
டில்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லுாரி வளாகம். அந்த ஆண்டு புதிதாக கல்லுாரியில் சேரும் மாணவர்கள், கட்டணம் செலுத்த வந்திருந்தனர்.
கடைசிநாள் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது; நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வரிசையில் நின்றிருந்த ஒருவனுக்கு, தாகத்தால் தொண்டை வறண்டு விட்டது; கோடை வெயில் வாட்டியதால், வியர்த்து கொட்டியது; மயங்கி சாய்ந்தான்.
உடன் நின்றவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து, தாகம் தணித்து முதலுதவி செய்தனர்; கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தான் அந்த மாணவன்.
உடன் இருந்த ஆசிரியர், 'உன் பெயர் என்ன... அப்பா பெயர் என்ன... வீடு எங்கே இருக்கிறது... தொலைபேசி எண் சொல்ல முடியுமா...' என விசாரித்தார்.
'என் பெயர் அனில் சாஸ்திரி; அப்பா பெயர்
லால் பகதுார் சாஸ்திரி; இந்திய பிரதமராக இருக்கிறார்...' என்றான் அந்த மாணவன்.
அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றனர்.
தந்தை எவ்வழியோ, மகனும் அவ்வழி!
குழந்தைகளே... எளிமையாக வாழ பழகுங்கள்.
- ஜி.ராஜா

