தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குகன்! (1)- மினிதொடர்!

குகன்! (1)- மினிதொடர்!

குகன்! (1)- மினிதொடர்!


PUBLISHED ON : ஜூன் 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும்; பரதன் முடிசூடி நாடாள வேண்டும் என்னும் நிலை உருவாயிற்று. ராமன் அதற்கு இணங்கிக் காட்டிற்குப் புறப்பட்டான். சீதையையும், லட்சுமணனையும் உடனழைத்துக் கொண்டு, அயோத்தி நகர மக்கள் பின் தொடர்ந்து வர, கானகம் நோக்கிச் சென்றான்.

ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தேர் மீதேறிக் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் இரண்டு யோசனை தூரம் சென்ற அளவில் கதிரவன் மேற்கு மலையில் சென்று மறைந்தான். எங்கும் இருள் சூழத் தொடங்கியது. அதனால், தேர் மீது இருந்தவர்கள் தேரிலிருந்து இறங்கி அருகில் இருந்த சோலையில் தங்கினர்.

அவர்களைத் திரும்பவும் அயோத்திக்கு அழைத்துச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் பின் தொடர்ந்து வந்த நகர மக்களும், தேரைச் செலுத்தி வந்த சுமந்திரன் என்பவனும் அச்சோலையில் தங்கினர். அச்சோலையில் தங்கியவர்கள் அனைவரும் துயின்ற போது, ராமன் மெதுவாக சுமந்திரனை அருகில் அழைத்தான்.

''என்னைப் பின் தொடர்ந்து வரும் இவர்கள் அனைவரும் நான் வராமல் நகரத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். ஆகையால், தாங்கள் நான் கூறுகின்றவாறு செய்தல் வேண்டும். தாங்கள் இப்போதே தேரைத் திருப்பிக் கொண்டு நகரத்திற்குத் திரும்பிச் சென்று விடுங்கள். நான் சீதையுடனும், லட்சுமணனுடனும் இங்கிருந்து சென்று விடுகிறேன்.

''இவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும் தேர் இல்லாதிருப்பதையும், தேர்ச்சக்கரங்களின் சுவடுகளையும் கண்டு, நான் நகரத்திற்குத் திரும்பிச் சென்று விட்டேன் என்று எண்ணி நகரத்திற்குத் திரும்பிவிடுவர். தாங்கள் சென்று என் தந்தையாகிய தசரதரிடம் நான் காட்டிற்கு சென்றதாகக் கூறிவிடுங்கள்!'' என்று கூறினான்.

ராமன் இவ்வாறு கூறக் கேட்ட சுமந்திரன் பெரிதும் துயரம் கொண்டான். ராமனைப் பார்த்து, ''ஐயனே! உம்மிடத்தில் மிகுந்த அன்புடையவன் போல் உம்மைக் கொண்டு வந்து காட்டில் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று, அங்குள்ள துயரக் காட்சிகளைக் காண்பதற்கு நான்தானா அமைய வேண்டும்?

''இரும்புக்கு நிகரான நெஞ்சுடைய நான், மன்னர் தசரதர் முன் சென்று, 'ராமனைக் காட்டிலே விட்டு வந்தேன்' என்று சொல்லவா? ஐயோ! இப்போது இச்செய்தியை மன்னனிடம் சென்று கூறுவேனாயின், உடனே அவர் உயிர் போய்விடுமே!'' என்று கலங்கிக் கூறி ராமனை வணங்கி நின்றான்.

அவ்வாறு கூறிய சுமந்திரனை நோக்கி, ''ஐயா! பூமியில் பிறந்தால் வரவேண்டியவை வந்தே தீரும் என்பதைத் தெளிவாக உணர்ந்த நீர், இவ்வாறு தருமத்தை மறந்து வருத்தப்படலாமோ? முன்னே புகழ் உண்டாகி, பின்னர் பழியோ, துன்பமோ வந்தால், அதற்காக அஞ்சி நல்ல காரியத்தை விட்டு விடலாமோ? என்னைக் காட்டில் கொண்டு போய் விட்டு வந்தேன் என்று மன்னரிடத்தில் கூறுவது, அவர் வாக்குத் தவறாமல் நடந்ததாகும்.

''அவருக்கு அது நன்மையேயன்றி வேறன்று. அவரது வாக்கைத் தலை மீது கொண்டு காட்டுக்குச் செல்வது எனக்குத் தவம். ஆகையால், நீர் ஏன் கலங்குகிறீர்? நீர் சென்றடைந்தவுடன் வசிட்ட முனிவருக்கு என் வணக்கத்தைக் கூறுக. அம்முனிவரையும் அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று, என் செய்தியை அம்முனிவரே கூறுமாறு சொல்லுக!

''என் தம்பி பரதன் வந்தவுடன், அவனுக்கு எல்லா தரும சாத்திரங்களும் கூறி, தேவாலயங்களுக்கு எவ்விதக் குறையுமின்றிப் பூசைகள் நடக்குமாறு செய்யச் சொல்லுக. ஒரு கால் பரதன் என்னைப் பிரிந்திருக்கிறேன் என்று துயரப்பட்டால், அவனுக்குத் தைரியம் சொல்லுக. அவன் தன் தாயாரால்தான் இவ்வாறு நடந்தது என்று அவள் மீது கோபம் கொள்ளப் போகிறான்...

''என் மீது எவ்வளவு அன்பு உடையவனாக இருக்கிறானே, தாயாரிடத்திலும் அவ்வளவு அன்பாக இருக்கச் சொல்லி, இவ்வளவு வரமும் நானே கேட்டுக் கொண்டேன் என்று சொல்லுக. நீர் வசிஷ்ட முனிவருடன் இருந்து மன்னரது துயரத்திற்கு தேறுதல் கூறி, பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் வந்து வணங்குவேன் என்று சொல்லுக. என் தாயார் மூவருக்கும் என் வணக்கத்தைக் கூறி, மன்னரைத் துயரப்படாமல் தேற்றிக் கொண்டிருக்கச் சொல்லுக!'' என்று ராமன் கூறினான்.

அதைக் கேட்ட சுமந்திரன், ராமன் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறலாகாது என்பதால், இதுதான் ஊழ்வினை என்று எண்ணி, வணங்கி வருந்தி நின்றான். பின்னர் ஒருவாறு தன் துயரத்தை அடக்கிக் கொண்டு, அவர்கள் மூவரையும் நோக்கி, ''விடை கொடுத்தருளுங்கள்!'' என்று வணங்கி விடைபெற்று கொண்டு, தன் தேரைத் திருப்பி அயோத்தி நகர் நோக்கிப் புறப்பட்டான்.

அதே நேரத்தில் ராமன், தன் தேவியோடும், தம்பி லட்சுமணனோடும் அச்சோலையிலிருந்து புறப்பட்டு பொழுது விடிவதற்குள் இரண்டு யோசனை தூரம் காட்டில் கடந்து சென்று விட்டான். ராமனைப் பின் தொடர்ந்து வந்து அச்சோலையில் உறங்கிக் கொண்டிருந்த நகர மக்கள், பொழுது விடிந்த அளவில் உறக்கத்தினின்று எழுந்தனர். ராமனைக் காணாது தேர்ச் சக்கரச் சுவட்டைப் பார்த்து, ராமன் அயோத்திக்கே சென்று விட்டான் என்று எண்ணி மகிழ்ந்து, தாமும் அயோத்திக்குத் திரும்பிச் சென்றனர்.

காட்டிற்குள் சென்று கொண்டிருந்த ராமன், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்டு களித்தவாறு சென்றனர். ராமனும், சீதையும் காட்டிற்குள் நடந்து சென்ற காட்சி, மேகமானது மின்னலுடன் நடப்பதுபோலவும், மதயானை பெண் யானையோடு நடப்பதுபோலவும் இருந்தது.

அவ்வாறாக அவர்கள் மூவரும் கங்கைக்கரை சென்றடைந்தனர். கங்கைக் கரையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்நதிக் கரையினை அடுத்திருந்த பல தவச்சாலைகளில் வாழ்ந்த முனிவர்கள், அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

ராமன் முதலிய மூவரும் கங்கையில் நீராடி தம் நித்தியக் கடன்களை முடித்தனர். அம்முனிவர்களால் அன்புடன் கொடுக்கப் பெற்ற காயும், கிழங்கும், கனியும் உண்டு களைப்பாறியிருந்தனர். அக்கங்கைக் கரைக்குச் சொந்தமானவன் குகன் என்னும் வேடன். இவன் கங்கைக் கரையில் இருந்த சிருங்கி பேரம் என்னும் ஊரில் வாழ்ந்தவன். கங்கை நதியில் படகைச் செலுத்தும் பழமையான தொழிலுடையவன்.

ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; வீரம் செறிந்த தோளும், வில்லை ஏந்திய கையும், ஈரம் செறிந்த நெஞ்சும், இருள் செறிந்த உடலும் உடையவன். இத்தகைய குகன், முன்னைத் தொடர்பால் ராமனைக் காண வேண்டும் என்ற ஓர் உணர்வு கொண்டான். ஆர்வமிகுதியால் தன்னையோ, தன் நாட்டையோ, தன் தொழிலையோ இவன் சிறிதும் நினைக்கவில்லை. முனிவர்கள் பலரும் சென்று பார்க்கிறார்களே, தானும் சென்று காண வேண்டும் என்னும் ஆவலால், தானும் ராமனைக் காண வந்தான்.

'பெரியவர்களைப் பார்க்கப் போகும்போது, வெறுங்கையோடு போகக் கூடாது' என்னும் நடைமுறையை, ஒழுக்க முறையை நன்கு அறிந்தவன் வேடர் தலைவன் குகன். அதனால், குகன் தன் குலத்துக்கே சிறப்பான பொருள்கள் என்று கருதப்படும் சிறந்த தேனையும், உயர்ந்த மீனையும் தன் கையில் கொண்டு சென்றான்.

தனக்கு விருப்பமான ஒன்றே பெரியவர்களுக்கும், கடவுளுக்கும் விருப்பம் என்று கருதுவது மக்கள் இயல்பு தானே. அவ்வியல்பின்படியே குகன் கையில் மீனும் தேனும் கொண்டு, வேட்டுவன் என்னும் முறைப்படி தன் சேனைகளோடு புறப்பட்டான். ராமன் தங்கியிருந்த தவப்பள்ளி அருகே சென்றான்.

(-1 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us