PUBLISHED ON : டிச 11, 2021

தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி, ஆர்.எஸ்.மெட்ரிக் பள்ளியில், 2000ல், எல்.கே.ஜி., வகுப்பு படித்தபோது, அழுகை ஆர்ப்பாட்டத்தோடு தான் காலையில் புறப்பட்டு செல்வேன்.
வகுப்பு ஆசிரியை மீனாதேவி, அன்பாக அரவணைப்பார்; இனிமையாக பேசுவார். அவரது கனிவான பழக்கமும், நெகிழ்வான நடவடிக்கையும் பள்ளி செல்லும் ஆர்வத்தை துளிர்விட வைத்தது. மிகவும் ஆர்வமாக செல்ல துவங்கினேன்.
ஒரு நாள், விடுப்பில் சென்றிருந்தார் ஆசிரியை. அதை அறிந்து, 'அவர் வகுப்புக்கு வந்தால் தான் படிப்பேன்...' என்று அடம் பிடித்தேன். மற்ற ஆசிரியர்கள் தேற்றினர்.
பழகும் விதம், கற்பித்தலில் கடைபிடித்த உத்தி, கருணை மிக்க செயல்பாடு போன்ற பண்புகளால் மனதில் நிறைந்தார் அந்த ஆசிரியை. அவர் காட்டிய வழியை வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.
எனக்கு, 24 வயதாகிறது; சமீபத்தில், எதிர்பாராத தருணத்தில் அந்த ஆசிரியையை சந்திக்க நேர்ந்தது. மிகவும் கனிவுடன் ஒரு எல்.கே.ஜி., மாணவியாகவே என்னை பாவித்து உரையாடினார். அன்புடன் நலம் விசாரித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
- ஸ்ரீ லட்சுமி சேகர், தேனி.
