
இந்தியர்கள் அனைவர் மனதிலும் என்றென்றும் நீங்காமல் இருக்க வேண்டிய நாள் ஆகஸ்ட் 15 அல்லவா?
ஆமாம்! நாம் சுதந்திர மனிதர்களாக, இந்தியர்களாக இன்று இருப்பதற்கு, இந்த பொன்னான நாள்தானே பெருந்துவக்கம்!
சும்மாவா கிடைத்தது சுதந்திரம்?
எவ்வளவு பேர் - எவ்வளவு தியாகங்கள்...
தியாகம் என்பது சின்ன விஷயத்தி லிருந்து வாழ்வு, உயிர் என்னும் பெரிய விஷயம் வரை நீண்டது. தன்னலமற்ற எண்ணற்றோரின் தியாகமே நமது இந்த வாழ்வு.
சுதந்திர போராட்டத்தில் பெண்கள்!
பெண்மை என்பதே தியாகத்தால் உருவானது. அவர்களின் தியாகம்தான் சுதந்திரம் கிடைத்ததற்கு முக்கிய பெருங்காரணம்.
ஆண்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோது, வீட்டை கவனித்து கொண்டது பெண்கள்தானே. சுதந்திர போராட்டத்தில் ஆண் தன்னை அர்ப்பணிக்கும்போது, -காணாமல் போகலாம்; காயம்படலாம்; கைதாகலாம், வீரமரணமும் அடையலாம். எந்த நிலமையானாலும் அங்கே வீட்டை காப்பது பெண்தான்.
அதுவும் சாதாரண போராட்ட மல்லவே. இதில் களத்தில் இறங்கி சுதந்திரத்திற்காக போராடுவது என்றால், அது எவ்வளவு பெரிய செயல் என்று உணர வேண்டும். அப்படிப்பட்ட பெரும் தியாகத்தை செய்த பெண்களை பற்றி எண்ணும்போது நம் கண்களும், உள்ளமும் கனிகிறது.
ராணி வேலுநாச்சியார்!
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின், சிவகங்கை பகுதி யின் ராணி மற்றும் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் விடுதலை போராட்ட தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை என்ற பெருமைக்கும் உரியவர்.
வேலுநாச்சியார், 1730ல் பிறந்தார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார். 1772ல் ஆங்கிலேயர், முத்துவடுக நாதரை கொன்று சிவகங்கையை கைப்பற்றினர்.
மனம் தளராத வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஹைதர் அலி உதவி யுடன், மருது சகோதரர்களின் படைக்கு தலைமையேற்று, ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, 1780ல் சிவகங்கையை மீட்டார்.
காந்தியின் மகள்!
'காந்தியின் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்ட அம்புஜத்தம்மாள், 1899ல் பிறந்தார். பல மொழிகளை கற்ற இவர், எளிமையாக வாழ்ந்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி போன்றவர் களோடு நட்பு கொண்டு, பெண்ணடி மைக்கு எதிராக போராடினார். இதனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இக்கால அவ்வையார்!
அசலாம்பிகை அம்மையார், 1875ல் திண்டிவனத்தில், இரட்டனை எனும் ஊரில் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியத்தில் புலமை பெற்ற இவர், மற்ற பெண்களும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். இவரை, 'இக்கால அவ்வையார்' என்று அழைக்கின்றனர்.
தீயமுறைக்கு எதிராக அமிர்தம்!
தமிழகத்தின், 'அன்னி பெசன்ட்' என்றழைக்கப்பட்டவர் ராமாமிர்தம். 1883ல் மயிலாடுதுறை அருகே மூவலுார் கிராமத்தில் பிறந்தவர். பெண் சமூக சீர்திருத்தவாதியான இவர், தேவதாசி என்னும் தீயமுறையை ஒழிக்கவும், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்.
காந்தியின் ஜான்சிராணி!
அஞ்சலையம்மாள், 1890ல் கடலுாரில் பிறந்தார். 'தென்னாட்டின் ஜான்சிராணி' என அழைத்தார் காந்தி.
கடந்த 1921 முதல் பொது வாழ்வில் ஈடுபட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம்; உப்பு காய்ச்சும் போராட்டம்; வெள்ளயனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் பங்கேற்று, பல முறை சிறை சென்றார்.
மலேசிய பத்மஸ்ரீ
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஜானகி ஆதி நாகப்பன். சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்.
தன்னுடைய, 18வது வயதிலேயே இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணை தளபதியாக பதவி உயர்ந்தவர்.
பர்மா - இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனை யாக களம் கண்டவர். சுபாஷ் சந்திரபோஸ் நம்பிக்கைக்கு பாத்திரமாகத் திகழ்ந்து, பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்பட்டவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.
தன்னையே திரியாக்கியவர்!
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்ஷுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் போராளி குயிலி.
வேலுநாச்சியாரின் படைபிரிவில் மிக முக்கியமானவர் இவர். முதல் தற்கொலை போராளியும் கூட. சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று, கொலு தரிசனத்திற்கு பெண் களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.
இதை, பயன்படுத்தி பெண்கள் படையில் இருந்த, 'குயிலி' தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி, தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து, தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தார்.
எதிரியிடம் அடிபணிவதை விட ராம்காட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங், மனைவி அவந்திபாயை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிசும் இல்லாத நிலையில், ஆங்கிலேயே அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது.
நம் நாட்டை ஆங்கிலேயர்களிட மிருந்து மீட்க உறுதி பூண்டார், அவந்திபாய்.
நான்காயிரம் வீரர்களை திரட்டி, 1857ம் ஆண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக படையெடுத்து புறப்பட்டார் இவர். மிகவும் தைரியமாக போர் புரிந்தும் கூட, ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
தோல்வியை தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி, தன் வாளை கொண்டு தன்னை தானே மாய்த்துக் கொண்டார்.
ராணி லட்சுமிபாய்க்கு டூப்பு!
இந்திய கிளர்ச்சியின் போது ஜான்சி போரில் முக்கிய பங்கு வகித்த சுதந்திர போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய். இவர் ஜான்சிராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார்.
உயரிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இருந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகள் எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் இணைந்து அவருக்கு அறிவுரை கூறக்கூடிய நிலைக்கு உயர்ந்தார்.
இந்திய கிளர்ச்சியின்போது ஜான்சி போரின் உச்சக்கட்டத்திலே, ஜல்காரி பாய் ஆங்கிலேயே அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ராணி லட்சுமிபாயை போல் உடை அணிந்து, படைக்கு தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டு பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.
ஜலகாரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட 'புந்தேல்கண்ட்' பகுதியை சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும், பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்து போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன.
ராணின்னா ராணிதான்!
ஜான்சி நாட்டின் ராணி, - ராணி லட்சுமிபாய். 1857 இந்திய கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி.
பிரிட்டிஷாருக்கு எதிராக படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலை போரில் தீவிரமாக இறங்கிய இவர், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
இவர்களைத் தவிர, பத்மாசினி யம்மாள் பங்கஜத்தமாள், சரஸ்வதி, பாண்டுரங்கம், பர்வத வர்த்தினி, மஞ்சு அம்மாள், அகிலாண்டாத்தம்மாள், சகுந்தலா பாய் போன்ற எண்ணற்றோரும் விடுதலைக்காக போராடிய வீரமங்கைகளாவர்.
அவர்களின் பாதம் தொட்டு வணங்குவோம்! வந்தே மாதரம் என முழங்குவோம்!