தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தேசிய சின்னம்!

தேசிய சின்னம்!

தேசிய சின்னம்!


PUBLISHED ON : ஆக 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டின் பெருமைமிகு அடையாளம், மரபுரிமை, மதிப்பை வெளிப்படுத்துவது தேசிய சின்னம் ஆகும். அதிகாரப்பூர்வ அரசு முத்திரையாகவும் உள்ளது. ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

நம் தேசிய சின்னம், உத்தரபிரதேச மாநிலம், வரணாசி அருகே உள்ள சாரநாத் துாண் உச்சியில் நான்கு சிங்கமுக வடிவை அடிப்படையாக கொண்டது. சாரநாத் துாண், 40 அடி உயரம் கொண்டது. அதன் மீது, ஏழு அடி உயர சிங்கமுக உருவ சிற்பம் நிறுவப்பட்டிருந்தது.

இதை முன்மாதிரியாகக் கொண்டு, மாதவ் சஹானி என்பவர் தேசிய சின்னத்துக்கான, வடிவத்தை உருவாக்கினார். அதில், மூன்று சிங்க முகங்கள் மட்டுமே தெரியும். நான்காவது முகம் மறைந்திருக்கும்.

பீடத்தின் நடுவில், தர்மச்சக்கரம் அமைந்துள்ளது. அதன் கீழ், 'சத்ய மேவ ஜெயதே' என்ற குறிக்கோள் சொல், தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப் பட்டுள்ளது. இதற்கு, 'வாய்மையே வெல்லும்' என்று பொருள்.

நாடு விடுதலை பெறும்முன், 'ஸ்டார் ஆப் இந்தியா' என்பதே தேசிய சின்னமாக இருந்தது. இது, 1857 முதல் பயன்படுத்தப்பட்டது.

தேசியச் சின்ன முத்திரை, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளுக்கு, கடித தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்களின் அதிகாரபூர்வ கடிதங்களில் முத்திரையாக பதிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் பயன்படுத்தும் கடிதங்களில் நீல வண்ணத்தில் தேசிய சின்னம் பொறிக்கப் பட்டிருக்கும். உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் கடிதங்களில், சிவப்பு வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

எம்.பி.,என்ற மக்களவை உறுப்பினர் கடிதங்களில், பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

தேசியச் சின்னத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; அவமதித்தால் கடும் தண்டனை உண்டு.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முத்திரையாக, தனிச்சின்னம் உள்ளது. அதுபோலவே, சி.பி.ஐ., என்ற மத்திய புலனாய்வு பிரிவுக்கும் தனிச்சின்னம் உள்ளது. இந்த சின்னங்கள், தேசிய சின்னத்தில் சிறு மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டவை.

அசோகரின் சாரநாத் துாண்

மவுரிய மன்னர் அசோகர், 18 வயதில் ஆட்சி பொறுப்பேற்றார். கி.மு.273 முதல் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார். கலிங்க நாட்டின் மீது, கி.மு.261ல் போர் தொடுத்தார்.

மக்களின் மரண ஓலம் கண்டு மனம் வருந்தி, 'எவ்வுயிருக்கும் தீங்கு செய்ய கூடாது' என்ற நீதியை போதித்த புத்த மார்க்கத்துக்கு மாறினார். ஆட்சி அதிகாரத்தில், புத்த தத்துவத்துக்கு ஏற்ப மாற்றங்களை புகுத்தினார்.

* சாலை ஓரம் ஆல், அரசு, மா போன்ற நிழல் மரங்களை நட்டு பராமரித்தார்

* பயணிகள் தங்க வசதியாக சத்திரங்கள் அமைத்தார்

* மத, இன பேத வெறியாட்டத்தை தடுக்க முயன்றார்

* விலங்கு வேட்டையை தடைசெய்தார்

* செய்திகள் பொறிக்க கல்வெட்டுக்களை அமைத்தார்

* புலனடக்கம், துாய எண்ணம், நன்றியுடைமை, அறக்கொடை, அன்பு, சத்தியம், சேவை, பெரியோரை மதித்தல் போன்ற பண்புகளை கடைப்பிடித்தார்.

இவரது ஆட்சியில் புத்தரின் போதனைகளை பரப்ப நினைவுத் துாண்கள், கி.மு.250 முதல் நிறுவப்பட்டன. இவற்றில் பிரபலமானது சாரநாத்தில் அமைந்த துாண். புத்தர், முதன் முதலாக போதனையை துவக்கிய இடம் இது.

ஒரே கல்லால் ஆன, 40 அடி உயர துாண் உச்சியில் பீடம் அமைக்கப்பட்டது. அதில், நான்கு ஆசிய சிங்கங்கள் கம்பீரமாக நிற்பது போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவை, அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற பண்புகளைக் குறிக்கின்றன.

கல்துாண் உடைந்து சிதைந்து விட்டது. அதன் மீதான பீடம், மலர்ந்த தாமரை வடிவில் அமைந்து, வாழ்வின் மலர்ச்சியை குறிக்கிறது.

அந்த பீடத்தில்...

* மையப் பகுதியில், 24 ஆரக்கால்கள் கொண்ட தர்மச்சக்கரம் உள்ளது

* கிழக்கில் யானை உருவம்

* மேற்கில் குதிரை உருவம்

* தெற்கில் எருது உருவம்

* வடக்கில் சிங்க உருவம் மிகக் கச்சிதமாக பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த எழில்மிகு சிற்பம், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி அருகே, சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ளது. இதை மாதிரியாகக் கொண்டுதான், நம் தேசிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us