PUBLISHED ON : ஆக 03, 2018

ஒரு ஊரில், ஏழை வணிகன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் செல்வராசன்.
ஒரு நாள், குதிரையில், பொருட்களுடன் வெளியூர் சந்தைக்கு சென்றான்.
பொருட்களை இறக்கி வைத்தவன், குதிரையை எங்கே கட்டுவது என்று யோசித்தான்.
அப்போது, அருகில் இருந்த ஒரு வணிகர், ''தம்பி... இந்த ஊர், மிகப்பெரிய செல்வந்தர் மகாதேவன் என்பவருக்கு சொந்தமானது. உன் குதிரையை, பக்கத்துக் காட்டில் மேய விடு; நானும், என் குதிரையை அங்கே தான் மேய விட்டுள்ளேன்...'' என்றார்.
அப்படியே செய்து விட்டு, வியாபாரத்தில் ஈடுபட்டான் செல்வராசன். நல்ல வியாபாரம்; ஊருக்கு கிளம்ப நினைத்த போது குதிரையை தேடினான்.
அங்கே, புலியால் அடித்துக் கொல்லப்பட்டு, துண்டு துண்டாக கிடந்தது குதிரை. செல்வராசன் வருந்தினான்; அருகிலிருந்த வியாபாரியிடம் சொன்னான்.
''தம்பி... கவலைப்படாதே... உன் இழப்பை, செல்வந்தரிடம் சொல்; நிச்சயமாக இழப்பீடு தருவார்...'' என்றான்.
செல்வந்தரிடம் சென்றான்.
''ஐயா... நான் ஏழை வியாபாரி; உங்களையும், கடவுளையும் நம்பித்தான் என் குதிரையை, காட்டில் மேய விட்டேன்; ஆனால், புலி அடித்துக் கொன்று விட்டது; என்னால் இன்னொரு குதிரை வாங்க முடியாது; நீங்கள் தான் உதவ வேண்டும்...'' என்றான்.
''தம்பி... என்னையும், கடவுளையும் நம்பினேன் என்று சொன்னாய்; அதனால், நீ குதிரை வாங்க, பாதி பணம் அதாவது, 50 சதவீதம் நான் தருகிறேன்; மீதி, 50 சவீதப் பணத்தை கடவுளிடம் வாங்கிக் கொள்...'' என்றார்.
சொன்னபடி, 50 சதவீத பணத்தையும் கொடுத்தார்; புலம்பியபடி அருகிலிருந்த கோவிலுக்கு போனான் செல்வராசன்.
அங்கே பூசாரியைப் பார்த்ததும்,
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
''பூசாரியே... கடவுளிடம் தினமும் வழிபாடு செய்கிறீர்கள்; நீங்கள் யாருக்குச் சொந்தம்...'' என்று கேட்டான்.
''நான் கடவுளுக்குச் சொந்தமானவன்...'' என்று பெருமையுடன் சொன்னார், பூசாரி.
''அப்படியானால், கடவுள் தர வேண்டிய, 50 சதவீத பணத்தை நீங்கள் தான் தர வேண்டும்...'' என்று செல்வராசன் கேட்டதும், பூசாரியின் முகம் வெளிறியது.
''இல்லையில்லை... பூஜை செய்வது தான் என் வேலை; மற்றபடி கடவுளுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...'' என்றார்.
பூசாரியை, நீதிபதியிடம் அழைத்துச் சென்று, நடந்ததை கூறினான் செல்வராசன்.
பூசாரியிடம், ''நீ கடவுளுக்குச் சொந்தக்காரர் என்றால், அவன் கேட்கும், பணத்தைக் கொடுத்து விடு; கடவுளுக்கும், உனக்கும் சம்பந்தம் இல்லை என்றால், கோவிலை விட்டு வெளியேறு...'' என்றார் நீதிபதி.
வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்த பூசாரி, பணத்தை எடுத்து, செல்வராசனிடம் நீட்டினார்.
தன் புத்திசாலினத்தால், குதிரை வாங்க பணம் தயார் செய்து விட்ட செல்வராசன், பூசாரிக்கு நன்றி தெரிவித்து, ஊருக்கு கிளம்பினான்.
குட்டீஸ்... புத்தியிருந்தால் போதும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கலாம் என்பது புரியுதா...
