
இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக இருந்தான்.
ஒருநாள் -
இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ''அர்ஜுனா, நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள், நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில் வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள். நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,'' என்றான்.
இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணிமகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக் கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான். காண்டீபத்தைக் கரத்தில் அளித்தான்.
ரதம் புறப்பட்டது. வெகுவிரைவில் ரதம் சமுத்திரத்தை தாண்டிச் சென்றது. மேகங்களின் முழக்கம் போல், அதன் ஒலி திசைகளை நடுங்கச் செய்தது. நிவாதகவசர்கள் வசித்த தீவை அடைந்ததும் ரதம் பூமியில் இறங்கியது. உடனே தேவ தத்தமெனும் சங்கை எடுத்து ஊதினான் அர்ஜுனன்.
கவசமணிந்து இரும்பினாலான பற்பல ஆயுதங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான நிவாத கவசர்கள், அர்ஜுனனை நோக்கி கடல்புரண்டு வருவதைப் போல் ஆர்ப்பரித்து ஓடி வரலாயினர்.
அர்ஜுனன் துணிவுடன் நின்றான். சற்றும் பதறாது அம்புகளை எய்தான். கடுமையான போர் நடந்தது. ரதத்தை மேலே செல்லவிடாது அரக்கர்கள் தடுத்தனர். கூரிய முனையுடைய சூலாயுதங்கள் அர்ஜுனனைத் தாக்கின. காண்டீபத்தின் முழக்கம் வெகுதூரம் கேட்டது.
அர்ஜுனனின் வீரத்திற்கு முன் நிற்க முடியாத எதிரிகள், யுத்த களத்தை விட்டு ஓடலாயினர்.
எதிரிகள் குவியல் குவியலாக யுத்தகளத்தில் சரிந்து வீழ்ந்தனர். குருதி வெள்ளம் ஓடியது.
இனி அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாதெனக் கண்ட நிவாதகவசர்கள், மாய யுத்தம் புரியத் துவங்கினர்.
திடீர் என அர்ஜுனன் மீது கற்கள் விழுந்தன. இந்திராஸ்திரத்தைப் பிரயோகித்து அர்ஜுனன் அக்கற்களைப் பொடிப் பொடியாக்கினான்.
பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் இருள் சூழ்ந்து வானத்திலிருந்து பெரும், பெரும் துளிகள் விழுந்தன.
'விசேஷன்' என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, மழையைத் தடுத்து விட்டான் அர்ஜுனன். புயல்போல் பெருங்காற்று வீசியது. வருணதேவன் அளித்த அஸ்திரம் காற்றின் வேகத்தை நொடியில் அடக்கியது. ஆயினும் மனம் தளராத அரக்கர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் அஸ்திரங்களையும், நெருப்பையும் வாரி வீசினர்.
அரக்கர்களின் மாயையால் ஏற்பட்டிருந்த இருளை, ஒரு அம்பால் விலக்கினான் அர்ஜுனன்.
அர்ஜுனனை இவ்விதமாகப் பயமுறுத்த முடியாதெனக் கண்ட அரக்கர்கள், இன்னுமொரு தந்திரத்தைக் கையாண்டனர். மாயாவிகளான அவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்று போரிட்டனர். குரலும், வில்லை நாணேற்றும் ஒலியும் கேட்டனவே தவிர, எதிரிகள் புலப்படவில்லை.
அர்ஜுனன் மனம் தளரவில்லை. ஒலி வரும் இலக்கை நோக்கி அம்பெய்வதில் அவன் வல்லவனாயிற்றே? குரு துரோணரிடம், 'சப்தவேதி' பாணம் எய்வதைக் கற்றிருந்தான். ஆகையால் கண்களுக்குப் புலப்படாது நின்ற எதிரிகள் கூட மடிந்து வீழ்ந்தனர்.
அர்ஜுனன் வென்று வெற்றிமாலையை சூடினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?