தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொறாமை!

பொறாமை!

பொறாமை!


PUBLISHED ON : டிச 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகானந்தா முற்றும் துறந்த முனிவர்; பொதிகைமலைச் சாரலில், ஒரு ஆசிரமத்தை ஏற்படுத்தி வசித்து வந்தார். தவ வலிமையால், காட்டு விலங்குகள் அவரை நெருங்குவதில்லை.

அவரிடம், நான்கு சீடர்கள் இருந்தனர். அதில் சுதாகரன், அதிபுத்திசாலி. அவருக்கு இயல்பாகவே, அவன் மீது தனி அபிமானம் உண்டு. அதனால், மற்ற சீடர்கள், பொறாமை கொண்டு, சுதாகரன் மீது, இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வந்தனர்.

இந்த கெட்ட எண்ணத்தை புரிந்த முருகானந்தா, அந்த சீடர்களுக்கு பாடம் புகட்ட நினைத்தார்.

ஒரு நாள் -

முனிவர் தவம் இருந்தார். சீடர்களும் கண்ணை மூடி, யோக நிஷ்டையில் இருந்தனர். திடீரென ஆசிரமம் பற்றி எரியத் துவங்கியது. மூன்று சீடர்களும் பதறி எழுந்து, முனிவரை உலுக்கி, 'குருவே ஆசிரமம் தீப்பற்றி எரிகிறது; தப்பி ஓடி விடுவோம்...' என்று கூறியபடி, அவரது பதிலைக் கூட எதிர்பாராமல், தலைதெறிக்க ஓடினர்.

நீண்ட நேரத்திற்குப் பின், ஆசிரமத்துக்கு திரும்பினர்.

ஆசிரமத்துக்கு, சிறு சேதம் கூட ஏற்பட்டிருக்கவில்லை; தீப்பற்றிய சுவடே தெரியவில்லை. முனிவரும், சுதாகரனும், சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை வியப்பாக பார்த்த மூன்று சீடர்களும், 'குருவே... வியப்பாக இருக்கிறதே... எப்படி தீயை அணைத்தீர்கள்...' என்றனர்.

'ஆசிரமத்தில் தீ விபத்து ஏதும் நடக்கவில்லை. அப்படி, ஒரு மாயத்தோற்றத்தை, நான் தான் ஏற்படுத்தினேன். நீங்கள், உண்மையான யோக நிஷ்டையில் இல்லாததால், அதை நம்பிவிட்டீர்கள். கற்பதில் உங்களுக்கு ஆர்வமில்லை; இங்கு, வீணாக காலத்தைக் கடத்தி கொண்டிருக்கிறீர்கள். இனியும், என் முன் நிற்காமல், ஓடி விடுங்கள்...' என்று கடிந்தார்.

தவறை உணர்ந்து, அவரது பாதம் தொட்டு வணங்கினர்; மன்னித்து ஏற்றுக்கொள்ள இறைஞ்சினர்; சுதாகரன் மீது பொறாமைப்பட்டதற்கு வருந்தினர்.

அவர்களை மன்னித்து, 'இனி சுதாகரனிடமே பாடம் கற்றுக் கொள்ளுங்கள்...' என்று கூறி, தியானத்தில் ஆழ்ந்தார் முனிவர்.

பொறாமை, வாழ்வில் உயர்வை தராது என்ற பாடத்தை கற்றுக் கொண்டனர் சீடர்கள். அன்று முதல், அடக்கத்தோடு கற்க ஆரம்பித்தனர்.

தளிர்களே... பொறாமை குணம், உண்மையை அறிந்து கொள்வதை தடுக்கும். சிந்திக்கும் ஆற்றலை கெடுக்கும். அந்த குணத்தை விட்டொழித்தால் சிறப்பாக வாழலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us