PUBLISHED ON : நவ 15, 2013

''புலவர் பெருமானே, நான் என்றுமே எனது சத்தியத்தையும், நேர்மையினையும் தவறான வழியில் பயன்படுத்தமாட்டேன். அதே நேரத்தில், நீங்கள் இடுகிற கட்டளைகள் எதுவாகயிருந்தாலும் அதனை தலைமேற்கொண்டு நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்,'' என்றான் துருவிதன்.
''அகம்பாவம் பிடித்த மன்னனே... உனக்கு ஆணவமும் அதிகமாகிவிட்டது. உன் சத்தியத்தாலும், நேர்மையினாலும் இன்னும் பயங்கரமான சோதனை உனக்கு ஏற்படப் போகிறது. அதனை நீ எதிர்கொள்ள தயாராக இருந்து கொள்,'' என்று கூறியபடி தன் படைகளுடன் புறப்பட்டார்.
ஒருநாள் காட்டில் பயங்கரமான கடும் மழை பெய்தது. காட்டில் எங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. மன்னரும், ராணியும் காட்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இருவரும் ஒரு பெரிய மரத்தை தெப்பமாக பிடித்துக்கொண்டு தண்ணீரில் இருந்து தப்பிக்க வேண்டி போராடினர்.
ராணியால் வேகமாக இழுத்துச் செல்லும் வெள்ளத்தோடு போராடியபடி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. வெள்ளத்தோடு இழுத்துச் செல்லப்பட்டாள். மன்னர் துருவிதன் ராணியைக் காப்பாற்ற வேண்டி எவ்வளவோ போராடினார்.
அவர் எத்தனையோ முறை போராடியும், அவரால் ராணியைக் காப்பாற்ற முடியவில்லை. ராணியார் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டாள். மன்னரோ மயக்கமடைந்த படியே மரத்தின் மீது சரிந்து மிதந்து சென்றார்.
மன்னர் கண் விழித்த போது தாம் ஒரு தீவின் கரையில் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அந்தத் தீவில் மன்னரைத் தவிர வேறு யாருமேயில்லை. தாம் தன்னந் தனியாக அந்தத் தீவில் இருப்பதை உணர்ந்தார்.
ராணியார் தண்ணீரோடு இழுத்துச் செல்லப்பட்ட காட்சியை நினைத்தபோது மன்னருக்கு தலையே சுற்றியது. அந்தச் சம்பவத்தினை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மன்னர் துருவிதன் அந்த தீவிலேயே சுற்றித் திரிந்தான். கடும் பசி அவனை வாட்டியது. அந்தத் தீவில் அவன் சாப்பிட உணவு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மிகவும் கவலையடைந்தான்.
'தம் தாகம் தீர கடல் தண்ணீரைக் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று நினைத்து கண் கலங்கினான். இரவு நேரத்தில் அந்த கடல் தீவில் கடுங்குளிர் மன்னனை வாட்டியெடுத்தது. குளிரில் நடுங்கியபடி தவித்தான் மன்னன்.
அப்போது மன்னனின் மனமானது அவனுள்ளே கேள்வி எழுப்பத் தொடங்கியது.
'மன்னனே, உன் அரண்மனையையும், அரச பதவியையும் பறித்துக் கொண்டவர் சாதாரண புலவர் அல்ல. அவர் தேவரிஷி. நீ மட்டும் அவருக்கு வளைந்து கொடுத்து ஒரே ஒரு முறை மட்டும் சத்தியம் தவறி நடந்து விட்டால், உன் ராணியும் உனக்குக் கிடைத்து விடுவாள். இழந்த நாடும், அரண்மனையும் உனக்குக் கிடைத்து விடும். உனது பிடிவாதத்தை தவிர்த்து விடு' என்றது.
மன்னன், தன் மனத்தைத் தொட்டுக் கொண்டான்.
'மனமே, என்னை நீ யார்?' என்று நினைத்துக் கொண்டாய். நான் என்றுமே சத்தியம் தவறி நடந்ததில்லை. இப்போதுமா அவ்வாறு நடக்கப்போகிறேன். மனமே நீ ஒரு குரங்கு. நீ எண்ணங்களை எல்லாம் தாவித்தாவி அலைக்கழித்து என்னை மிருகமாக்க நினைத்திருப்பாய். நான் என்றுமே மிருகமாக மாட்டேன். இதனை விட எனக்குப் பலமான சோதனைகள் வந்தாலும் நான் என்றுமே எனது சத்தியத்தை மீற மாட்டேன். என் இதயத்திலிருந்து உனது கெட்ட எண்ணத்தை எப்படிப் போக்கி கொள்வது என்று எனக்குத்தெரியும் என்று சத்தமாகக் கூறிய மன்னர் கடற்கரையில் மண்மேடான தரையில் அமர்ந்து தியானம் செய்யலானார்.
அந்த நேரத்தில் திடீரென வானத்தில் இருந்து ஒரு தெய்வீக ஒளியானது தம்மை நோக்கி வீசப்படுவதை உணர்ந்தார். அந்தப் புலவர் ரிஷிவடிவில் வானில் இருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைப்புற்றார்.
ரிஷி அவன் அருகில் வந்து நின்றார். துருவிதன் மீண்டும் மன்னனாக காட்சியளித்தான்.
மன்னரை அன்போடு நோக்கிய ரிஷியோ, ''துருவிதனே, உன்னை சோதித்ததில் நீ சத்தியத்தினை மீறாது நடந்து கொண்டாய். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உன்னைப் போன்ற சத்தியம் தவறாத ஒரு உத்தமனை இந்த உலகத்தில் பார்ப்பதே மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். அதனால் உன்னை சோதித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.
''இதோ உன்னிடம் இருந்து நான் பறித்துக் கொண்டதையெல்லாம், இப்போதே உனக்கு தந்துவிடுகிறேன். நீ மேலும் எல்லா வளங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். உனக்காக சொர்க்கம் காத்துக் கொண்டிருக் கிறது. நீ இன்னும் பல வருடங்கள் சிறப்பாக ஆட்சி செய்த பின்னர் சொர்க்கத்திற்கு வந்தடைவாய்,'' என்று வாழ்த்தியவாறு துருவிதனின் கண்களை விட்டு மறைந்தார் பிரம்மண்டி ரிஷி.
மறு நொடியில், துருவிதன் தம்நாட்டு அரசபையில் அமர்ந்திருந்தார். அவரோடு ராணியும் அமர்ந்திருந்தாள். தங்கள் மன்னர் மீண்டும் அரியணையில் வந்து விட்டதைக் கண்டு எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையையும், சத்தியத்தையும் தவறாத துருவிதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
முற்றும்.