தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஊருக்கு மட்டும் தான் உபதேசமா!

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா!

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா!


PUBLISHED ON : ஆக 31, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 55; அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

வகுப்பு ஆசிரியர் கவுதம் கண்டிப்பானவர்; பாடத்தை புரியும்படி, நன்றாக நடத்துவார்; அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது; புகைப் பிடிக்கும் பழக்கம்!

தினமும், மாணவர்களை அனுப்பி, 'சிகரெட்' வாங்கி வர சொல்வார்.

ஒரு நாள், 'புகை பிடிக்க கூடாது; புற்றுநேய் வரும்' என்று பாடம் நடத்தினார். மாணவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்து கொண்டோம். ஆசிரியர் சென்றதும், 'இது என்ன நியாயம்... மற்றவருக்கு தான் உபதேசமா... இவருக்கு இல்லையா... இவர் மட்டும் புகை பிடிக்கலாமா... இனி, சிகரெட் வாங்கி வரச் சொன்னால், நாம் போகக் கூடாது' என்று முடிவு செய்தோம்.

மறுநாள், ஒரு மாணவனை, சிகரெட் வாங்கி வர சொன்னார்; அவன் கடைக்கு சென்று, சிறிது நேரத்திற்கு பின் வந்து, 'சிகரெட் கிடைக்கவில்லை ஐயா...' என்றான். வேறு பையனை அனுப்பினார், அவனும் அவ்வாறே சொன்னான். ஆசிரியருக்கு ஒரே கோபம், 'பரவாயில்லை' என்று சொல்லி, சென்று விட்டார்.

மதிய உணவு முடிந்ததும், சட்டையை கழற்றி, நாற்காலியில் மாட்டி விட்டு, துாங்கி விட்டார். உடனே, ஒரு பையன், ஒரு துண்டு சீட்டில், 'புகைப் பிடிக்க கூடாது; புற்று நோய் வரும் என்று பாடம் நடத்தி விட்டு, நீங்கள் மட்டும் புகைப் பிடிக்கலாமா... உங்களுக்கு மட்டும் புற்றுநோய் வரலாமா... ஊருக்கு தான் உபதேசமா... உங்களுக்கு இல்லையா' என்று எழுதி, சட்டை பையில் வைத்து விட்டான்.

ஆசிரியர் எழுந்ததும், அதைப் பார்த்து, மிகவும் கோபமாக, 'யார் இப்படி எழுதியது, உண்மையை சொல்லிடுங்க... இல்லாவிட்டால், அனைவருக்கும் அடி விழும்...' என்றார்.

ஆனால், மாணவர்கள் யாரும், காட்டி கொடுக்கவில்லை. சத்தம் கேட்டு, பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்தார்.

'என்ன விஷயம்... ஏன் சத்தம் போடுகிறீர்...' என்று கேட்டார். நடந்ததைச் சொன்னார் ஆசிரியர்.

உடனே, அவர், 'ஏன் ஐயா... மாணவனை சிகரெட் வாங்க சொல்லலாமா... இது தவறு இல்லையா... மாணவர்களுக்கு வழிகாட்டியான ஆசிரியர், இப்படி செய்யலாமா... இத்தோடு, இந்த பழக்கத்தை விட்டு ஒழியுங்கள்...' என்றார்.

ஆசிரியருக்கு கண் கலங்கி விட்டது; அத்துடன், புகைப் பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டு விட்டார்; தயவுசெய்து, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், இதை படித்ததும் விட்டு விடுவீர்கள் என நம்புகிறேன்.

- எஸ்.ஸ்ரீ ராமன், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us