தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அது ஒரு பிணம்!

அது ஒரு பிணம்!

அது ஒரு பிணம்!


PUBLISHED ON : ஆக 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் கஷ்டப்பட்டு நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தார் கதிரேசன்.

அவருக்கு இரு மகன்கள்; மூத்தவன் முனியப்பன்; இளையவன் பெரியசாமி.

திடீரென ஒரு நாள், இறந்து போனார் கதிரேசன். சொத்துக்களை பங்கு போடுவதில் மகன்களுக்குள் சண்டை வந்தது; ஊரார் பஞ்சாயத்து செய்தனர்; இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.

'பக்கத்து ஊரில் நீதிமான் ஒருவர் உள்ளார்; அவரிடம் சென்றால், உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைப்பார்...' என்றார் உறவினர் ஒருவர்.

மறுநாள் இருவரும், அவரை தேடிச் சென்றனர். வழியில் உள்ள வயல் வெளியில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம், 'உங்கள் ஊர்த் தலைவரைப் பார்க்க வேண்டும்' என்றனர்.

'நாங்கள் அவருடைய வேலைக்காரர்கள் தான்; எங்கள் முதலாளிக்கு காது கேட்கும் திறன் இல்லையே...' என்றனர்.

அண்ணனும், தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே ஊருக்குள் சென்றனர்.

ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் எதிரே வந்தாள்; அவளை நிறுத்தி, 'அம்மா... இந்த ஊர் தலைவரைப் பார்க்க வந்திருக்கிறோம்; அவருடைய வீடு எங்கே உள்ளது...' என்று கேட்டனர்.

அந்தப் பெண், ''நான் ஊர்த்தலைவரின் மகள் தான்... என் தந்தைக்கு கண் தெரியாதே; அவரையா பார்க்க வந்தீர்கள்...'' என்றாள்.

அவள் பின்னாடியே, சென்றனர் சகோதரர்கள். ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்; வாசலில், ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

அவளிடம், ''அம்மா... நாங்கள் ஊர் தலைவரை பார்க்க வேண்டும்...'' என்றனர்.

உடனே அந்த பெண், ''அந்த பிணம் வீட்டிற்குள் தான் உள்ளது...'' என்றாள்.

பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தார் ஊர்த்தலைவர். இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, '' நீங்கள் வந்த காரியத்தை சொல்லுங்கள்,'' என்றார்.

அப்போது சகோதரர்கள், 'ஐயா... வரும் வழியில் உங்கள் வீட்டைப் பற்றி விசாரித்தோம். சிலர், உங்களை காதுகேட்காதவர் என்றனர்; ஒரு பெண் உங்களை பார்வையற்றவர் என்றாள்; இன்னொரு பெண், பிணம் என்றாள்; காரணம் தெரிந்து கொள்ளலாமா...' என்றனர்.

அதற்கு அவர், ''என் வேலைக்காரர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; நான் மறுத்து விடுவதால் காதுகேளாதவன் என்கின்றனர்; என் மகளுக்கு தகுந்த மணமகன் கிடைக்கவில்லை; அதனால், அவள் என்னை, கண்தெரியாதவன் என்பாள்.

''எனக்கு நான்கு மனைவியர்; அவர்களில் ஒருத்தியைத் தான் வாசலில் பார்த்தீர்கள்; இன்னொரு மனைவி மீது புகார் சொன்னாள்; நான் தட்டிகேட்கவில்லை; அதனால் தான் என்னை பிணம் என்றாள்,'' என்று விளக்கம் சொன்னார்.

'இவருக்கே இத்தனை பிரச்னையா' என்று நினைத்த சகோதரர்கள், 'நம் பிரச்னையை நாமே பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம்' என்ற முடிவுடன், அவரை வணங்கி ஊர் திரும்பினர்.

என்ன குட்டீஸ்... உலகில் பிரச்னை இல்லாதவர்களே கிடையாது; நமக்கு மட்டும் தான் இவ்வளவு பிரச்னை என்று நினைத்து, மற்றவர் உதவியை நாடுவதை விட, நாமே யோசித்து முடித்துக் கொள்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us