தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜங்கிள் ஜான்! (2)

ஜங்கிள் ஜான்! (2)

ஜங்கிள் ஜான்! (2)


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மிருகங்களுடன் வளர்ந்த ஜங்கிள் ஜான், காட்டில் பாய்ந்த நீரோடை திடீர் என வற்றியது கண்டான். தாகத்தால் தவித்த விலங்குகளுக்கு தண்ணீரை தேடி சென்ற போது, பயங்கர கும்பலிடம் சிக்கிக்கொண்டான். இனி -

ஜங்கிள் ஜானிடம் அடி வாங்கி விழுந்த ஜம்போ, தெம்புடன் எழுந்து, 'இவனைக் கட்டி துாக்கி ஆத்துல போடுங்க...' என்று கட்டளையிட்டான்.

ஈட்டி முனையில் சுற்றிவளைத்து, ஜங்கிள் ஜான் கைகளை, கயிற்றால் கட்டி, துாக்கிச் சென்று, 'தொப்' என, ஆற்றில் போட்டது கும்பல். நீந்த முடியாமல் திணறி, 'ஓ...' என்று கத்தினான் ஜங்கிள் ஜான்; அந்த குரல் கேட்டு காடே அதிர்ந்தது.

அப்போது, பிளிறியபடி உதவிக்கு வந்து, தும்பிக்கையை நீட்டியது யானை. அதைப் பிடித்தபடி, வெளியே வந்தான் ஜான். அதற்குள், தீப்பந்தங்களால், யானையை விரட்டி அடித்தது கும்பல்.

தப்ப முடியாத நிலையில், 'ஜம்போ... நீ என்னை, எது வேண்டுமானாலும் செய்து கொள்; நான் பயப்பட போவதில்லை...' என்று தைரியமாக கூறினான் ஜங்கிள்.

'உன்னை ஒன்றும் செய்ய போவதில்லை; நீ வீரன் என, நிரூபித்தால் விடுவிப்பேன்...' என்ற ஜம்போ, கும்பல் புடை சூழ, மந்திர கிழவி முன் அவனை நிறுத்தினான்.

அவனை, கைதியாக பிடித்து அழைத்து சென்றாள் கிழவி. ஆயுதங்களுடன், பின் தொடர்ந்தது கும்பல். ஜங்கிள் ஜான் தோளில் அமர்ந்திருந்த குட்டிக் குரங்கு வாலால், அவன் முதுகை தடவி தேற்றியது. ஈட்டிகள் நெருங்கிய போது, வாலை ஆட்டி விரட்டியது.

ஒரு ஏரிக்கரைக்கு வந்தனர். அங்கு, ஜங்கிள் ஜானின் கை கட்டை அவிழ்த்து, 'இதோ... இந்த ஏரியில் மூழ்கி பாதாளத்திற்குச் சென்றால், அழகிய பொன்வாசல் கோபுரம் வரும்; அதையும் தாண்டி சென்றால், ஒரு சிறிய மாளிகை இருக்கும். அந்த மாளிகையில், சிங்க முகத்தில் கைப்பிடியுள்ள தங்க சிம்மாசனத்தை காணலாம்; அதில் நீ உட்கார்ந்தால், உன்னை மேலே அழைத்து வரும்...' என்றாள் மந்திர கிழவி.

குட்டிக் குரங்கை அன்புடன் தடவி, அமைதியாக காத்திருக்க கேட்டுக் கொண்ட ஜங்கிள் ஜான், ஏரிக்குள் குதித்தான். நீர் மிக குளிர்ச்சியாக இருந்ததால், கை, கால்கள் மரத்துப் போயின. சுற்று முற்றும் பார்த்தான்; நீரில் கொழுப்பு துண்டுகள் மிதந்து கொண்டிருந்தன; அவறை உடலில் தடவிக் கொண்டான்.

சிறிது துாரம் நீந்திய போது, பொன்வாசல் கோபுரத்தைக் கண்டான். அதற்குள் நுழைந்ததும், ஒரு முதலை, காலைப் பிடித்தது; சுதாகரித்தவன், அதன் வாயை பிளந்தான்.

தாடை விலகியதால், வலியால் அலறி, அவன் காலை விடுவித்தது.

அந்த முதலையின் முதுகில் அமர்ந்தான்; அது நிதானமாக நீந்தி, சிங்கமுக சிம்மாசனம் அருகே சென்றது. அங்கு, ராட்சத சிலந்திகள், வலை பின்னிக் கொண்டிருந்தன. இருள் கவிந்திருந்தது.

உடனே, முதலை மீதிருந்து இறங்கி கரையோரம் தடவினான்; வினோத கற்கள் இருப்பதை கண்டான்; ஒரு கல்லைப் புரட்டிய போது, ஒளி வெள்ளம் பாய்ந்தது.

அந்த வெளிச்சத்தில் சிறிய அறை ஒன்றை கண்டான்; அறைக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பு அமைத்தான்.

அறையினுள், சில வெள்ளை கற்களும், சருகுகளும் இருந்தன. சில கற்களை தேய்த்தான்; நெருப்பு உண்டாயிற்று. அந்த நெருப்பால், ராட்சத சிலந்திகளை கொன்றான். பின், கண்ணை கவரும் வகையில் மின்னிய, சிங்கமுக சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

இதற்கிடையே, மந்திர கிழவி, குட்டிக் குரங்கின் கால்களை கட்டி, வெயிலில் தொங்க விட்டிருந்தாள்; அது, 'கிரீச் கிரீச்' என கத்தியபடி, அழுது கொண்டிருந்தது.

சுற்றி நின்ற கும்பல், 'டம்... டம்...' என, பேரொலி எழுப்பி, பயங்கரமாகச் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.

நீண்ட நேரம், ஜங்கிள் ஜான் வெளியே வராததைக் கண்ட கும்பலுக்கு, ஒரே மகிழ்ச்சி; கும்மாளம் போட ஆரம்பித்தது. அளவுக்கு அதிகமான ஆட்டத்தால், பலர் மயங்கி விழுந்தனர்.

கபால மாலையை தடவியபடி, 'ஜங்கிள் ஜானின் கபாலமும், இதில் சேர்ந்தால், மிக அழகாக இருக்கும்' என எண்ணி, ஆனந்தக் கடலில் மிதந்தாள் மந்திர கிழவி.

அப்போது, எதிர்பாராத வகையில் சிங்கமுக சிம்மாசனத்தில், ஜங்கிள் ஜான் தோன்றினான்; அரண்டு போனாள் மந்திர கிழவி. மயங்கி கிடந்த கும்பல் எழுந்து, கண்களை அகல விரித்து நின்றது. செய்வதறியாது திகைத்தது.

உடனே, குரங்கு குட்டியின் கட்டுகளை அவிழ்த்தான் ஜங்கிள். அது, பாசத்துடன், அவன் மீது ஏறி, 'இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால், இந்த பாவிகள் என் கால்களை வெட்டியிருப்பானுங்க...' என, குமுறியது. அதன் கால்களை தடவிக் கொடுத்தான்.

கும்பல் தலைவன் ஜம்போ அடங்காமல், 'நான் தான் இந்த நாட்டின் தலைவன்; இது எங்கள் தந்தையர் ஆண்ட நாடு; என் தாத்தா அமர்ந்திருந்த சிம்மாசனத்தில் நான் தான் அமர்வேன்...' என்று கூறி, உட்காரச் சென்றான்.

குட்டிக் குரங்கு, சிம்மாசனத்தை, வாலை சுழற்றி இழுத்து விட, 'தொபுக்கடீர்...' என, விழுந்தான் ஜம்போ; அனைவரும் சிரித்தனர்.

கடும் கோபம் மூண்டதால், ஜங்கிள் ஜானை பழி வாங்க துடித்தான்; உடைவாளை வீச முயன்றான். அவனை லாவகமாக பிடித்து தள்ளினான் ஜான். அப்போது, சிம்மாசனம் சரிந்தது. அதில் சிக்கி, நசுங்கி மாண்டான் ஜம்போ.

அருகே நின்ற மரத்தில் ஏறிய குரங்கு குட்டி, ஒரு இடத்தை சுட்டிக் காட்டியது. அங்கே, நீரோடையை, கற்களால் தடுத்திருப்பதைக் கண்டான், ஜங்கிள் ஜான். அது, அந்த கும்பலின் வேலை என, புரிந்தது.

உடனே, அந்த கற்களை அகற்றும் படி, கட்டளையிட்டான். கற்களை நெம்பி புரட்டி அகற்றியது கும்பல். தண்ணீர் மீண்டும் நீரோடையில் பாய்ந்து ஓட ஆரம்பித்தது.

தாகத்தால் மயங்கிய மான்களும், புலிகளும் அருந்தி மகிழ்ந்தன; ஜங்கிள் ஜானை புகழ்ந்து பாராட்டின.

குட்டீஸ்... எந்த செயலையும் துணிச்சலாக செய்தால், தோல்வி இல்லை.

- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us