தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (207)

இளஸ் மனஸ்! (207)

இளஸ் மனஸ்! (207)


PUBLISHED ON : ஜூலை 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 12; பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு பூச்சிகளை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, வால் பகுதியில், மினுக்கும் மின்மினி பூச்சியை மிக பிடிக்கும்.

மனிதருக்கு, புட்டத்திலோ, தலையிலோ, மினுமினுக்கும் உறுப்பு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். மின்மினி மனிதர்களை கற்பனை செய்து பாருங்கள் ஆன்டி.

விஞ்ஞான உலகில், மின்மினி மனிதர்கள் சாத்தியமா...

மின்மினி பூச்சிகளை பற்றி சுவாரசியமான தகவல்கள் கூறுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

கண்மணி ராஜசேகரன்.


அன்பு செல்லம்...

மின்மினி பூச்சிகளின் விஞ்ஞானப் பெயர், 'லாம்பைரிடே' என்பதாகும். மின்மினி பூச்சிகளை, மின்னல் வண்டு, மிளிரும் புழு மற்றும் கண்ணாம்பூச்சி என்றும் கூறுவர்.

நீ கூறுவது போல, இவை வாலில் மினுக்காது. வயிற்றின் கீழ் பகுதியில் இருந்து, பச்சை நிற ஒளி உமிழும். மின்மினி பூச்சி, வண்டு வகையை சேர்ந்தது. இவற்றில், 2,000 வகை சிற்றினங்கள் உள்ளன.

மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் அனைத்துமே ஒளிரும்.

தென் அமெரிக்காவில் மாயர் நாகரிக புராணக்கதைகளில், மின்மினி பூச்சிகள், வான நட்சத்திரங்களுக்கு நிகராக மதித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், தென் அமெரிக்க நாடான பிரேசில் மக்கள் ஒளி ஊடுருவும் பாத்திரங்களில், மின்மினி பூச்சிகளை அடைத்து ரசித்தனர். அந்த பாத்திரத்தை, ஒரு லாந்தர் கண்ணாடி கூண்டு விளக்காக பயன்படுத்தினர்.

மின்மினி ஜப்பானிய நாடோடிக் கதைகளில் முக்கிய இடம் வகிக்கிறது. பிரேசில், பெண்கள் கூந்தலில் மின்மினியை ஒட்ட வைத்து சிகை அலங்காரம் செய்தனர்.

மின்மினி பூச்சிகள் பழுப்பு அல்லது பச்சை நிறமாக இருக்கும். நீளம் 4 - 12 மி.மீ., கடினமான தலை. கூட்டுக்கண்கள். வாயின் இருபுறமும் கொம்பு போன்ற உறுப்புகள் உண்டு; ஆறு கால்கள் உடையது. மின்மினி பூச்சியின் ஆயுள் இரண்டு மாதங்கள்.

மின்மினி கோடை காலத்தை சார்ந்தே வாழ்கிறது.

மின்மினி பூச்சிகள் ஒளிர, 'லுாசிபெரேஸ்' என்ற என்சைமே காரணம். லுாசிபெரேஸ் தடய அறிவியல் மற்றும் மருத்துவ சிகிச்சையில் பயன்படுகிறது. அமெரிக்காவின் பல மாநிலங்கள் மின்மினியை, அரசின் பூச்சியாக அறிவித்துள்ளன.

மின்மினி பூச்சி, மண்புழு, நத்தைகளை தின்னும். இரையின் மீது முதலில் மயக்க வேதி பொருளை செலுத்தும். அப்போது இரை கூழ்மமாக மாறிவிடுகிறது. கூழ்மமாக மாறிய இரையை எளிதாக குடித்து விடும். தவளையும், சிலந்தியும், மின்மினி பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளும்.

காடுகள் அழிப்பு, ரசாயன உர பயன்பாடு, காலநிலை மாற்றம், ஒலி மாசு காரணமாக, மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டியது நம் கடமை.

இனி, உன் கேள்விகளுக்கு வருவோம். மனிதருக்கு, மரபணுமாற்றம் செய்து, 'லுாசிபெரேஸ்' சுரக்க செய்து, மினுமினுக்க வைத்து விடலாம். மரபணுமாற்ற மாயாஜாலம் ஆபத்தானது. உயிரினங்களின் தனித்தன்மையை சீர்குலைப்பது. அது மனித குலத்துக்கு நல்லதல்ல என்பதை கருத்தில் கொள்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us