PUBLISHED ON : டிச 28, 2019

புகை வரையும் ஓவியம்!
காகிதத்தை தவிர்த்து, வானத்தில் எழுதினால் எப்படியிருக்கும். அமெரிக்கா, கலிபோர்னியாவில், செப்., 14, 2012ல், இப்படி ஒரு விந்தை காட்சி தெரிந்தது. கணித மாறிலி, 'பை'யின் மதிப்பு, ஆயிரம் இலக்கங்களுடன், வெண்ணிறத்தில் வானில் தோன்றியது.
ஐந்து விமானங்கள் கொண்ட அணி, குறிப்பிட்ட ஒழுங்கில் பறந்து, வெண் புகையைக் கக்கி, இந்த எண்களை எழுதியிருந்தன. இதற்காக, இரண்டு மணி நேரத்தில், 160 கி.மீ., துாரம் பறந்தன விமானங்கள்.
வானில் புகையால் எழுதுவதை, 'ஸ்கை ரைட்டிங்' என்பர். இதை, புகை வரை எழுத்து என, தமிழில் குறிப்பிடலாம்.
சிறிய விமானங்களில் பறந்து, புகையால் வானில் எழுதும் நுாதன கலை. வெண் புகையை உருவாக்க, விமான இன்ஜின் கக்கும், சூடான புகையின் மீது, நச்சுத்தன்மையற்ற ஒருவகை எண்ணெய்யை தெளிப்பர்.
புதிய தயாரிப்புகளை பிரபலப்படுத்த, பெரிய நிறுவனங்கள், இந்த முறையை பயன்படுத்துகின்றன. பெரும் செல்வந்தர் குடும்ப திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளில், நுாதனமாக வாழ்த்து கூறவும் இந்த முறை பயன்படுகிறது.
வானில், விமானத்தால் எழுதுவது, துவக்கத்தில் மிகக் கடின பணியாக இருந்தது. பல விமானங்கள் இணையாக பறந்து, சிக்கலாக வளைந்து நெளிய வேண்டும். சரியான எழுத்து வடிவத்தை உருவாக்க தலைகீழாகவும் பறக்க வேண்டும்.
ஆறு எழுத்துகள் அல்லது எண்கள் வரை எழுத, ஒரு விமானம் போதும். ஆனால், 30 எழுத்துகள் வரை உள்ள தகவல் என்றால், ஒரே நேரத்தில், ஐந்து விமானங்கள் பறக்க வேண்டும்.
அடுத்தடுத்து எழுதி முடிக்கும் முன், மறைந்து விடாமல் இருக்க, விமானிகள், திறமையாக செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட விமானிகள், விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருந்தனர். வானிலையும் ஒத்துழைக்க வேண்டும். இப்படி ஒத்துழைப்பு இருந்தால் தான், செயல் சாத்தியமாகும்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து விமானப் படையில் பணியாற்றிய ஜான் சாவேஜ், இந்த கலையை விளம்பர நிறுவனங்களுக்காக, 1922ல் பிரபலப்படுத்தினார். இதற்காக, விமானிகள் அணி ஒன்றை உருவாக்கினார்.
அமெரிக்காவில் பிரபல ஓட்டல் விளம்பரத்துக்காக, 'ஹலோ... யு.எஸ்.ஏ., வான்டர்பில்ட் ஓட்டலை, 7200 என்ற தொலைபேசி எண்ணில் அழையுங்கள்...' என, ஆங்கிலத்தில் எழுதினார். அந்த ஓட்டலை, 47 ஆயிரம் பேர் உடனடியாக தொடர்பு கொண்டனர்.
இப்படியாக, இந்த வகை விளம்பர முறை புகழ் பெற்றது.
இந்த முறையில், ஒரு எழுத்தை, வானில் எழுத, 1 லட்ச ரூபாய் வரை அப்போது செலவானது; பல எழுத்து வாக்கியத்தை எழுத, பல கோடிகள் செலவாகும் என்பதால், இந்த கலை வளரவில்லை.
ராட்சத பந்துகளில் விளம்பரம் எழுதி நெடுஞ்சாலை ஓரம் பறக்கவிடுவது, தாழ்வாகப் பறக்கும் விமானங்களில், பளிச்சிடும், 'பேனர்' என்ற பதாகையை விமானங்களில் கட்டி, தாழ்வாக பறத்தல் போன்றவை பிரபலமானதால், புகைவரை விளம்பர கலை கவர்ச்சியை இழந்தது. இது பிரபலமாகி மிளிர முடியவில்லை.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
