PUBLISHED ON : ஜூன் 20, 2014

'நான் பாஷாயில்லை என்று எப்படி இவனிடம் நிரூபிப்பது? என் அப்பாவின் வெறுப்பும், சாபமும் தான் என்னை இப்படி மரணத்துக்குள்ளாக்கு கிறது. என் அருமைச் சகோதரியையும், அம்பிகாவையும் இழந்தேன். இப்போது நானுமே மடியப் போகிறேன்' என்று கதறினான்.
மகேஷை பிடித்துக் கொண்டிருந்தவன் மெதுவான குரலில் கூறினான்.
''உன் வேஷமெல்லாம் பலிக்காது. சீக்கிரம் இந்தக் கூடாரத்தை விட்டு வெளியே வா. தலைவர் உதட்டைக் கடிக்கிறார். கை உடைவாளை நாடிப்போகிறது. இரவு முடிய உயிர்வாழ விருப்பமானால், சீக்கிரம் எங்களோடு வா...'' என்று மகேஷை இழுத்துக்கொண்டு வெளியேற முற்பட்டனர்.
அப்போது-
மூன்று பேர் ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு கூடாரத்தினுள் நுழைந்தனர்.
''உங்கள் ஆணைப் படி பாஷாவைக் கொண்டு வந்திருக் கிறோம்,'' என்று கூறி அவனைத் தலைவன் முன் தள்ளினர்.
வெளியே போய்க் கொண்டிருந்த மகேஷ் உள்ளே கொண்டு வரப்பட்டவனைப் பார்த்துத் திடுக்கிட்டான். 'அவன் தன்னைப்போலவே அச்சாக இருப்பதைக் கண்டு, ஆள் மாறாட்டம் ஏற்பட்டதில் தவறில்லை' என்று நினைத்துக் கொண்டான்.
மகேஷைப் போலவே தலைவனும் புதிய கைதியைப் பார்த்து திகைத்துப் போய், ''உங்கள் இருவரில் உண்மையான பாஷா யார்?'' என்று கேட்டான்.
''நீ குறிப்பிடுவது சுலைமான் பாஷாவானால் அது நான் தான்,'' என்றான் இரண்டாவதாக வந்தவன்.
தலைவன் சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, தம் பணியாளர்களிடம் அவனைக் கொண்டு போகும்படி சைகையால் உத்தரவிட்டான்.
மகேஷை நோக்கி வந்தான். தன் உடைவாளினாலேயே அவன் கட்டுக்களை அறுத்து விடுதலை செய்து, தன் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும்படி சைகையால் கேட்டுக் கொண்டான். இருவரும் உன்னதமான அந்த சந்திரகாந்தப்பட்டு மெத்தையில் உட்கார்ந்தனர்.
''அந்தக் கொடியவன் என்று எண்ணி உங்களை என் ஆட்கள் தவறுதலாகக் கொண்டுவந்து விட்டனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆண்டவனின் கருணை உங்களுக்கு இருப்பதினால்தான், தக்க சமயத்தில் நிஜமான பாஷாவை இங்கு அனுப்பி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார். உங்களுக்கு இப்படியொரு அசவுகரியம் ஏற்பட்டதற்கு மன்னிக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டான்.
''நான் உங்கள் பெருந்தன்மையை கண்டு மகிழ்கிறேன். தயவு செய்து எனக்கு உடனே அனுமதியளியுங்கள். நான் கிளம்பியாக வேண்டும்,'' என்று அவசரப்பட்டான் மகேஷ்.
''அப்படி என்ன தலைபோகிற அவசரம். உங்கள் தலை தப்பியதற்காக சந்தோஷப் படாமல், இப்படிப் பறப்பானேன்?'' என்று கேட்டான்.
மகேஷ் தன் கதையைக் கூறினான். தன் தங்கையும், அம்பிகாவும் அடிமைச் சந்தைக்குப் போகும்முன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகதான் அவசரப் படுவதாக விளக்கினான்.
அதைக் கேட்ட தலைவனான இளைஞன், ''நீயும் களைத்திருக்கிறாய், உன் குதிரையும் களைத்திருக்கிறது. இரவு என் கூடாரத்திலே தங்கி இளைப்பாரு. காலையில் சூரத்துக்கு விரைவாகப் போகும் வழியை நானே உனக்குக் காட்டி அனுப்பி வைக்கிறேன் கவலைப்படாதே!'' என்றான்.
அதற்குமேல் மகேஷûம் வற்புறுத்தவில்லை. அவனுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. தலைவனோடு உணவருந்திவிட்டுப் படுத்துக்கொண்டான்.
காலையில் கண்விழித்த மகேஷ், கூடாரத்தில் தான் மட்டுமே இருப்பதை உணர்ந்து பரபரப்புடன் எழுந்தான். பொழுது நன்றாக விடிந்திருந்தது. வெளியே போக முற்படும்போது பேச்சுக்குரல் அவனைத் தடுத்தது. கூடாரத்துக்கு வெளியே இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.
தலைவனுடைய கம்பீரமான குரல் ஒன்று, மற்றது முதல் நாள் கூடாரத்தில் ஆர்ப்பாட்டம் செய்த கழுகுக் கண் கிழவனுடையது.
''அந்த அற்பனுக்கு நீங்கள் அவ்வளவு அன்புகாட்டியது நன்றாக இல்லை,'' என்றான் கிழவன்.
''தவறு நம்முடையது. அதனால் பாதிக்கப்பட்ட அவனிடம் அன்பாக நடந்து கொண்டதில் தவறில்லை,'' என்றான் தலைவன்.
''அவனை உயிரோடு போக அனுமதிக்கப் போகிறீர்களா?''
''ஏன் அதனால் என்ன?''
''அவன் நம் ரகசியங்களை அறிந்து கொண்டுவிட்டான். நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவான். ஆகவே, அவனைக் கொன்றுவிடுவதே முறை!''
இந்த உரையாடலைக் கேட்ட மகேஷ் அதிர்ந்து போனான்!
'கிழவனுக்கு என் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு. நேற்றைய தினம் தலைவனால் அவமானப்பட்டதற்கு, என்னைக் காரணமாக்கிப் பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறானா?' இப்படி எண்ணமிட்டபடி துடிதுடிக்கும் நெஞ்சத்தோடு தலைவன் என்ன சொல்கிறான் என்பதைத் தவிப்போடு கேட்டான் மகேஷ்.
சில விநாடிகள் மவுனத்துக்குப் பிறகு, உறுதியான குரலில் தலைவன் கூறினான் .
''இல்லை. அவனைக் கொல்லக்கூடாது. என் விருந்தாளியாக அவனை ஏற்றுக் கொண்டு விட்டேன். விருந்தாளிகளை உரிய மரியாதையோடு நடத்துவதையே மனிதாபிமானமாக கருதுபவன் நான். தவிர நீ நினைப்பது போல, அவன் நமக்குத் துரோகம் செய்யக் கூடியவனாகத் தெரியவில்லை!''
இதைச் சொல்லிவிட்டு கூடாரத்தின் திரையை விலக்கியபடி உள்ளே வந்தான் அந்தக் கொள்ளைக் கூட்டத்துத் தலைவன். ஆமாம் அவன் புகழ்பெற்ற கொள்ளைக் கூட்டத்துத் தலைவன் குலாம் முகமது. அங்குள்ள கூடாரவாசிகள் குலாம் முகமதுவின் ஆட்களான கொள்ளையர்களுடையது தான். வழிப்போக்கர்களை மறித்துக் கொள்ளையடிப்பது அவன் தொழில். ஆனால், ஏழை எளியவர்களையல்ல. செல்வச் சீமான்களை, பகட்டும் படாடோபமுமாக வாழும் பிரபுக்களின் வண்டிகளைச் சூறையாடி, ஏழை எளியவர்களின் பசி போக்குவான் குலாம் முகமது.
உள்ளே நுழைந்த குலாம் முகமது, கூடார வாசல் அருகே மகேஷ் நிற்பதைக் கண்டு திகைத்தான். தங்கள் பேச்சை கேட்டிருப்பான் இவன் என்பதைப் புரிந்து கொண்டான். கண்களில் நீர்வழிய நின்றுகொண்டிருந்த அவனைத் தழுவிக் கொண்டு கூறினான் குலாம் முகமது, ''பயப்படாதே நண்பனே! நாம் இருவரும் சேர்ந்து காலை உணவு உண்போம். நீ கிளம்புவதற்கான ஏற்பாடுகளை என் ஆட்கள் செய்திருப்பார்கள். நீ கிளம்பலாம்,'' என்று கூறி உணவு சாப்பிட அழைத்துப்போனான்.
காலைச் சிற்றுண்டி முடித்து அவர்கள் வெளியே வந்ததும் மகேஷின் குதிரை சேணமிடப்பட்டுத் தயாராக இருந்தது. அதன் அருகிலேயே குலாம் முகமதுவின் குதிரையும் நின்றுக் கொண்டிருந்தது. மகேஷும், குலாமும் ஏறிக் கொண்டனர். குதிரைகளிரண்டும் கானகத்தினூடே போய்க் கொண்டிருக்கும்போது, குலாம் முகமது, சுலைமான் பாஷாவைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டு வந்தான்.
குலாம் ஒரு கொள்ளைக்காரனாக மாறியது சுலைமான் பாஷாவினால்தான்.
அடுத்துள்ள ராஜ்ஜியத்தை ஆளுபவன் பாஷா.
அந்த நாட்டை ஆளும் உரிமை குலாமுக்குத்தான். ஆனால், சதிச்செயல்களினாலும், துரோகமிழைத்தும் அரசாளும் உரிமையை அபகரித்துக் கொண்டவன் சுலைமான். இந்த அநீதியே குலாமைக் கொள்ளைக்காரனாக்கியது. ஒரு வாரம் முன்பு குலாமின் கூட்டத்திலிருந்த ஒரு ஒப்பற்ற வீரனைப் பிடித்து நகரவீதியின் நடுவே சித்ரவதை செய்து தூக்கிலிட்டான். இதற்குப் பழிவாங்கவே காத்திருந்தான் குலாம்.
தன் ஆட்களுக்கு ஆணையிட்டுவிட்டு, ''நேற்று சுலைமானைப் போலவே இருந்த உங்களைத் தவறாகப் பிடித்து வந்தாலும், அதற்கு ஈடுசெய்வது போல அந்தக் குரூரக்காரனையும் கொண்டு வந்து விட்டனர். துரோகத்தின் பரிசை இன்று மாலைக்குள் அவன் பெறுவான்,'' என்றான் குலாம் முகமது.
மகேஷ் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. தன்னை உயிரோடு திரும்பிச் செல்ல அனுமதித்ததற்காக, குலாமுக்கு பலமுறை சலாம் செய்து, தன் நன்றியை மட்டுமே தெரிவித்துக் கொண்டான்.
காட்டிலிருந்து வெளிப்பட்டதும் குலாம் தன் குதிரையை நிறுத்தினான்.
- தொடரும்.
