தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓரவஞ்சணை!

ஓரவஞ்சணை!

ஓரவஞ்சணை!


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரோணரிடம் வித்தைகள் பயின்று வந்த பாண்டுவின் மைந்தர்கள், வில்வித்தையிலும் மற்றப் பயிற்சிகளிலும் வல்லவர்களாகி, அனைவரும் புகழும் வண்ணம் திறமையுடையவர்களாயினர்.

துரியோதனன், அவர்கள் மீது பொறாமை கொண்டு, தன் தந்தையிடத்தும், மூதாதையரிடத்தும் சென்று, துரோணர், பாண்டவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களுக்கு மட்டும் வித்தைகள் நன்கு கற்பிப்பதாகக் குறை கூறினான்.

பீஷ்மர் அதைக் கேட்டு உண்மை என்று நம்பி, உடனே துரோணரை அழைத்து, அவருக்கு வணக்கம் செய்து, ''சுவாமி! குருகுல மக்கள் நூற்றைவரும் உமக்கு ஒரு கண் போன்று இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஒரு சாராருக்கு ஒரு விதமாகவும், மற்றொரு சாராருக்கு ஒரு விதமாகவும், கற்பிப்பது தங்களுக்குத் தகுதியா?'' என்று கேட்டார்.

அதைக் கேட்ட துரோணர், ''மன்னர் மன்னரே! உங்கள் மக்கள் நூற்றைவரும் எனக்கு ஒரு கண்ணாகத்தான் விளங்குகின்றனர். நானும் அவ்வாறே அவர்களுக்குப் போதித்து வருகிறேன். அவரவர் அறிவுக்குத் தக்கவாறு வித்தையைப் பெறுகின்றனர். அதற்கு நான் என்ன செய்வேன்?'' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சிலம்பக் கூடத்திற்குச் சென்றார்.

சிலம்பக்கூடத்தை அடைந்த துரோணர், நூற்றைவரையும் நோக்கி, ''கங்கைக்குச் சென்று குளித்து வருவோம் வாருங்கள்!'' என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

அவர்கள் பாதி வழி சென்றபோது துரோணர், அர்சுனனைப் பார்த்து, ''என் இல்லத்திற்குச் சென்று எண்ணெய்யும், சியக்காயும் வாங்கிக் கொண்டு வா! புறப்படும்போது கொண்டு வர மறந்து விட்டேன். நீ வாங்கிக் கொண்டு வரும்போது அவற்றைத் தரையில் வைக்காமல் கொண்டு வரவேண்டும்!'' என்று கட்டளையிட்டு அனுப்பினார். அர்சுனனும் உடனே ஆசிரியருடைய இல்லத்திற்குச் சென்றான்.

துரோணர் மற்ற நூற்று நால்வருடன் கங்கையை நோக்கிச் சென்றார். வழியிடையில் ஓர் ஆலமரத்தடியில் நின்றார். துரியோதனனை அருகில் அழைத்து, ''துரியோதனா! இந்த ஆலமரத்தில் உள்ள இலைகளையெல்லாம் ஒரே அம்பினால் துளை செய்யும் வித்தையைக் கற்றுத் தருகிறேன். கற்றுக் கொள்!'' என்று சொல்லி தரையில் சக்கரம் ஒன்று வரைந்து, அதில் மந்திர எழுத்துக்களை எழுதினார். அதனை அவனது காதில் உபதேசித்து வில்லில் அம்பைத் தொடுத்துவிடச் சொன்னார்.

துரியோதனனும் அவ்வாறே அம்பு தொடுத்தான். அந்த அம்பு சென்று ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொரு துளை செய்தது. அதைக் கண்ட துரியோதனன் மிக்க மகிழ்ச்சியடைந்து ஆசிரியரை வணங்கினான்.

துரோணர் அதன்பின் தரையில் எழுதிய சக்கரத்தை அழிக்காமலேயே அனைவரையும் அழைத்துக்கொண்டு கங்கைக்குச் சென்றார்.

அர்சுனன் எண்ணெயையும், சிகக்காயையும் வாங்கிக் கொண்டு விரைவாக வந்தான். அந்த ஆலமரத்தின் அருகில் காலடிகள் நெருக்கமாக இருந்ததைக் கண்டான். ஆசிரியர் ஏதோ புதியதாகக் கற்பித்திருக்க வேண்டும் என்று எண்ணி மேலும் கீழும் பார்த்தான். ஆலமரத்தின் இலைகள் துளையிடப்பட்டிருப்பதையும், கீழே சக்கரம் இருப்பதையும் கண்டான்.

எண்ணெய் வட்டிலைக் கீழே வைக்கக் கூடாது என்ற ஆசிரியரின் கட்டளையை நினைவிற் கொண்டான். உடனே தன்னுடைய வல்லமையால் வட்டில்களை அம்பு ஒன்றால் மேலே போகச் செய்து, அவை கீழே வருவதற்குள் வில்லை வளைத்துக் கீழே எழுதியிருந்த மந்திரத்தை உச்சரிந்து, மற்றோர் அம்பை ஆலமரத்தின் மேல் செலுத்தினான். அந்த அம்பு சென்று ஆலமரத்தின் இலைகளைத் துளைத்தது.

அர்சுனன் அதன் பின், தரையில் இருந்த சக்கரத்தைக் கலைத்துவிட்டு, கங்கைக் கரைக்கு விரைந்து சென்றான். எண்ணெய் முதலியவற்றை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, தன் உடன்பிறந்தோர் இருக்குமிடம் சென்றான்.

துரோணர் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது, முதலையொன்று அவரது காலைப் பற்றிக் கொண்டது. அவர் எவ்வளவோ முயன்றும் அது அவரது காலை விடவில்லை. அவர் நூற்றைவரையும் அழைத்துப் பார்த்தார். அவர்களுக்குச் செவியில் படாததால் எவரும் வரவில்லை.

அந்நிலையில் துரோணர் அப்பக்கம் செல்பவரிடத்தில் சொல்லியனுப்பினார். வழிப்போக்கர் மூலம் ஆசிரியரின் நிலையை அறிந்த மாணவர்கள் அனைவரும் அங்கு விரைந்து ஓடி வந்தனர்.

துரியோதனனும் அவனது தம்பிமாரும் ஓடி வந்து முதலையைக் கல்லால் அடித்தனர். முதலை முன்னைவிட மிகுந்த வலிமையுடன் முயன்று துரோணரை உள்ளே இழுத்தது. அர்சுனன் ஓடிவந்து வில்லை வளைத்து அம்புகளை வில்லில் தொடுத்து முதலையின்மேல் செலுத்தினான்.

முதலை இறந்தது. துரோணர் உயிர் பிழைத்தார்.

கங்கையில் அனைவரும் நீராடி முடித்த பிறகு, துரோணர் தம் மாணவர்களுடன் சென்ற வழியே மீண்டும் திரும்பி வந்தார். முன்பு கண்ட ஆலமரத்தடியில் அனைவரும் நின்றனர்.

துரோணர் ஆலமரத்தைப் பார்த்தார். இலைகளில் மற்றொரு துளை இருப்பதைக் கண்டு, ''மற்றொரு துளை செய்தவர் யார்?'' என்று கேட்டார்.

அர்சுனன் உடனே, ''நான்தான்!'' என்று பதில் கூறினான்.

அருச்சுனனைப் பார்த்து, ''வட்டில்களைக் கீழே வைக்காமல் நீ எவ்வாறு அம்பு எய்தாய்?'' என்று கேட்டார் துரோணர்.

அர்சுனன் தான் செய்தவற்றைக் கூறினான்.

துரோணர் உடனே, ''மீண்டும் அவ்வாறு ஒருமுறை செய்து காட்டுக!'' என்றார்.

அர்சுனன் முன்போல் வட்டில்களை அம்பின் மூலம் வானத்தில் செலுத்தி, அவை கீழே வருமுன் மற்றோர் அம்பைச் செலுத்தினான். அப்போது மரத்தின் இலைகளில் மூன்று துளைகள் இருப்பதை அனைவரும் கண்டனர்; வியப்படைந்து அர்சுனனைப்புகழ்ந்தனர்.

துரியோதனன் மட்டும் பொறாமை முக வாட்டத்துடன் இருந்தான்.

''துரியோதனா! பார்த்தாயா உன் தம்பியின் அறிவை. அவனுக்குக் கற்பிப்பதற்கு முன்னரேயே, அவன் நிலத்திலிருந்த சக்கரத்தின் உதவியால் கற்றுக்கொண்டான். நீ என்னிடம் நேரில் கற்றுக் கொண்டாயல்லவா? இப்போது நீ செய் பார்க்கலாம்!'' என்று கூறினார் துரோணர்.

துரியோதனன் அந்த மந்திரத்தை முற்றிலும் மறந்து விட்டு, அந்த ஆலமரத்தோடு ஒரு மரம் போன்று நின்றான்.

அப்போது துரோணர், துரியோதனனைப் பார்த்து, ''துரியோதனா! நான் உனக்குக் கற்பித்ததை மறந்துவிட்டாய். அர்சுனன் தானே கற்றுக்கொண்டதை நினைவில் வைத்திருக்கிறான். நீ இதனை அறியாமல் என்னைப் பற்றி அரசரிடம் சென்று முறையிடுகிறாயே!'' என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, தமது இல்லம் சென்றடைந்தார்.

சில நாட்கள் சென்றன.

துரியோதனன் மீண்டும் பொறாமைச் சொற்களைப் பேசி வந்தான். அவனுடைய பொறாமைப் பேச்சு பெரியோர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்து வந்தது. துரியோதனன் ஒருநாள் பீஷ்மர் முதலிய பெரியோர்களிடம் சென்று, பாண்டவர் பக்கம் அன்பும், தம் பக்கம் வெறுப்பும் துரோணர் காட்டி வருகின்றார் என்று மீண்டும் பழிச்சொல் பேசினான்.

அதைக் கேட்ட அவர்கள் மீண்டும் துரோணரை அழைத்துத் துரியோதனன் கூறியது பற்றி நயமாகக் கேட்டனர்.

அதற்குத் துரோணர், ''அவரவர் அறிவிற்கு ஏற்றபடிதான் கல்வி வருகிறது. அதை அறிவில் சிறந்த நீங்கள் அறிந்திருக்கலாம். அதைப் பற்றி என்னைக் கேட்பதில் பயனொன்றும் இல்லை. நீங்களே உங்கள் மக்களது அறிவை ஆராய்ந்து பாருங்கள்!'' என்று பதில் சொல்லிவிட்டு, தமது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார்.

பீஷ்மர் திருதராட்டிரன் முதலிய பெரியோர்கள் நூற்றைவரின் அறிவைச் சோதிக்க விரும்பினர். குருகுல மைந்தர்கள் நூற்றைந்து பேரையும் அழைத்து வரச் செய்தனர். அம்மைந்தர்களும் வந்து சேர்ந்தனர்.

பெரியோர்கள் திருதராட்டிரன் மைந்தர்களிடம் சிறிது செல்வமும் ஒரு வீடும் அளித்து, ''இந்தச் செல்வத்திற்கு வீடு நிறைந்த பொருளை வாங்கி வையுங்கள்!'' என்று சொல்லி அனுப்பினர். அவ்வாறே பாண்டு மைந்தர்களுக்கும் கொடுத்து அவர்களை மற்றொரு தெருவுக்கு அனுப்பினர்.

திருதராட்டிரனுடைய மக்கள் நூறு பேர்களும் சகுனி, கண்ணன் ஆகியவர்களோடு சேர்ந்து ஆலோசித்தனர்; சிறிதளவு செல்வத்தைக் கொண்டு எப்பொருளை வாங்கி வீடு முழுவதையும் நிரப்புவது என்று சிந்தித்தனர்; வீடு முழுவதிலும் எதையாவது நிரப்ப நினைத்தனர்.

வீடு நிறைந்த பொருள் விறகு, வைக்கோல் ஒன்றுதான் என்று முடிவு செய்தனர். வைக்கோலை வாங்கிக் கொண்டு வந்து, உள்ளே நுழைவதற்கும் இடமில்லாமல் வீட்டை நிரப்பினர். பாண்டவர்களுக்கு எவராகிலும் இதைக் கூறி விடுவார்களோ என்று எண்ணி, கதவை மூடி வைத்து, வீட்டிற்கு வெளியே வந்து மகிழ்ச்சியுடன் உட்கார்ந்திருந்தனர்.

தருமன் தன்னுடைய நான்கு தம்பிமார்களுடன் ஆராய்ந்தான்; சிறிதளவு செல்வத்திற்கு வீடு நிறையப் பொருள் பெறுவது எப்படி என்று சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தான்.

அவ்வாறு முடிவிற்கு வந்த தருமன், பீமனை அழைத்து அறுசுவை உணவை சமைக்குமாறு கூறினான். அர்சுனனை அழைத்து வெற்றிலை பாக்கு, மலர்மாலைகள், சந்தனம், பன்னீர் ஆகியவற்றை வாங்கி வருமாறு அனுப்பினான். விளக்குகள், திரிகள் ஆகியவற்றிக்கான நெய் முதலியவற்றை வாங்கி வருமாறு நகுலனை அனுப்பினான். சகாதேவனிடம் பட்டுபாய் வாங்கி வந்து விரித்து வைக்குமாறு கட்டளையிட்டான்.

தம்பியர் நால்வரும் தத்தம் பணியைச் செம்மையாகச் செய்து முடித்தனர். அதன் பின் அவர்கள் ஐவரும் நன்கு நீராடி, தங்களை அலங்கரித்துக் கொண்டு, பெரியவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

பீஷ்மர், திருதராட்டிரன் ஆகிய இருவரும் தம் அமைச்சர் முதலியோருடன் துரோணரையும் அழைத்துக் கொண்டு, துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். துரியோதனன் அவர்களை வணங்கி வரவேற்று அழைத்துச் சென்றான்.

திருதராட்டிரன் தன் மகனை நோக்கி, ''வீடு நிறைந்த பொருள் என்ன வாங்கினாய்?'' என்று கேட்டான்.

துரியோதனன், ''வீட்டை நிரப்புவதர்க்கு வைக்கோல்தான் ஏற்ற பொருள். அதையே வாங்கி வீட்டினுள் அடைத்து வைத்திருக்கிறேன். வீட்டினுள் செல்லவும் இடமில்லை!'' என்று பெருமையாகச் சொன்னான்.

அதைக் கேட்டதும், வந்தவர்கள் அனைவரும் வெறுப்படைந்து பாண்டவர்கள் இருந்த வீட்டிற்குச் சென்றனர்.

பெரியோர்களின் வருகையைக் கண்டவுடனே, தருமன் தன் தம்பியருடன் அவர்களை எதிர் கொண்டு வரவேற்றான். அவர்களைப் பட்டுப்பாயில் அமர்த்தி அறுசுவை உணவைப் படைத்தான். சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றை அளித்து உபசரித்தான்.

அப்போது திருதராட்டிரன், அவர்கள் வாங்கி வைத்த வீடு நிறைந்த பொருள் என்ன என்று கேட்டான்.

அதற்குப் பாண்டவர்கள், ''வீடு நிறைந்த பொருள் ஒளியும் மணமுமன்றி வேறொன்றுமில்லை. நாங்கள் விளக்கேற்றி வைத்துள்ளோம். அகில் புகையிட்டுள்ளோம். சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தெளித்து வீடு முழுவதும் மணம் வீசச் செய்துள்ளோம்!'' என்று கூறினர். வந்தவர்கள், பாண்டவர்களின் அறிவினைப் புகழ்ந்து பாராட்டினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us