தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பறக்க போறேன்!

பறக்க போறேன்!

பறக்க போறேன்!


PUBLISHED ON : மே 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஆண்டுக்கு முன் -

அம்மாவுடன், ஷாப்பிங் சென்றாள் சுபா; அது, ஒரு பெரிய, பலபொருள் அங்காடி. அம்மா, உளுத்தம் பருப்பின் தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, எள்ளுருண்டை சுவைத்த படியே உலா வந்தாள். வித விதமானப் பொருட்களை, அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

டின்களை அடுக்கிக் கொண்டிருந்தவரிடம் உற்சாகமாக, 'நான் பறக்கப் போறேனே...' என்றாள்.

சுபாவின் மழலை கேட்டு, 'பலே... பலே... முதலில், இந்த கடைக்குள்ளே பறந்து காட்டு பார்க்கலாம்...' என்று சிரித்தார்.

மாட்டேன் என்று தலையை அசைத்து, பட்டுப்புடவை கட்டிய மாமி பக்கம் ஓடினாள் சுபா.

'பறக்கப் போறாயா... உனக்கு இறக்கை இருக்கா...' என்று கண் சிமிட்டியபடி கேட்டார் மாமி.

'இல்லை... ஆனால் பறப்பேன்...' என்றதை கேட்டு, வைர மூக்குத்தி ஜொலிக்க சிரித்தார் மாமி.

தக்காளி கடை பக்கம் ஓடியவளை பார்த்து, 'ஹலோ சுபா... என்ன சமாச்சாரம்...' என்று விசாரித்தார் விற்பனையாளர்.

'நான் பறக்கப் போறேன்...' பெருமையுடன் கூறினாள் சுபா.

அவர் சிரித்தபடி, 'அப்படியா... ரொம்ப சந்தோஷம்... இன்னிக்கு வர வேண்டிய, உருளைக்கிழங்கு லாரி இன்னும் வரல; கொஞ்சம் பறந்து போய், என்ன ஆச்சுன்னு பாத்து வந்து சொல்லேன்...' என்றார்.

'எனக்கு உருளைக்கிழங்கு தோட்டம் எங்கே இருக்குன்னு தெரியாது; ஆனா, என்னால் பறக்க முடியும்...' என்றாள்.

அனேகமாக எல்லாரிடமும் பறக்கப் போவதாக கூறினாள்; ஒரு தாத்தாவிடம் கூறிய போது, 'எனக்கும் பறக்க ஆசையா தான் இருக்கும்மா; நடந்து நடந்து களைச்சுப் போயிட்டேன்...' என்று சிரித்தார்.

சிலுப்பிய படி வந்த ஒரு பெண், 'அசட்டுத்தனமா உளறாதே... சின்னக் குழந்தைகளாலே பறக்க முடியாது...' என்று சிறுமி சுபாவை கடுப்படித்தாள்.

எடுத்த பொருட்களை, தள்ளுவண்டியில் ஏற்றி, பில் போடும் இடம் அருகே வந்தாள் அம்மா. வரிசையில் நின்று கொண்டிருந்தனர் பலர்.

'அதோ நிக்கறா பாருங்க... பறக்கப் போற பொண்ணு...' என்றாள் முறுவலுடன் நரைத்தலைப் பெண்.

கடை மேலாளர், 'பறக்க தெரிந்த ஒரு குட்டிப் பொண்ணு, எங்க கடைக்கு வந்திருக்காமே...' என்று, சுபாவை பார்த்து கண் சிமிட்டினார்.

'ஆமா... என்னால பறக்க முடியும்...' என்றாள் சுபா.

'ரொம்ப உயரத்துல பறப்பியா நீ...' என்று கையை உயரே துாக்கி காட்டியபடி கேட்டார் மேலாளர்.

சிடுசிடுத்த பெண், 'ஏன் இப்படி எல்லார் கிட்டயும், சொல்ல விடுறீங்க... குழந்தைக்கு உண்மையை பேச கத்துக் கொடுக்க கூடாதா...' என்றார்.

அவரை பார்த்து சிரித்தபடியே, 'அவ உண்மையைத்தான் சொல்றா; அவ பறக்கத்தான் போறா...' என்றாள் அம்மா.

கூட்டமே, சுபாவையும், அவள் அம்மாவையும் வியப்புடன் பார்த்தது.

'நிஜமாகவே பறக்கப் போறாளா...' என்று கேட்டார் மேலாளர்.

'பறவையைப் போல இல்ல... ஆனா பறக்கப் போறா...' என்றாள் அம்மா.

'ம்... இந்த சின்னப் பொண்ணால பறக்க முடியுமா...'

'முடியுமே...' என்றாள் அம்மா.

அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் சுபா குட்டியை பார்த்தனர். அந்த வினாடியே அந்த சுட்டிப் பெண், 'ஜிவ்' என்று வானில் எழும்பிப் பறப்பாள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், எள்ளுருண்டையை சுவைத்து, அமைதியாக அம்மா அருகே நின்றாள் சுபா.

கூட்டத்தின் தவிப்பை வளர்க்க விரும்பாமல், பையை திறந்து, ஒரு கவரை எடுத்து நீட்டினாள் அம்மா.

'என்னது...' என்று கரகரத்தார் மேலாளர்.

'சுபாவோட மாமா டில்லியில் இருக்கிறார்; அவரை பார்க்க ரயிலில் தான் பயணம் செய்வது வழக்கம்; இந்த முறை விமானத்தில் போறா... அதற்கான பயணச்சீட்டு...'

'ஆமா... பறந்து போகப்போறேன்...' என்றாள் சுபா.

அத்தனை பேரும் சிரித்தனர்; குழந்தை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறது.

குழந்தைகளே... கனவு காணுங்கள்... கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள்... அது உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும்.



வாண்டுமாமா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us