
மதுராந்தகம் காட்டில் வசித்தது அழகிய ஆமை.
அதற்கு திடீரென ஓர் ஆசை வந்தது. முயல் போல் வேகமாக ஓடி பார்க்கலாம் என சிந்தித்தது. ஆனால், எண்ணியபடி வேகமாக ஓட முடியவில்லை.
'மெல்ல நகர்ந்தால் தான் நீ ஆமை; ஓட முயற்சிக்காதே...'
அறிவுறுத்தின காட்டு விலங்குகள்.
ஆசை விடவில்லை; முயலிடமே சென்று முறையிட்டது ஆமை.
செருமியபடி, 'உன் உடல் அமைப்பு அப்படி... வேகமாக ஓட ஆசைப்படாதே...' என அறிவுரைத்தது முயல்.
ஏற்க மறுத்த ஆமைக்கு, ஒரு எண்ணம் உதித்தது.
'வேகமாக ஓடும் வகையில், இயந்திர விசையை கால்களில் பொருத்திக் கொள்ளலாமா...'
அட்டகாசமாக யோசனை கேட்டது.
'முடிந்தால் முயன்று பார்...' என்றது முயல்.
ஊருக்குள் சென்று, சிறிய இயந்திர விசை ஒன்றை பொருத்தியது ஆமை.
மறுநாள் அதை முடுக்கி, ஆனந்தமாக ஓடிக் காட்டியது. மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன விலங்குகள்.
வேகத்தைக் கண்டு அதிர்ந்து, 'இந்த மாதிரி செய்து, இயல்பைக் கெடுத்துக் கொள்ளாதே... அதை கழற்றிவிட்டு பழையபடி மெல்ல நகரு... அதுதான் உனக்கு அழகு...' என கூறியது முயல்.
வருத்தம் அடைந்த ஆமை, 'முயலாரே... காலம் இப்போ மாறி இருக்கு... ஆடைகளில், ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் போய் விட்டது; சாப்பிடும் உணவிலும் மாற்றம் வந்து விட்டது; நாமும் மாறுவதில் தவறேதுமில்லை; நீங்களும் மாறப் பழகிக்குங்க...' என்றது.
அந்த விளக்கம் முயலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
'எப்படி மாற வேண்டுமென்று நினைக்கிறாய்...'
'உன்னை ஊருக்குள் அழைத்துப் போகிறேன்; வேகமாக துள்ளி ஓடும் உனக்கு, நிதானமாக நடக்கும் வகையில், சிறு இயந்திர விசை வாங்கித் தருகிறேன். அதை மாட்டிக்கொள்...' என்றது.
உற்சாகத்துடன், 'அட... இது கூட சிறப்பாக இருக்கும் போலிருக்கிறதே...' என்றபடி ஒப்புக் கொண்டது முயல். வேகம் குறைக்கும் விசை பொருத்தியபடி காட்டுக்குள் வந்தது.
மறுநாள் -
இரை தேடப் புறப்பட்டது முயல். விசையை மாட்டியதால், வேகம் குறைந்தது. அதிவேக விசை மாட்டியிருந்த ஆமை, தீனியை தின்று தீர்த்தது.
உணவு தேட முடியாத விரக்தியில், 'விசை மாட்டி, இயல்பையே மாத்திட்டியே...' என பொருமியது முயல்.
காட்டு மிருகங்கள் சிரித்தபடி, 'இப்போ ஓட்டப் பந்தயம் வைத்தால் எப்படி இருக்கும்...' என கிண்டல் செய்தன. ஆனால், மாற்றங்களை ஏற்க வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக் கொண்டன.
குழந்தைகளே... வெற்றியை அடைய சரியான வழிமுறையை தேடிக் கொண்டே இருங்கள்.
- என்.பர்வதவர்தினி

