தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காஞ்சனா!

காஞ்சனா!

காஞ்சனா!


PUBLISHED ON : ஆக 08, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரட்டூர் என்ற சிற்றூரில் தாயம்மாள் என்ற கிழவி வாத்துக்களை வளர்த்து வந்தாள். அவள் பேத்தி அமுதா இருக்கும் வரை அவள் வாத்துக்களை மேய்த்து வந்தாள். அவள் நோய் வாய்ப்பட்டு இறந்து போகவே, தாயம்மாளே வாத்துக்களை மேய்த்து வந்தாள். வயதான காலத்தில் அது அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. வாத்துக்களை குளத்தில் நீந்தவிட்டு விட்டு அவள் கரையில் அமர்ந்தாள்.

அப்போது மரத்தடி ஒன்றின் கீழ் கவலையுடன் காஞ்சனா யோசித்தவாறு வந்து அமர்ந்தாள். தாயம்மாள் அவளை நோக்கிப் போனாள்.

''யார் நீ... இங்கே ஏன் வந்தாய்?'' என்று கேட்டாள்.

''எங்கு போவது என்றே எனக்குத் தெரியவில்லை. சாப்பிட்டு இரண்டு நாளாகிவிட்டது!''

''ஐயோ பாவமே!'' எனக் கூறி விட்டு, தனக்கு கொண்டு வந்திருந்த கஞ்சியையும், துவையலையும் அவளிடம் கொடுத்தாள்.

''நீ சாப்பிடு!''

''உங்களுக்கு?''

''நீதானே இரண்டு நாட்கள் சாப்பிட வில்லை. சாப்பிடு...'' அவள் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தாயம்மாள் காஞ்சனாவின் கதையைக் கேட்டறிந்தாள்.

''எனக்கு உன்னை மாதிரி பேத்தி இருந்தாள். அவள் இறந்து விட்டாள். அவள் தான் அதோ அந்தக் குளத்தில் நீந்தும் வாத்துக்களை வளர்த்தாள். இவைகளை மேய்க்க வயதான காலத்தில் எனக்குச் சிரமமாக இருக்கிறது. நீ என்னோடு வந்து விடு. என் பேத்தி போல் உன்னை நான் வளர்க்கிறேன்,'' என்றாள் தாயம்மாள்.

அதற்குச் சம்மதித்தாள் காஞ்சனா. வாத்துக்களை மேய்த்து விட்டு காஞ்சனாவைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள். வாத்துக்களை எப்படி வளர்க்க வேண்டும் என காஞ்சனாவிற்குக் கற்றுக் கொடுத்தாள்.

''எந்த ஜீவராசிகள் மீதும் நாம் அன்பு செலுத்தினால் அவை நம்மீது அன்பு செலுத்தும். அதனுடன் நெருங்கிப் பழகினால் அவைகளின் செய்கை மூலம் அவை நம்முடன் பேசும்!'' என்றாள் தாயம்மாள்.

அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனாள் காஞ்சானா.

வாத்துக்களை வளர்க்க ஆரம்பித்தாள் காஞ்சனா. அவைகள் தான், நில் என்றால் நிற்பதும், போ என்றால் போவதும் அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

தன் குரல் கேட்டால் எவ்வளவு தூரத்திலிருந்தும் அவைகள் ஓடிவருவதைப் பார்த்து அவள் பூரித்துப் போனாள். வாத்துக்கள் சேர்ந்து கத்துவது அவளுக்கு அவைகள் இசையை மீட்டுவது போல் இருக்கும்.

''வாத்துக்களுக்கு இவ்வளவு அறிவு இருக்கிறது. இவைகளுக்கு நாம் பலவும் கற்றுக் கொடுக்க முடியும். அவை கற்றுக் கொள்ளும் என நினைத்தாள். அவை வட்டத்திற்குள் பாயவும், கோலைத் தாண்டவும் கற்று கொடுத்தாள். அதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் ஆச்சரியப் பட்டனர்.

வாத்துக்களை மேயவிட்டு காஞ்சனா தன்னை மறந்து பாடுவாள். அவள் இனிமையான குரலில் பாடுவது கேட்டு, காரில் வந்த சிவகுமார் காரை நிறுத்தி விட்டு அதை ரசித்துக் கொண்டிருந்தார். அவள் பாடி முடித்த பின் தன் காரை ஓட்டிப் போனார்.

மறுநாள் காலையில் சிவகுமார், காஞ்சனாவிடம், ''நீதானே நேற்று குளக்கரையில் வாத்துக்களை மேய்த்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாய்?'' என்றார்

''ஆமாம்!''

''உன் பெயர்?''

''காஞ்சனா!''

''வெளியில் வரும்போது சுத்தமான உடையில் வரக்கூடாதா?'' என்றார்.

''இருப்பதே இது ஒன்றுதான். துவைத்துப் போட வேறு மாற்று உடை இல்லை!'' என்றாள்.

''நாளைக்கு இதே நேரம் இங்கு வா!'' என்றார்.

மறுநாள் அவளுக்கு உடுப்பு ஒன்று கொண்டு வந்து கொடுத்தார். அவள் முதலில் வாங்க மறுத்தாள். அவளைத் தேற்றி அதை வாங்க வைத்தார்.

மறுநாள் காஞ்சனா, தான் வாங்கிக் கொடுத்த உடையை அணியாமல் பழைய உடையிலே வந்தது ஆச்சரியத்தை அளித்தது.

''காஞ்சனா! நான் வாங்கிக் கொடுத்த உடுப்பை ஏன் அணியவில்லை!''

''மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! நேற்று இரவு குளிரினால் ஒரு ஏழைப் பெண் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து மனம் இளகியது. அந்தப் பெண்ணிடமே கொடுத்துவிட்டேன்!''

''பிறருக்கு நீ உதவ நினைக்கும் எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் உன்னைப் போல எல்லாச் சிறுவர்களுக்கும், சிறுமியர் களுக்கும் பிறக்க வேண்டும். காஞ்சனா நீ வாத்துத்தானே மேய்க்கிறாய். அதை விட்டு விட்டு என்னோடு வந்துவிடு. நான் உன்னை என் பிள்ளை போலப் பாவிக்கிறேன்!'' என்றார்.

''ஐயா! நீங்கள் என்னை அழைத்தற்கு நன்றி. நான் உங்களோடு வரும் நிலையில் இல்லை!'' என்றாள்.

''ஏன்?'' என்றார் சிவகுமார்.

''நான் கஷ்டப்படும் போது தாயம்மாள் என்கிற அம்மாதான் என்னை ஆதரித்தாள். அவர்களுக்கு இப்போது சரியாகக் கண் தெரியாது. எனக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்பதற்காக, அவர்களை விட்டுவிட்டு நான் வரத் தயாராக இல்லை!'' என்றாள் காஞ்சனா.

''உன் நல்ல எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். இவ்வளவு நல்ல பெண்ணாக இருப்பதால் உனக்கு வேண்டிய எல்லா உதவி களையும் நான் செய்கிறேன். தாயம்மாவுக்கு உதவியாக நீ அவர்களுடனே இரு. நான் செய்யும் உதவியினைப் பெற நீ மறுக்கக் கூடாது!''

''ஐயா! எனக்காவது சாப்பிட உணவு அன்றாடம் கிடைக்கிறது. இது கூட இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்க்கை யில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவுங் கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்!''

''நிச்சயமாகச் செய்வேன். இந்த ஊரிலே உள்ள ஏழை எளியவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்!'' என்றார் சிவகுமார். சொன்னதுபோல் செய்யவும் செய்தார்.

'வாத்து மேய்க்கும் பெண் காஞ்சனா தயவால், நமக்கெல்லாம் தினம் சாப்பாடு கிடைக்கிறது' என அந்த ஊர் ஏழை மக்கள் காஞ்சனாவை மனமாரப் பாராட்டினர்.

காஞ்சனா போல் சிறுவர், சிறுமியர் நாட்டிலே பலுகிப் பெருக வேண்டும் என நினைத்துக் கொண்டார் சிவகுமார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us