PUBLISHED ON : ஆக 15, 2020

ஆனந்தி வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கின ரோஜாக்கள். அங்கு, தேன் குடித்த வண்ணத்துபூச்சி, கருவண்டு, தேனீக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தன.
தோட்டத்து மாமரத்தில் வசித்தது ஒரு குட்டிக்குரங்கு. அதற்கு குறும்பு அதிகம். அங்கு வரும் பூச்சி, வண்டுகளை நைசாக பிடித்து, ஒரு டப்பாவில் அடைத்து கொடூரம் செய்து வந்தது.
சனிக்கிழமை காலை -
பள்ளிச்சீருடை அணிந்து தோட்டத்துக்கு வந்தாள் ஆனந்தி. வண்ண மலர்களை பறித்து, ஒரு கூடையில் பத்திரப்படுத்தினாள்.
இதைக்கண்ட குரங்கு, ''இன்று விடுமுறை தானே... ஏன் சீருடை அணிந்திருக்கிறாய்...'' என்றது.
''நாட்டின் சுதந்திர தினம் அல்லவா இன்று... பள்ளியில் தேசிய கொடியேற்றி, நமது தியாக வரலாறு குறித்து உரையாற்றுவர் அறிஞர்கள். விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைத்து நன்றி செலுத்த வேண்டாமா... அதற்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்... இந்த பூக்களை, நம் தியாக சீலர்கள் நினைவுக்கு சமர்ப்பிக்க போகிறேன்...''
''சுதந்திரம்... விடுதலை... தியாகம்ன்னு என்னன்வோ சொல்ற... அப்படின்னா என்ன?''
''ஆங்கிலேயரிடம் அடிமையாக சிக்கி கிடந்தது நம் நாடு. அண்ணல் மகாத்மாவின் தலைமையில், அகிம்சைவழியில் போராடி விடுதலை பெற்றோம். அந்த நாளை நினைபடுத்தும் விழா...''
''புரியலியே... என் ஐந்தறிவுக்கு புரியற மாதிரி, உன் ஆறாம் அறிவை பயன்படுத்தி எளிமையா சொல்லேன்...''
ஆர்வமாக கேட்டது குட்டிக்குரங்கு.
''உன்னை, ஒரு கூண்டில் அடைத்து பூட்டி வைத்தால் எப்படி இருக்கும்...''
''ஐயோ... அது மகாகொடுமை. காட்டுல விருப்பப்படி எங்கேயும் சுத்த முடியாதே... அத நெனைக்கவே பயமாயிருக்கு...''
''கூண்டுக்குள் அடைபட்ட உன்னை, சிலர் முயன்று போராடி திறந்து விட்டால்...''
''ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்... தோட்டத்தை சுற்றி வந்து ஆடிப்பாடுவேன்... என்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்வேன்...''
''அதுதான் சுதந்திரம்...''
விளக்கத்தை புரிந்து மகிழ்ந்து தலையாட்டியது குரங்கு.
அப்போது, பூச்சிகளை பிடித்து அடைத்திருந்த டப்பாவை, அர்த்தப்பூர்வமாக பார்த்தாள் ஆனந்தி.
குற்ற உணர்வுடன், ''அடைத்திருக்கும் பூச்சிகளை எல்லாம் திறந்து விட்டுடுறேன்... என்னை மன்னிச்சுடு...'' என்றது குரங்கு.
அன்பு பூக்களே... சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. உயிரினங்களை கூண்டுக்குள் அடைத்து வேடிக்கை பார்ப்பது பெரும் பாவம். இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
எஸ்.டேனியல் ஜூலியட்
