
ஒருநாள் அதிகாலை பசியுடன் நரி ஒன்று பண்ணை அருகில் வந்தது. அங்குள்ள கோழிகளில் ஒன்றை பிடித்துத் தின்று பசியாற விரும்பியது. வேலியின் இடையே சிரமப்பட்டு உள்ளே புகுந்து சென்றது. அங்கு விளைந்திருந்த பயிர்களின் நடுவில் சுருண்டு படுத்துக் கொண்டது.
சற்றுத் தொலைவில் களத்து மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த பெட்டைக் கோழிகள் நரியைப் பார்த்து விட்டன. உடனே பயந்து கத்தியபடியே அப்பால் ஓடின. குப்பை மேட்டில் ஒரு சேவல் அமர்ந்து வெயிலில் உறங்கிக் கொண்டிருந்தது.
சேவலைத் தின்றால் சுவையாயிருக்கும் என்று எண்ணிய நரி, பயிர்களின் இடையே மெல்ல மெல்ல நகர்ந்து சேவலை நெருங்கிச் சென்றது. திடீரென்று விழித்த சேவல், நரியிடம் சிக்காமல் பறந்து அப்பால் போனது.
''சேவலே! ஏன் என்னைக் கண்டு அஞ்சுகிறாய்? உன் குரலைக் கேட்டு மகிழ, நான் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறேன் தெரியுமா?'' என்று அன்பாக கேட்டது நரி.
''நரியாரே, என்னை ஏமாற்றப் பார்க்கிறீரே!'' என்று கேட்டது சேவல்.
''உறுதியாகச் சொல்கிறேன். என்னால் உனக்குத் துன்பம் நேர்ந்தால், என் காலை வேண்டுமானாலும் வெட்டப்படும். எனக்காக, ஒரே ஒருமுறை கூவு; கேட்க ஆவலாயிருக்கிறேன்!'' என்று கேட்டது.
சேவலுக்கு நம்பிக்கை வரவில்லை.
ஒரு கண்ணைத் திறந்தப்படியே நரியைப் பார்த்து ஒருமுறை கூவியது.
''ஆஹா, நன்றாயிருக்கிறது. ஆனால், நீ குரலை அடக்கிக் கொண்டு கூவுகிறாய். நீ உரத்த குரலில் கூவினால் அல்லவா நீண்ட தொலைவுக்குக் கேட்கும்,'' என்றது நரி.
நரியின் வஞ்சகப் புகழ்ச்சியில் மயங்கிய சேவல், தன் வலிமை கொண்ட மட்டும் முயன்று, 'கொக்கரக்கோ' என்று உரத்த குரலில் நீளமாகக் கூவியது.
அப்போது அதன் இரண்டு கண்களும் மூடிக் கொண்டன. அதை தானே நரி எதிர்பார்த்தது. உடனே, அது சேவலின் மேல் பாய்ந்து கழுத்தை பிடித்துக் கொண்டது. நல்ல இரை கிடைத்த மகிழ்ச்சியில் அது ஓடத் துவங்கியது.
அதைப் பார்த்த மற்ற கோழிகள் பயந்து பெருங் கூச்சலிட்டன. கூச்சலைக் கேட்ட பண்ணையார், ஓடி வந்து சேவலுடன் ஓடும் நரியைக் கண்டார். சத்தமிட்டபடியே அதைத் தொடர்ந்து ஓடினார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற பணியாளர்களும் பின் தொடர்ந்து ஓடினர். நரியைத் திட்டிக் கொண்டே துரத்தினர்.
'எப்படியாவது தான் நரியிடமிருந்து தப்பிக்க வேண்டும்' என்று திட்டமிட்டது சேவல்.
''நரியாரே! என்ன இப்படியெல்லாம் உம்மைத் திட்டுகிறார்களே? அவர்களை ஒன்றும் சொல்லாமல் போவது உமக்குப் பெருமை இல்லை; எனக்கே வெட்கமாயிருக்கிறது!'' என்றது சேவல்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட நரி, ''போங்கடா! எவ்வளவு தொலைவு வந்தாலும் உங்களால் என்னைப் பிடிக்கவே முடியாது'' என்றது.
எல்லாரையும் ஏமாற்றும் நரி, இந்த முறை தானே ஏமாந்தது.
அது பேசத் துவங்கியதும், சேவல் தன் சிறகுகளை அடித்துக் கொண்டு தப்பியது. அருகில் இருந்த மரத்தின் மேல் பறந்து சென்று அமர்ந்து கொண்டது. ஏமாந்த நரி மரத்தடியில் நின்று தன்னிடமிருந்து தப்பித்த சேவலை கோபத்தோடு பார்த்தது.
சேவல் கேலியுடன் நரியைப் பார்த்து, ''நரியாரே! உமக்குப் பசியில்லாவிட்டால் சற்று நேரம் இரும். உமக்குப் பிடித்த கூவலை மீண்டும் ஒருமுறை கேட்டுக் போகலாம்,'' என்றது சேவல்.
வேலையாட்களும், நாய்களும் தன்னை நெருங்குவதைக் கண்ட நரி, உயிர் பிழைத்தால் போதுமென்று காட்டை நோக்கி தலைதெறிக்க ஓடியது.