
சென்றவாரம்: சீர்திருத்தப்பள்ளி என்பது தெரியாமலே மாஜிக் மந்த்ரா அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அவளது மாஜிக் குல்லாயை தாக்கினர் பள்ளி மாணவியர். இனி-
அவளுடைய குல்லாய் திடீரென்று வளர ஆரம்பித்து மேலே போய்க் கொண்டிருந்தது. அது, பெரிதாக கருப்பஞ்சாறு காய்ச்சும் பெரிய கொப்பறை போலாயிற்று. 'விர்' என்று சுழன்று மங்காத்தாவையும், அவள் கூட்டாளி களையும் நோக்கி நகர்ந்தது. அவர்கள் தலைக்கு மேலாக வந்ததும், சுழன்றபடி கீழே இறங்கியது.
கெக்கலி கொட்டிச் சிரித்துக் கொண்டி ருந்தவர்கள் சட்டென்று தங்கள் சிரிப்பை நிறுத்தினர். தங்கள் மீது விழவரும் பிரம்மாண்டமான அந்தத் தொப்பியை பார்த்து பயந்து, 'வீல்' என்று அலறியபடி ஓட முனைந்தனர். ஆனால், அதற்குள் அந்த ராட்சஸத் தொப்பி, அவர்கள் மீது விழுந்து அவர்களை மூடிக்கொண்டது.
தொப்பிக்குள் அகப்பட்டு மூச்சு திணற, 'காச் மூச்' என்று கத்தும் அவர்களைப் பார்த்து, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கருப்புப் பூனை மந்த்ராவின் தாத்தா கேசவன் குட்டி, 'மியாவ்' என்றது.
'பலே!' என்று மந்த்ராவை பாராட்டுவது போல.
பூனையின் குரலைக் கேட்ட மந்த்ரா, மகிழ்ச்சியோடு, அந்த மரக்கிளையை நோக்கி ஓடினாள்.
மரக்கிளையில் பூனையாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கேசவன் குட்டி, அவர்கள் மீது பரிதாபப்பட்டு, மந்த்ரா மந்திரத்துக்கு மாற்று மந்திரம் போட்டு, குல்லாயை சிறிதாக்கினார். அதனுள் சிக்கித் தவித்த மங்காத்தாவும், அவள் தோழிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்ட மெடுத்தனர்.
''இந்தப் பள்ளிக்கூடம் ஒரு மாதிரியான பள்ளிக்கூடம் போலிருக்கே!'' என்றார் தாத்தா.
மந்த்ரா தன் தாத்தாவான கருப்புப் பூனையை தடவிக்கொண்டே கூறினாள்.
''பத்மினி பாட்டி இந்த ஸ்கூலிலேதான் படிச்சிருக்காங்க. பாட்டி இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி ரொம்ப பெருமையாச் சொன்னாங்க. அதனால நான் இங்கே குறையேதும் காணப்போவதில்லை. இங்கே நல்லாப் படிச்சு, நான் அறிவாளியாவேன். உங்ககிட்டே இருந்து இன்னும் மந்திரங்களைக் கற்றுக் கொண்டு பெரிய மாஜிக்காரியாவேன்!'' என்றாள்.
''நான் ஹாஸ்டல் கட்டடத்தின் அருகேயுள்ள மரத்துக்குப் போறேன். பிறகு உனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வந்து உன்னை சந்திக்கிறேன்!'' என்று மந்த்ராவுக்கு ஒரு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்து, வாலை உயர்த்திக் கொண்டு ஹாஸ்டல் கட்டடத்தை நோக்கிக் கிளம்பியது கருப்புப் பூனை கேசவன் குட்டி!
மந்த்ரா, மகாராஜா கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியை அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஒரு பெரிய மேஜையின் பின்னால் ஒல்லிக்குச்சியாக ஒரு அம்மாள் உட்கார்ந்திருந்தார். நீண்ட கூரான மூக்கின் உச்சியில் ஒட்டிக் கொண்டிருந்தது வெள்ளி பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. அதன் பின்னால் பளபளத்த கண்கள் மந்த்ராவை உற்றுப் பார்த்தன. கதைகளில் வரும் சூனியக்காரியின் நினைவு வந்தது மந்த்ராவுக்கு. பள்ளியின் அழைப்புக் கடிதத்தை எடுத்து நீட்டினாள் மந்த்ரா.
மந்த்ரா மீது பதித்த பார்வையை அகற்றாமலேயே அந்தக் கடிதத்தை வாங்கிய தலைமை ஆசிரியை, அதை பிரித்துப் படித்தார். பிறகு, ''ம்...'' என்று உறுமினார்.
''அடங்காப்பிடாரி! உன் தொல்லை தாங்காமல்தான், உன்னை இங்கே அனுப்பி இருக்கின்றனர். உன்னை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பது எங்களுக்குத் தெரியும்'' என்றார் தலைமை ஆசிரியை.
மந்த்ராவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
'இந்தம்மா என்ன சொல்றாங்க? அடங்காப் பிடாரியாமே! யாரு? கடிதத்திலே என்ன...'
மந்த்ரா சிந்தனையை கலைத்தது, தலைமை ஆசிரியை தனபாக்கியத்தின் குரல்.
''இந்தப் பள்ளிக்கூடத்தின் சட்ட திட்டங்களுக்கு நீ கீழ்ப்படிந்து நடக்கணும். கீழ்ப் படியாத மாணவிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவோம்... அதென்ன தலையிலே குல்லாய்? இந்த கோமாளித் தனங்களை இங்கே அனுமதிக்க மாட்டோம். குல்லாயை எடுக்காமல், மரியாதை காட்டாமல் நிற்கிறாயே... யூ சில்லி கேர்ள்! எடு குல்லாயை...'' என்று உறுமினாள் தனபாக்கியம்.
அந்தக் குல்லாய், அவள் தாத்தா ஆசையோடு அணிவித்தது. மாஜிக் வேலைகள் செய்யும்போது அதை அணிந்துகொள்ளும்படி கூறியிருந்தார். மிட்டாய் பொட்டலம் போல கோமாளித்தனமாக இருந்தாலும் அது வித்தியாசமாகப் பிறர் கவனத்தை கவரும். அவள் செய்யும் மாஜிக்குகளை வெற்றி பெறச் செய்யும் என்று கூறியிருந்தார் தாத்தா. அதை யார் குறை கூறினாலும், கேலி செய்தாலும் மந்த்ராவுக்கு பொறுக்காது. ஆகவே, தலைமை ஆசிரியையின் பேச்சை சட்டை செய்யாமல் தன் குல்லாயை எடுக்காமலேயே மவுனமாக நின்றாள் .
அது மட்டுமல்ல... அந்தக் குல்லாயை யாராலும் தன் தலையிலிருந்து அகற்ற முடியாதபடி இருக்க, ஒரு மந்திரத்தையும் போட்டு விட்டு, ரொம்ப சாதுவாக விட்டத்தை பார்த்தபடி நின்றாள்.
புதிய மாணவி மந்த்ராவின் இந்த அலட்சியம், தலைமை ஆசிரியைக்கு எரிச்சலூட்டியது.
''இத்தனை நெஞ்சழுத்தமா உனக்கு? இந்த அடாவடித் தனமெல்லாம் இங்கே நடக்காது!'' என்று கூறியபடி மந்த்ராவின் அருகில் வந்தார். அவள் தலையிலுள்ள குல்லாயை அகற்ற முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அது மந்த்ராவின் தலையிலிருந்து அசையவே இல்லை! தலைமை ஆசிரியை தனபாக்கியத்தின் விழிகள் விரிந்தன.
'என் மந்திரம் பலித்து விட்டது' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் மந்த்ரா.
''இரு இரு, இதோ வரேன். உன் வேடிக்கை எங்கிட்ட பலிக்காது!'' என்று கூறிய தனம், தன் மேஜை டிராயரிலிருந்து கத்திரிக்கோலுடன் வந்தார் குல்லாயை கத்திரித்து அப்புறப்படுத்த. ஆனால், அந்தக் கத்தரிக்கோல்தான் உடைந்தது. குல்லாய் நகரவில்லை. மிரண்டு போனார் தனபாக்கியம். கண்ணாடி மூக்கிலிருந்து நழுவ, வியர்வை பூக்க, பொத்தென்று தன் நாற்காலி யில் விழுந்தவர், ''இதென்ன அதிசயக் குல்லாய்...!
''சரி சரி, இப்போதைக்கு நீ குல்லாயுடனே உன் அறைக்குப் போ... 27ம் நம்பர் அறை... பிறகு பார்த்துக் கொள்ளலாம் குல்லாய் விவகாரத்தை,'' என்று மந்த்ராவை அனுப்பி விட்டு, முகத்திலுள்ள வியர்வையைத் துடைக்க, தன் கைக்குட்டையை தேடினார் தலைமை ஆசிரியை தனபாக்கியம்.
அந்த அறையிலிருந்து வெளிவரும் மந்த்ராவை எதிர்பார்த்துக் காத்திருந்தது மாங்காத்தாவின் கோஷ்டி. மந்த்ராவின் தலையிலிருந்து குல்லாயை அகற்ற முடியாமல் தனம் தவித்துப் போனதை அறை ஜன்னல் வழியே மங்காத்தாவும், அவள் சகாக்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். மந்த்ராவின் குல்லாய் அவர்களின் இலக்காகியது. ஓடிப் போய் ஒரு உருளைக் கிழங்கைக் கொண்டு வந்தாள் ஒருத்தி.
மங்காத்தா தன் கையிலிருந்த கவண் கல்லில் அந்த உருளைக் கிழங்கைப் பொருத்தி வைத்தபடி தயாராக இருந்தாள். மந்த்ரா ஹாஸ்டலை நோக்கிப் போனாள். அவளைச் சிறிது தூரம் போகவிட்டதும், மங்காத்தா தன் கவண் கல்லை இழுத்து, உருளைக்கிழங்கை மந்த்ராவின் கோமாளிக் குல்லாய்க்கு குறி வைத்து விட்டாள். அது சாதாரணக் குல்லாயானால் சரிந்து விழுந்திருக்கும். அது மாஜிக் மந்த்ராவின் மந்திரக் குல்லாயாயிற்றே!
மங்காத்தா வீசிய உருளைக்கிழங்கு, குல்லாயில் பட்டதும் பந்து போல திரும்பியது மங்காத்தாவை நோக்கி! அவள் தலையை மட்டுமல்ல... அவள் சகாக்கள் ஒவ்வொருவருடைய தலையிலும் 'ணங் ணங்' என்று எம்பி எம்பித் தாக்கியது. மங்காத்தாவும், அவள் கூட்டாளிகளும் உருளைக் கிழங்கின் தாக்குதலைக் தாங்காமல் தரையில் உருண்டனர். மந்த்ரா எதையுமே அறியாதவள்போல, திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தாள். தரையில் உருண்ட மங்காத்தா கோஷ்டியை நோக்கி மரக்கிளையில் இருந்த கருப்புப் பூனை, 'மிய்யாவ்' என்று சிரித்தது.
ஹாஸ்டலை அடைந்த மந்த்ரா, 'குல்லாயை எடுக்க முடியாதபடி மந்திரம் போட்டு தமாஷ் செய்தது போதும், இனி அதை அகற்றி விடலாம்,' என்று நினைத்து குல்லாயை எடுக்க முயற்சித்தாள். ஆனால், அவளாலும் அதை எடுக்க முடியவில்லை. ஒட்டிக்கொள்ளுவதற்கு கூறிய மந்திரத்துக்கு மாற்று மந்திரம் கூறினால் தான் அது விடுபடும். அந்த மந்திரம் 'ஐயையோ! அது மறந்து போச்சே!' என்று தவித்துப் போனாள் மந்த்ரா. அப்போது ஓசையின்றி ஜன்னல் கட்டையில் வந்து உட்கார்ந்தார் கேசவன் குட்டி தாத்தா பூனையாக.
''தாத்தா, தாத்தா... இந்தக் குல்லாயிலே மந்திரம் போட்டேன். யாராலும் எடுக்க முடியாதபடி இருக்க. ஆனா, இப்போ என்னாலும் எடுக்க முடியல்லே... அதற்கான மாற்று மந்திரம் மறந்து போச்சு தாத்தா. மறுபடி சொல்லிக் கொடுங்களேன், ப்ளீஸ்!'' என்று பரிதாபமாகக் கெஞ்சினாள் மந்த்ரா.
- தொடரும்.