தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெண்ணே... பூச்செண்டு தா! - (2)

பெண்ணே... பூச்செண்டு தா! - (2)

பெண்ணே... பூச்செண்டு தா! - (2)


PUBLISHED ON : ஆக 31, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: உயிர் நண்பனான அரசகுமாரன், கோவில் ஒன்றில் இருந்த அழகிய பெண் சிலையை பார்த்து, அன்பு கொண்டு பைத்தியமானான். அந்த சிலை அழகியை கண்டுபிடிக்க சென்றான் மந்திரிகுமாரன். இனி -

''தம்பி... அது ஒரு விசித்திரமான வரலாறு. ஒரு நாள், இருட்டிய பின், கோவில் முகப்பு வாசலில், நின்று கொண்டிருந்தேன். அப்போது, முனியாண்டி என்ற குயவன் ரத்தினக் கல்லைப் போல், 'பள பள'க்கும் ஒரு பொருளை, என்னிடம் கொடுத்து, வாங்கிக் கொள்ள சொன்னான்.

''பள பளக்கும் அந்த ரத்தினக்கல், பல லட்ச மதிப்பு இருக்கும் என்று உணர்ந்த நான், உடனே, என் குழந்தையின் கழுத்தில் தொங்கிய தங்க பதக்கத்தை கழற்றி, அவனிடம் கொடுத்து, அந்த பொருளை வாங்கிக் கொண்டேன்.

''பொழுது விடிந்து பார்த்த பின், அது உண்மையான ரத்தினக்கல் அல்ல வென்றும், அது ஒரு விரல் நகம் தான் என்றும் கண்டேன். எனக்கு பெருத்த ஏமாற்றமும், வருத்தமும் ஏற்பட்டது. அந்த நகத்தின் அழகை வைத்து, சாமுத்திரிகா லட்சணப்படி அந்தப்பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, என் கற்பனையால் சிருஷ்டி செய்து, அதையே சிலையாக வடித்தேன்...'' என்றார், சிற்பி.

''தங்களிடம் அந்த நகத்தை கொடுத்த குயவன் எங்கு இருக்கிறான் என்ற விவரம் உங்களுக்கு தெரியுமா...'' என்று கேட்டான் மந்திரிகுமாரன்.

''இங்கிருந்து, தெற்கே, 10கி.மீ., துாரத்தில் ஒரு சிற்றுார் இருக்கிறது; அங்கு தான், அந்த குயவன் வசித்து வருகிறான்...'' என்றார் சிற்பி.

மந்திரி குமாரன் அங்கிருந்து புறப்பட்டு, சிற்பி சொன்ன ஊரை அடைந்தான்; அங்கு, முனியாண்டி என்ற குயவனின் இருப்பிடத்தை தேடிக் கண்டுபிடித்தான். அவனிடம் தன் நண்பனின் சோக வரலாற்றை கூறி, ''சிற்பியிடம் அவன் கொடுத்த நகம் எப்படி அவனுக்கு கிடைத்தது...' என்று கேட்டான்.

''ஐயா... அது ஒரு வேடிக்கையான கதை... ஒரு நாள் இரவு, வேடனொருவன் என் வீட்டுக்கு வந்தான்.

''பள பளவென்று மின்னும், ஒரு பொருளை, என்னிடம் கொடுத்து, சட்டி, பானைகள் தரச் சொன்னான்.

''நானும், அது ஒரு விலையுயர்ந்த பொருளாக இருக்கும் என்று நம்பி, அவன் கேட்ட, சட்டி, பானைகளைக் கொடுத்து அனுப்பினேன். பொழுது விடிந்த பின்தான், நான் ஏமாற்றப்பட்ட விபரம் தெரிந்தது. வேடன் செய்தது போலவே, இருட்டு நேரத்தில், அதை சிற்பியிடம் கொடுத்து, தங்கப் பதக்கத்தை வாங்கி வந்து விட்டேன்...'' என்றான் குயவன்.

''உன்னிடம் நகத்தை கொடுத்த வேடன் எங்கிருக்கிறான் என்ற விவரம் உனக்கு தெரியுமா...'' என்று குயவனிடம் கேட்டான் மந்திரிகுமாரன்.

''இங்கிருந்து, 20கி.மீ., துாரத்தில் கார்க்கோடக வனம் என்றொரு பயங்கரக்காடு இருக்கிறது; அந்த காட்டில், வசிக்கிறான்...'' என்றான் குயவன்.

மந்திரிகுமாரன், கார்க்கோடக வனத்தை நோக்கி, தன் குதிரையை செலுத்தினான்; வேடனின் குடிசையை கண்டு பிடித்து, விவரத்தை அவனிடம் கூறினான்.

அவன் கதையை கேட்டு, பரிதாபப்பட்ட வேடன், ''ஐயா... ஒரு நாள் காட்டில் வெகுநேரம் வேட்டையாடினேன்; ஒரு பிராணியும் கிடைக்கவில்லை; பசியும், களைப்பும் மேலிட, ஒரு ஆலமரத்தடியில் படுத்தேன்; அங்கு ஒரு பொன், 'பளபள'வென்று மின்னுவதை பார்த்தேன்.

''அந்தப் பொருள் காட்டிலிருக்கும் நாகப்பாம்பு கக்கிய, நாக ரத்தினமாக இருக்கும் என்று நினைத்து, அதை எடுத்தேன். விடிந்த பின் பார்த்தால், நகமாய் இருந்தது. பேசாமல் எடுத்துச் சென்று, குயவரிடம் கொடுத்து, சட்டி, பானைகள் வாங்கி வந்து விட்டேன்...'' என்றான், வேடன்.

'இதுவரை, ஒருவரிடமிருந்து, ஒருவருக்கு தொடர்பு இருந்தது. இப்போது, வேடனுக்கு பின், யாரிடம் போய் கேட்பது என்ற தொடர்பு அறுபட்டு விட்டதே! இனி, யாரைப் போய் கேட்டு விவரம் அறிய முடியும்...' என்ற கவலையுடன், ஒரு பெரிய மரத்தடியில் படுத்தான்.

மாலை நேரம் இருட்டிய பின் கூட, அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அப்போது, அந்த மரத்தில் கூட்டம் கூட்டமாக, ஆயிரம் கிளிகள் வந்து தங்கின. தலைமை கிளி, மரத்தடியில் சோகத்துடன் படுத்திருக்கும் மந்திரி குமரனைக் கண்டது.

''மானிடனே... நீ யார்... இருட்டு நேரத்தில், கொடிய மிருகங்கள் நிறைந்து இருக்கும் வனத்திற்கு ஏன் வந்தாய்...'' என்று கேட்டது. மந்திரி குமாரனுக்கு, பறவைகள் பேசும் பாஷை தெரியும் என்பதால், தன் கதை முழுவதையும் சொன்னான்.

''இந்த நகத்தை இங்கு போட்டவர் யாரென்று உங்களில் யாருக்காவது தெரியுமா...'' என்று கேட்டது.

அப்போது, ஒரு கிளி, ''அரசே... ஒருசமயம், நாங்கள் எல்லாம், ஏழு கடல்களை கடந்து, இரை தேடுவதற்காக சென்றோம். ஒரு காட்டிற்குச் சென்று, எல்லாரும் கனி வகைகளை புசித்து, திரும்பும் போது, வழியில் ஒரு உப்பரிகையில் பெண்ணொருத்தி, தன் தலையைச் கோதிக் கொண்டிருந்தாள்.

''அப்போது, அவள் சிறு விரலில் இருந்த ஒரு நகம் பெயர்ந்து விழுந்தது. அது, 'பள பள'வென்று மின்னியதால், அவளுடைய கூந்தலில் இருந்த ஆபரணம் ஏதோ ஒன்று கீழே விழுந்திருக்கும் என்று நினைத்து, கவ்வி, வந்து விட்டேன்.

''இங்கு வந்ததும், எல்லாரும் அவரவர் எடுத்து வந்த பழங்களை பகிர்ந்தனர். என் பங்கிற்கு, நான் எடுத்து வந்த நகத்தை கொடுத்தேன்; என் மீது கோபம் கொண்டு, அதை எறிந்து விட்டனர். அதை தான் குறிப்பிடுகிறார்...'' என்றது.

கிளி சொன்னதிலிருந்து, அப்பெண் இருக்குமிடம் தெரிந்து விட்டது. ஆனால், ஏழு கடல்களை தாண்டி, அவள் இருக்குமிடத்திற்கு எவ்விதம் செல்வது என்று, குழம்பினான், மந்திரி குமாரன்.

''இங்கிருந்து, 3 கி.மீ., துாரத்தில், ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அங்கு, இரண்டு அண்ட பேரண்ட பட்சிகள் இருக்கின்றன. எப்படியாவது அதனிடம், அன்பு கொண்டால், ஏழு கடல்களை தாண்டி, அந்த பெண் வசிக்கும் தீவை அடையலாம்...'' என்றது.

கிளி சொன்ன ஆலமரத்தடிக்குச் சென்ற சமயத்தில், இரண்டு பறவைகளும் இரை தேடுவதற்காக, வெளியே சென்றிருப்பதைக் கண்டான். பறவைகளின் வருகைக்காக, அவன் காத்திருந்த போது, பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறி, அண்ட, பேரண்ட பட்சிகளின் குஞ்சுகளை சாப்பிட முயன்றது.

இதைக் கண்ட மந்திரிகுமரான் சட்டென்று, தன்னுடைய உடைவாளை உருவி, அந்த பாம்பைக் கொன்று, பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றினான்; பறவைக் குஞ்சுகள் மந்திரி குமாரனை நன்றியுடன் பார்த்தன.

- தொடரும்...

நன்றி: கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us