.
வாழ்க்கையை, திரைப்படமாக பார்க்க கூடாது. திரைப்பட முடிவில், கதாநாயகன் கூறும் ஒற்றை வார்த்தை அறிவுரையில் வில்லன் திருந்தி விடுவான்; நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பது மிகவும் அரிது.
இசை என்பது, ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை. இசையையும், இசைக்கருவிகளையும் மனிதன் பொழுதுபோக்குக்காக கண்டுபிடித்தான். இறைவன் பார்வையில், இசை சாதாரண விஷயம். அப்படி ஒரு சாதாரண விஷயத்தை, தான் படைத்த பில்லியன் வகை ஜீவராசிகளின் வாழ்க்கைக்கு பின்னணி இசையாக, ஒரு நாளும் ஓட விட மாட்டான் இறைவன். மகிமைபடுத்தப்பட்ட மனித வாழ்க்கையை, நாடகத்தனம் ஆக்க கூடாது.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.
