PUBLISHED ON : ஆக 08, 2014

அந்த நூற்றாண்டின் மாபெரும் குற்றம், பாவச் செயல் என்று பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதப்பட்டது. அந்தக் குற்றம் ஒரு திருட்டு. திருடு போனது தங்கக் கட்டிகளோ, பொன் ஆபரணங்களோ அல்ல. வெறும் ஒரு பாறைக்கல். கவர்ச்சியற்ற 'சான்ட் ஸ்டோன்!' திருடர் கூட்டம் வெறும் அக்கல்லைத் திருடிக்கொண்டு போயிற்று. அது வெறும் கல்தானா? இல்லை.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் அப்பே (கிறிஸ்துவ திருக்கோவில்) திருடர்களின் இலக்காகி இருப்பது முதல் தடவையல்ல. ஆனால், இம்முறைத் திருட்டுக்கு ஆளான பொருள்தான் வித்தியாசமானது. மூன்று திருடர்கள். இருள் படிந்த அக்கட்டடத்தினுள் பிரிட்டனின் மாவீரர்கள், மவுனமாக அங்கு பாதுகாப்பாக இருப்பதைப் பொருட்படுத்தா மல் செயல்பட்டனர். திருக்கோவிலிலுள்ள தங்கப் புதையல்களையோ, நகைகளையோ, வெள்ளியையோ களவாடுவது அவர்கள் நோக்கமல்ல. அவர்கள் திருட வந்தது ஒரு பெரிய மணல் பாறைத்துண்டை! அப்பாறை ஓக் மரத்தினால் உருவாக்கப்பட்ட மன்னர் முடிசூடிக் கொள்ளும் போது அமரும் நாற்காலியின் (சிங்காதனம்) கீழே இருந்தது.
அப்பேயின் வெளியே ஆங்கிலியா கடவுத்துறையில் கேமத்ஸன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஹாமில்டன் தட்டுத்தடுமாறியபடி தன்னை நோக்கி வருவதைக் கண்டு. ஒரு கல்லைச் சுமந்து வந்த அவன், 'இது இரண்டாக உடைந்துவிட்டது!' என்றான் குழறலுடன்.
அதை-அந்த மூட்டையை மூச்சு வாங்கக் காரில் ஏற்றிக் கொண்டே. சற்று முன்புதான் ஒரு போலீஸ்காரர். இரவு ரோந்து பார்ப்பவர் அதிகாலை 5.30 மணி வேளையில் இங்கு என்ன செய்கிறீர்கள்? என்று வினா எழுப்பிவிட்டுப் போயிருந்தார். போலீசாரைத் தக்கபடி சமாளித்த ஹாமில்டனும், கேமத்ஸனும் அப்பேயின் உள்ளே இருக்கும் அலன் ஸ்டூவர்ட்டையும், கெவின் வெர்னானையும் விட்டு விட்டுத் தங்கள் காரில் ஏறி அங்கிருந்து சென்றனர். இரண்டாவது பெரிய துண்டுக் கல்லை எடுத்துச் செல்ல வேறொரு காரை கொண்டு வருவதற்காக. போலீஸ்காரர் அவர்களுடைய கார் மறைந்ததும் தம் பணியை முடிக்க அங்கிருந்து சென்றார்.
காத்திருக்கும் இரண்டாவது காரை அடைந்தபோது அக்காரின் கதவைத் திறக்கும் சாவியைத் தவறவிட்டிருப்பதை அறிந்து திடுக்கிட்டனர். ஆகவே, ஹாமில்டனும், கேமத்ஸனும் முதல் காரிலேயே மீண்டும் அப்பேவுக்குப் போய் இரண்டாவது கல்லைக் காரில் ஏற்றிக் கொண்டு லண்டனை விட்டு வெளியேறினர். வழியில் காத்திருக்கும் தங்கள் கூட்டாளி களைக் கண்டு, தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியோடு தலை நகரைவிட்டு வெளியேற வேகமாகக் காரைச் செலுத்தினர்.
மணல் பாறைக்கல்லைத் திருடிக் கடத்திய திருடர்கள் நான்கு மாணவர்கள்!
கவர்ச்சியற்ற - 450 பவுன்டு எடையுள்ள ஒரு மணல் கல்லை திருட மாணவர்கள் இவ்வளவு பாடு படுவானேன்? காரணம் அது வெறும் மணல் பாறைக்கல் அல்ல. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்.
ஸ்காட்லாந்தியர் 1296 வரை - மன்னர் முடி சூட்டு விழாவில் பங்கு கொண்ட புனிதமான கல் அது. அக்கல்லைப் பற்றி கிறிஸ்துவர் களின் புராணத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. ஜாகப் அக்கல்லைத் தலையணையாகப் பயன்படுத்தி இருக்கிறார். பிறகு இக்கல் எகிப்துக்கும், ஸ்பெயினுக்கும் போய், முடிவாக அயர்லாந்துக்கு வந்திருக்கிறது. விதிக்கல் எனப்படும் இக்கல் மன்னர் களின் முடிசூட்டு விழாவில் புனிதமான கல்லாகப் போற்றி இடம் பெற்றிருக்கிறது.
மன்னர் பெர்கஸ் இக்கல்லை தம் முடிசூட்டு விழாவுக்காக ஸ்காட்லாந்துக்குக் கொண்டு போயிருக்கிறார். முதலாம் எட்வர்டு மன்னர் இக்கல்லை போரில் கைப் பற்றிய கொள்ளைப் பொருள்களோடு இங்கிலாந்துக்குக் கொண்டு வரும் வரை, இக்கல் ஸ்காட்லாந்தில் இருந்திருக்கிறது.
முப்பத்தி இரண்டு ஆண்டு களுக்குப்பின் நார்த்தாம் டன் உடன்படிக்கையின் படி 1328ல் இக்கல்லை ஸ்காட்லாந்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்று. ஆனால், இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட வில்லை. ஸ்காட்லாந்துக்கு உரிமையான இக்கல் இங்கிலாந்திலேயே இங்கிலாந்து மன்னர் அமரும் சிங்காதனத்தின் கீழ் புனிதமானதாக பதிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.
இப்புனிதக்கல்லை- ஸ்காட்லாந்தியருக்கு உரிமையான இக்கல்லை கடத்திக் கொண்டு போகவே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் திட்டமிட்டு வெற்றி கண்டனர். ஸ்காட்லாந்தியர் தங்கள் புனிதக்கல், 654 ஆண்டுகளாகத் தங்களை விட்டுப் பிரிந்த கல் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைவர் என்று நினைத்தனர் மாணவத் திருடர்கள்! ஆனால்...
திறமைமிக்க பிரிட்டிஷ் போலீசார் அதை மீட்டு உரிய இடத்தில் சேர்ப்பித்து விட்டனர் மூன்று மாதவேட்டைக்குப் பின், போலீஸாரின் (ஸ்காட்லண்ட்யார்டு) தேடுதல் தீவிரத்தையும், ஸ்காட்லாந்து மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதையும் அறிந்த மாணவர்கள், அப்புனிதக் கல்லை கைவிடுவது என்று தீர்மானித்தனர். அக்கல்லை ஸ்காட்லாந்து தேசியக் கொடி யினால் சுற்றி 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஒரு தள்ளு வண்டியில் வைத்து பாழடைந்த ஆல்பரோத் மடாலயத்தில் (அப்பே) விட்டுச் சென்றனர். விரைவில் போலீசார் அநாதையாகக் கிடந்த அப்புனிதக் கல்லை வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அதன் உரிய இடத்தில் சேர்ப்பித்தனர். இந்தியர் மூடநம்பிக்கை யாளர்கள் என்று கேலி பேசுவோர்- நாகரிகத்தின் உச்சியி லிருக்கும் பிரிட்டிஷாரின் இப்புனிதக் கல் பற்றி என்ன கூறுவர்? இன்றும் பிரிட்டிஷ் மன்னரின் சிங்காதனத்தின் அடியில் இந்தப் புனித மணல் கல் இடம் பெற்றுள்ளது.
***
