தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மடாதிபதி!

மடாதிபதி!

மடாதிபதி!


PUBLISHED ON : ஜூன் 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்டிதர் ஒருவர் தனது ஆசிரமத்தில் ஏராளமான மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்த மாணவர்களில் குணசீலன் என்ற மாணவன் மட்டும் வெகு சிறப்பான முறையில் பாடங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தான்.

குணசீலனின் படிப்பு காலம் முடிந்ததும், பண்டிதர் அவனை அழைத்தார்.

''குணசீலா! இங்கு பயில்கிற ஐந்நூறு மாணவர்களில் நீ ஒருவனே எல்லாப் பாடங்களையும் கற்று நன்கு தேர்ச்சியடைந்து விட்டாய். அதனால் இனிமேல் நான் உனக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் அளிக்கிறேன். நீ இனிமேல் சுதந்திரமாகச் செயல்பட்டு நான் கற்றுக்கொடுத்த கல்வியின் அறவழி போதனைகளை எல்லாம் கிராம மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். செல்லும் இடமெங்கிலும் சிறப்பினைத் தேட வேண்டும். அதற்காக உனக்கு, 'மடாதிபதி' என்ற பட்டத்தையும் வழங்கி போதனையாளராகப் பறைசாற்றுகிறேன்,'' என்றார்.

குணசீலனுக்கு மடாதிபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தனது குருவின் ஆசீர்வாதத்தோடு, பயணத்தை மேற்கொள்ளலானான் குணசீலன்.

குருவின் போதனைகளைப் பரப்பும் பொருட்டு முதலாவதாக கன்னங்குறம் என்ற கிராமத்திற்குச் சென்றான் குணசீலன். அந்த நேரத்தில் அங்கே கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இரவு நேரத்தில் நடைபெறுகிற அந்தக் கோவில் திருவிழாவில் இரவு நேர சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மிகவும் சிறப்பாக எல்லாரும் ரசிக்கும்படியாக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மேடையின் பக்கமாக மடாதிபதி குணசீலன் செல்லவே, அங்கு இருந்தவர்கள் ஏதோ சாமியார் வந்திருக்கிறார் என்று வரவேற்று, அமர வைத்தனர்.

ஒருசிலர் குணசீலனின் கம்பீரமான தோற்றத்தைக் கண்டு இவர் சிறந்த பண்டிதராக இருப்பாரோ என்று ஐயமுற்றனர். எனவே, குணசீலனை அடுத்து சொற்பொழி வாற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குணசீலன் அடுத்த சொற்பொழிவு செய்யப் போவதாக வாக்குக் கொடுத்தான்.

தனக்கு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து அந்த ஆன்மீக சொற்பொழிவாளர் பேசிக் கொண்டிருப்பதையே உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவரோ ஏற்றம், இறக்கம் இல்லாமல் உரை நடையினை வாசிப்பது போன்று தனது கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் கூறுவதை மக்களும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த குணசீலனுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது.

''சே... என்ன மக்கள் இவர்கள்! இவரெல்லாம் ஒரு சொற்பொழிவாளரா? இவர் பேசுவதையும் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்களே! இந்த இடத்திலே நாம் உரையாற்றுவது கூடாது. உடனடியாக இங்கிருந்து சென்றுவிட வேண்டியதுதான்,'' என்று முடிவு செய்தார்.

தம் இருக்கையை விட்டு எழுந்து கோவில் மேடையை விட்டு வெளியேறினார். அவரின் இந்தச் செயலுக்குக் காரணம் புரியாத மக்களோ திகைப்புடன் அங்கே அமர்ந்திருந்தனர். அந்த இடத்தை விட்டு வந்த குணசீலன் வேறு ஒரு கிராமத்திற்குச் சென்றான்.

அந்த கிராமத் தலைவரோ குணசீலனை இன்முகத்துடன் வரவேற்றார்.

''ஐயா, தங்களைப் பார்த்தால் தீர்க்கதரிசி போல் தெரிகிறது. அதனால் தாங்கள் இரண்டு மூன்று நாள்கள் எங்கள் ஊரில் தங்கி, உங்கள் அரிய பெரும் கருத்துக்களை எடுத்துரைத்துச் செல்ல வேண்டும்,'' என்றார்.

குணசீலனோ, தன்னை சுற்றி நின்று கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினைப் பார்த்தார். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாருமே ஏழை விவசாயிகளாக இருந்தனர். 'இந்த விவசாயிகள் எப்படி என் பேச்சைக் கேட்கப் போகிறார்கள்? என் பேச்சைக் கேட்கும் அளவுக்கு இவர்களுக்கு எங்கே ஆற்றல் இருக்கப் போகிறது. அதனால் இந்த ஊரில் சொற்பொழிவினை நடத்துவதை விட நாம் சும்மாவே செல்லலாம்' என்று முடிவு செய்தான்.

உடனே அந்த ஊர் தலைவரிடம் எதுவும் பேசிக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான். அந்த ஊரைக் கடந்து வேறு ஒரு ஊருக்கு வந்தான் குணசீலன்.

அங்கே ஒரு உணவு விடுதி இருந்தது. அந்த உணவு விடுதியில் சென்று ஏதாவது சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளலாம் என்று நினைத்தான் குணசீலன்.

குணசீலன் உணவு விடுதிக்குச் செல்லும் நேரத்தில் அங்கு அமர்ந்திருந்த அறிஞர்கள் நான்கைந்துபேர் தங்களுக்குள் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் குணசீலனைப் பார்த்து திகைப்படைந்தனர். குணசீலனின் கம்பீரமான தோற்றமானது அவர்களை கவர்ந்தது.

''ஐயா, தாங்கள் சிறந்த அறிஞர் போன்று காணப்படுகிறீர். தங்களைப் பார்க்கும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டால் இன்னும் நன்கு மகிழ்ச்சியடைவோம்,'' என்றனர்.

உடனே குணசீலன் ''நான்தான் மடாதிபதி பண்டிதர்,'' என்றான்.

''ஓ அது நீங்கள்தானா! நாங்களும் உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உணவு விடுதியில் நீங்கள் எங்கள் விருந்தாளி.

''உங்களது தேவைக்கேற்ப எது வேண்டுமோ அதனைச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் உணவு அருந்தி முடித்ததும் நாங்கள் வசிக்கிற மடத்தில் நீங்கள் விருந்தினராக வர வேண்டும்,'' என்றனர்.

அதனைக் கேட்ட குணசீலன் மகிழ்ச்சியோடு தனக்குத் தேவையான உணவு பண்டங்களை சாப்பிட்டு முடித்தான். பின்னர் அவர்களோடு மடத்திற்குப் புறப்பட்டான்.

''மடாதிபதி அவர்களே, தாங்கள் எங்கள் மடத்திற்கு வந்துவிட்டீர்கள். எல்லையில்லா மகிழ்ச்சியோடு இருக்கிற நாங்கள் உங்களோடு சிறிது நேரம் கருத்துப் பரிமாற்றம் நடத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்,'' என்றனர்.

''ஓ, தாராளமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாமே. முதலில் உங்களுக்கு என்னோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள திறமை இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னரே நான் கருத்துப் பரிமாற்றம் செய்வதா இல்லை வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்,'' என்று கர்வத்தோடு பேசினான் குணசீலன்.

குணசீலனின் இந்த வார்த்தைகள் அறிஞர்களின் மனதை புண்படுத்தியது. உடனே அவர்கள் எந்த அளவுக்கு குணசீலனை நேசித்தார்களோ, அதனை விட கூடுதலாக வெறுத்தனர். இருந்தாலும், ஒரு பண்டிதரை நாமாகவே பகைத்துக்கொள்ளக் கூடாது என்று மவுனமாக இருந்து விட்டனர்.

அவர்கள் மவுனமானது குணசீலனுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. 'தன் பேச்சு இந்த அறிஞர்களுக்கு பிடிக்கவில்லை போலும், அதனால்தான் இவர்கள் நம்மீது வெறுப்பினைக் காட்டும் பட்சத்தில் மவுனமாக இருக்கின்றனர்.

'நாமும் இவர்களிடம் வெறுப்பினைக் காட்டவேண்டியதுதான். இவர்களை விட நாம் என்றுமே குறைந்தவரில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்' என்று முடிவுசெய்தவனாய் வேகமாக அந்த மடத்தினை விட்டு வெளியேறினான்.

அது இரவு நேரமானதால் தட்டுத் தடுமாறியபடி அந்த மடத்தினை விட்டு வெளியே வந்தான். மடத்தை விட்டு வெளியே வந்த அவன் எங்கே தங்குவது என்று இடம் தேடினான்.

ஊரின் எல்லைபுறத்தில் ஒரு மண்டபம் இருப்பதைக் கண்டான். அந்த மண்டபத்தில் சென்று படுத்துக்கொண்டு இரவைப் போக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.

உடனே அந்த மண்டபத்தை நோக்கிச் சென்றான். அந்த மண்டபத்தில் நான்கைந்து திருடர்கள் இருந்தனர்.

திருடர்கள் குணசீலனைப் பார்த்தனர். ஒரே பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்தனர். அவன் மடியில் இருந்த பணத்தினைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு நன்கு அடித்து உதைத்து விரட்டினர்.

திருடர்களின் அடியைத் தாங்க முடியாத குணசீலன் அலறி அடித்தபடி ஓட்டமெடுத்தான்.

இரவு நேரத்தில் தெருவில் ஓடியதால் தெரு நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவனை குரைத்து விரட்டத் தொடங்கின. ஒரு சில நாய்களோ அவன் மீது பாய்ந்து அவனை கடித்துக் குதறின.

வலி தாங்க முடியாமல் ஓட்டமெடுத்த குணசீலன், தனது குருநாதரின் காலில் போய் விழுந்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்.

குணசீலனின் பேச்சைக்கேட்ட அவரும், ''குணசீலா! உன்னிடம் அனைத்தும் கற்று விட்டோம் என்ற ஆணவம் இருக்கிறது. அந்த ஆணவத்தின் காரணமாகத்தான் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. பிற மனிதர்களை எடைபோட நீ என்ன கடவுளா? எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டி நடந்து கொண்டால்தான் உன்னுடைய கல்வியினால் மற்றவர்கள் பயன்பெற முடியும்,'' என்றார் குருநாதர்.

குணசீலன் தன் தவறை உணர்ந்தான். தனது ஆணவத்தை அன்றோடு தொலைத்தான்.

குட்டீஸ் இதில் இருந்து என்ன தெரிகிறது?

ஒருவனுக்கு ஆணவம் இருந்தால் அவன் கற்ற கல்வியினால் மற்றவர்கள் பயன் அடையமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டீர்களா குட்டீஸ்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us