
''எழுந்திருப்பா வாசு... மணி ஆயிடுச்சு; வீட்டு பாடம் கூட செய்யல, இப்படி அலட்சியமா இருந்த எப்படி...''
மகனை கடிந்து கொண்டாள் தாய் ரமணி.
''போம்மா... இன்னும் கொஞ்ச நேரம் துாங்குறேன்...'' என்றவாறு புரண்டு படுத்தான்.
மகன் சோம்பலாக இருப்பது, ரமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் தாமதமாக எழுவதால், பள்ளி பேருந்தை தவற விட்டு, அரசு பேருந்தில் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக தொடர்கிறது.
எவ்வளவு புத்திமதி சொல்லியும் எடுபடவில்லை. வாசுவின் செயலில், எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. எதையும், நேரத்திற்கு செய்யாமல் காலம் கடந்த பின் அவசரப்படுவான். இதுவே வாடிக்கையாகி போனதை கண்டு வருந்தினாள் ரமணி.
வேறு வழி தெரியாமல், 'அவனாக திருந்தினால் தான் உண்டு' என, சமாதானம் செய்து கொண்டாள்.
ஒரு நாள் பள்ளி விட்டு, வீடு திரும்பினான் வாசு.
வீட்டில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டான். அவர் அருகில், இரண்டு ஊன்று கோல் கட்டைகள் இருந்தன.
பெரியவருக்கு தேநீர் தந்தாள் ரமணி. பின் வாசுவிடம், ''இவரு எங்க பெரியப்பா... உனக்கு தாத்தா முறை...'' என, அறிமுகம் செய்தாள்.
முதலில் முகம் சுளித்தாலும், பின், அவருடன் சகஜமாக பேசினான் வாசு.
''தாத்தா... உங்க காலுக்கு என்ன ஆச்சு...'' என வினவினான்.
''என்னோட அலட்சியத்துக்கு கிடைத்த பரிசு; ஒரு சமயம், காலில் இரும்பு துண்டு குத்திடுச்சு... அதை கண்டுக்காம பிடுங்கி போட்டுட்டேன்; துருப்பிடுச்ச இரும்பு துண்டு, காலுக்குள் உள்ளேயே தங்கி, புரையோடி போச்சு...
''உடனே மருத்துவம் பார்க்காமல், அலட்சியமா இருந்துட்டேன்; சரியான நேரத்துல சிகிச்சை எடுக்காமல் போனதால், ஒரு காலையே, எடுக்க வேண்டியதாகி போச்சு...'' என, வருத்தத்துடன் கூறினார் பெரியவர்.
வாசுவின் தலைக்குள், 'பளீர்...' என, மின்னல் வெட்டியது.
'எந்த விஷயத்தையும், அலட்சியப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு; எதிலும் அலட்சியமாக இருக்க கூடாது' என திடமான எண்ணம் வந்தது.
அன்று முதல், நேரம் தவறாமையை கடை பிடித்தான்; எதிலும் கவனமுடன் செயல்பட்டான் வாசு.
குழந்தைகளே... எந்த செயலையும் அலட்சியப்படுத்தி தள்ளிப்போடாமல், உரிய நேரத்தில் முடிக்க பழகுங்கள்.
ஜி.சுந்தரராஜன்

