PUBLISHED ON : ஆக 31, 2018

நான், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு. என்னுடன் படித்த நண்பன் மிக வசதியானவன்; ஆனால், படிப்பில் சுமார், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த நான், நன்றாக படிப்பேன். அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்; எது வாங்கினாலும், எனக்கும் வாங்கித் தருவான்.
எனக்கு புத்தகங்கள், 'பைண்டிங்' செய்ய தெரியும்; அவன் புத்தகங்களையும், பைண்டிங் செய்து கொடுப்பேன். எங்களுக்குள் அவ்வப்போது, சின்ன சின்ன சண்டைகள் வரும். அப்போதெல்லாம், அவனே வலிய வந்து, சமாதானப்படுத்துவான்.
அன்று, வகுப்பில் ஆசிரியர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். வழக்கம் போல், அவன் ஏதோ சொல்லி, என்னை சீண்டி விட்டான்; ஆத்திரத்தில் அவன் தொடையில், 'நறுக்'கென்று கிள்ளி விட்டேன்.
கோபத்தில், ஆசிரியரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டினான். அவன், கையைப் பிடித்து கெஞ்சிய போதும், உதறி விட்டு, ஆசிரியரிடம் போய், குனிந்து காதில் ஏதோ கூறினான். என்னை நிமிர்ந்து பார்த்த ஆசிரியர், 'வாடா இங்கே...' என்றார்.
பயந்து நடுங்கியபடியே, அவர் முன் நின்றேன். ஏற இறங்கப் பார்த்தவர், 'நீ புக்ஸ் பைண்டிங் பண்ணுவேன்னு சொல்றானே உண்மையா...' என்றார்.
'ஆமாம் சார்...' என்றேன்.
'எனக்கும் இரண்டு புத்தகம், பைண்டிங் செய்து தர்றியா...' என்றார்.
அப்போது தான், எனக்கு உயிர் மூச்சு திரும்பி வந்தது.
'செய்து தர்றேன் சார்...' என்றேன்.
திரும்பி வந்து பெஞ்சில் அமர்ந்ததும், என்னைப் பார்த்து, குறும்பாக சிரித்தவன் அன்பில் கட்டுண்டு, கண்களில் நீர் மல்க, நன்றி தெரிவித்தேன்.
'இனி எப்போதும், அவனிடம் கோபித்துக் கொள்ளக் கூடாது...' என உறுதி எடுத்துக் கொண்டேன்.
- கே.கணேசன், காஞ்சிபுரம்.
