PUBLISHED ON : செப் 20, 2025

இந்திய விண்வெளி ஆய்வு நீண்ட வரலாறு உடையது. நாடு முழுதும் பல்வேறு ஆய்வகங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.
அதில் சிலவற்றை அறிந்து கொள்வோம்...
ஆர்யபட்டா வானியல் ஆய்வகம்: உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் நகரில் அமைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால், 1955ல் துவங்கப்பட்டது. இங்கு தொலைநோக்கிகளில் நட்சத்திரங்களின் ஒளிர்வு ஆய்வு செய்யப்படுகிறது. பால்வெளி உருவாக்கம் பற்றிய ஆய்வுகளும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த பகுதியில் வானம் தெளிவாக உள்ளதால் ஆய்வுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்திய வானியல் ஆய்வில் முன்னோடியாக திகழ்கிறது.
வைனு பாப்பு ஆய்வகம்: தமிழகத்தில் திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை, காவலுார் பகுதியில் 1971ல் நிறுவப்பட்டது. இந்திய இயற்பியல் ஆய்வு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. காட்டின் மத்தியில் அமைந்துள்ளது. அமைதியான சூழல், துல்லியமான அவதானிப்புக்கு உதவுகிறது. இங்குள்ள தொலைநோக்கி தான் இந்தியாவில் மிகப்பெரியது. நட்சத்திர உருவாக்கம், கருந்துளை மற்றும் சூரியன் பற்றிய ஆய்வுகள் இங்கு நடக்கின்றன. உலக அளவில் விண்வெளி ஆய்வுக்கு முக்கிய தகவல்கள் தந்து பங்கு வகிக்கிறது.
இந்திய வானியல் கழகம்: இது பெங்களூரில் 1786ல் நிறுவப்பட்டது. ஆசியா கண்டத்தில் பழமையான வானியல் ஆய்வு மையங்களில் ஒன்று. இந்திய இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. சூரிய இயற்பியல், விண்மீன் பற்றிய ஆய்வுகள் இங்கு நடக்கின்றன. நவீன தொலைநோக்கியால், பால்வெளி ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய புரிதலை இங்கு நடக்கும் ஆய்வுகள் மேம்படுத்தும். உலகளவில் புகழ் பெற்றது இந்த ஆய்வகம்.
ஜெயண்ட் மீட்டர் வேவ் ரேடியோ தொலைநோக்கி ஆய்வகம்: மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில், 1995ல் துவங்கப் பட்டது. உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி அமைப்புகளில் ஒன்று. வானியலில் புல்சார், குவாசார் மற்றும் பால்வெளி உருவானது பற்றிய ஆய்வில் முன்னணியில் உள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் அதிக திறன் உடையவை. விண்வெளி ஆய்வில் பல புரட்சிகளை செய்துள்ளது.
ஹன்லே இந்திய வானியல் ஆய்வகம்: காஷ்மீர், லடாக் பகுதியில், 2001ல் நிறுவப்பட்டது. உலகின் இரண்டாவது உயரமான ஒளியியல் ஆய்வகம் என புகழ் பெற்றுள்ளது. இந்திய இயற்பியல் ஆய்வு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள ஹிமாலயன் சந்திர தொலைநோக்கி வழியாக, நட்சத்திரம், கருந்துளை பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தெளிவான வானம் இதன் தனித்தன்மை. இந்திய விண்வெளி ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உதய்ப்பூர் சூரிய ஆய்வகம்: ராஜஸ்தான் மாநிலத்தில், 1975ல் நிறுவப்பட்டது. இயற்பியல் ஆய்வு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சூரிய புயல், காந்தப்புலங்கள் குறித்த ஆய்வில், முன்னணி வகிக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள, 'மல்டி-அப்ளிகேஷன் சோலார் டெலஸ்கோப்' என்ற தொலைநோக்கி வானை துல்லியமாக அவதானிக்க உதவுகிறது. இங்குள்ள சூழல், சூரிய ஆய்வுக்கு உகந்தது.
இவை தவிர மேலும் வானியல் ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளன.
- மு.நாவம்மா

