தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கேலி!

கேலி!

கேலி!


PUBLISHED ON : ஏப் 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாதன்குளம் அருகே கரிசல்காட்டு பகுதியில் நிறைய காட்டுச் செடிகள் முளைத்திருந்தன.

ஒரு நாள் -

அந்த வழியே ஒரு மைனா பறந்தது. அது எச்சமிட்ட போது வேப்பம் பழத்தின் விதையும் இருந்தது. எச்சத்துடன் சேர்ந்து கரிசல் காட்டில் விழுந்தது விதை.

அதை பார்த்த செடிகள், 'நீ, ரொம்பவே அசிங்கமானவன்; பறவையின் எச்சத்தில் கலந்திருக்கிறாய்; உன்னைப் பார்த்தால், வாந்தி வருகிறது... சகிக்கவில்லை...' என, வெறுப்பு வார்த்தைகளை கக்கின.

புன்னகையுடன், 'என்னையா கேலி செய்கிறீர்கள்; விண்ணில் இருந்து மழைத்துளி விழட்டும்; அப்போது, முளைத்து எழுந்து, துளிர்த்து, வளர்ந்து கனியும், நிழலும் தருவேன்; அப்போது நான் யாரென உங்களுக்கு தெரியும்...' என்றது வேப்பம் விதை.

கோடைகாலம் துவங்கியது. அப்போதைக்கு மழை வரும் அறிகுறி தெரியவில்லை.

ஏளனமுடன், 'கொளுத்தும் வெயிலில், காய்ந்து கருவாடாகி விடுவாய்...' என நக்கலாக சிரித்து, கும்மாளமிட்டன காட்டுச்செடிகள்.

எதையும் பொருட்படுத்தாமல் தவம் மேற்கொள்வது போல் காட்டில் கிடந்தது, வேப்பம் விதை.

நாட்கள் நகர்ந்தன -

திடீரென ஒருநாள் கோடை மழை பொழிந்தது.

பறவையின் எச்சத்துடன் கிடந்த வேப்பம் விதை, வீரியமாக முளைத்து, துளிர்த்து, வளர துவங்கியது.

நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மரமாகியது. காய்த்து, கனியும் தந்தது. மரத்தில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்தன.

வேப்ப மரத்தின் அபார வளர்ச்சியை கண்ட காட்டுச்செடிகள், கேலி செய்ததை எண்ணி, வேதனைப்பட்டன. நம்பிக்கை, உறுதியோடு, துணிந்து முளைத்ததை கண்டு தலைகுனிந்தன.

யாரையும் வெறுத்து ஒதுக்கி, கேலி செய்யக் கூடாது என்ற முடிவு செய்தன; மறக்காமல் அந்த வேப்பமரத்திடம் பணிந்து மன்னிப்பு கேட்டன.

மொட்டுகளே... யாரும் எளியவர், வறியவர் என எண்ணி கேலி செய்ய கூடாது.

எஸ்.டேனியல் ஜூலியட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us