தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குகன்! (3)

குகன்! (3)

குகன்! (3)


PUBLISHED ON : ஜூன் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பன் குகன், தானே படகினைச் செலுத்திக் கங்கையைக் கடந்து எதிர்க்கரை சேர்ந்தான். ராமன் முதலிய மூவரும் படகிலிருந்து இறங்கினர். அப்போது ராமன் தன் நண்பன் குகனை நோக்கி, ''சித்திரகூட மலைக்குச் செல்லும் வழியாது?'' என்று கேட்டான்.

சித்திரகூட மலைக்குச் செல்லும் வழியை காட்டினான் குகன். ஆனால், ராமனைத் தனியே விடுவதற்கு மனமில்லாதவனாய், ''நானும் உடன் வருவேன்!'' என்று மன்றாடினான். தன் நாட்டை தன் குடிகளையெல்லாம் மறந்து, அவன் நட்பு உடன் செல்லவும் துணிந்தது. தன் வசம் இழந்தான்; அவன் வசம் ஆனான்.

ராமன் துன்பத்தைத் தன் துன்பமாகவே எண்ணிவிட்டான். அதனால், ''சுவாமி! அடியேன் தங்களிடம் ஒன்று வேண்டிக் கொள்கிறேன். இங்குள்ள வழிகளையெல்லாம் நான் நன்கு அறிவேன். தங்கட்குக் காய், கனி, தினை, தேன் முதலியவற்றைத் தேடிக்கொண்டு வந்து கொடுப்பேன். தாங்கள் தங்கும் இடத்தில் சிறந்த வீடு கட்டித் தருவேன். ஒரு நொடிப்பொழுதும் உங்களை விட்டுப் பிரியாமல் காத்திருப்பேன்.

''இரவும் பகலும் தங்கள் திருவடிகளைப் பிரியாமல் இருப்பேன். இருளிலும் வழி காட்டுவேன். தாங்கள் ஏவிய பணியைச் செய்வேன். கொடிய விலங்குகள் இல்லாத ஒரு நல்லகாட்டைத் தேடித் தருவேன். தூரத்திலிருந்து நல்ல தண்ணீரும் கொண்டு வருவேன். யாருக்கும் அஞ்சமாட்டேன்.

''தாங்கள் கட்டளையிட்டால் என் சேனையையும் கொண்டு வருவேன். பகைவர் எவரேனும் வந்தால், என் முன் மாண்டு போவார்களேயன்றி மீண்டு போகார். ஆகையால், அடியேனும் தங்கள் கூட வருவேன்!'' என்று வேண்டினான்.

குகன் கூறியவற்றைக் கேட்ட ராமன், அவனுடைய நட்பின், அன்பின் ஆழத்தைக் கண்டான். நட்பிலே திட்பம் கொண்டான். அன்புடன் குகனை நோக்கி, ''குகனே! நீயோ என் உயிரனைய நண்பன். லட்சுமணன் உனக்கு தம்பி. சீதையோ உனக்குக் கொழுந்தி. என் நிலம் முழுதும் உன்னுடையதே. நான் உன் ஏவலுக்குக் கட்டுப்படும் உரிமையில் இருக்கிறேன். பிரிவை எண்ணி வருந்தாதே. உடன் பிறப்பால் நால்வராக இருந்த நாம், இன்று முதல் ஐவரானோம். இவ்வுலகம் உன்னுடையது.

''நீ சொல்கிறபடி நடக்கிறவன் நான். நான்தான் நீ. காடு முழுதும் துணைபுரிய என் தம்பி இருக்கிறான். எனக்குக் பகைதான் வேறு யார்? நீ உடன் வருவது அவ்வளவு தேவையில்லை. சொன்ன சொல் தவறாமல் திரும்பி வரும்போது உன்னிடத்திற்கு வருவேன். அயோத்தியில் என்னுடைய குடிகளைக் காக்க நம் தம்பியாகிய பரதன் இருக்கிறான்.

''இங்கு உன் குடிகளைக் காக்க யார் இருக்கிறார்? உன் சுற்றம் என் சுற்றம் அன்றோ? ஆகையால், இங்கு செய்ய வேண்டிய காரியத்துக்கு வேறு எவரும் இல்லை. எனவே, நீ இவ்விடத்திலேயே இருந்து இவர்களைக் காத்துக் கொண்டிரு. உன் நாட்டைக் காப்பதை விட்டு என் பொருட்டு உடன் வருவது முறையன்று!'' என்று அமைதியாகக் கூறினான்.

குகனும் நட்புரிமையால் அமைதித் தன்மையைக் கொண்டான். இருவரும் பயன் கருதாமல் நட்பிலே வளமை கொண்டனர். குகன் தன் அன்பைச் செயலால் வெளிப்படுத்திய முறையும், ராமன் தன் அன்பைச் சொல்லால் வெளிப்படுத்திய முறையும், அவர்கள் நட்பை வளப்படுத்திய தோடன்றி வெளிப்படுத்தியும் காட்டின.

நண்பன் குகன், மிகவும் துயரத்துடன் அவர்களிடம் விடை பெற்றுத் திரும்பிச் சென்றான். பரதன் அயோத்தியில் நிகழ்ந்தவற்றையெல்லாம் அறிந்து மிக வருந்தினான். சுமந்திரனை அழைத்துக் கொண்டு தன் அண்ணன் ராமனைத் தேடிப் புறப்பட்டான்.

ராமனைத் திரும்ப அழைத்து சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் சுமந்திரனோடு தேரிற் செல்லாது, கால் நடையாகவே வந்தான். அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து, பரதனின் பரிவாரங்கள் வந்தன. ராமனைத் தேடிப் புறப்பட்டுச் சென்ற அவர்கள், ராமன் தங்கியிருந்த சோலையைக் கண்டு வருந்தினர். பின்னர் பரிவாரங்களுடன் கோசல நாட்டைக் கடந்து கங்கைக் கரையை அடைந்தனர்.

அப்போது கங்கையின் தென் கரையில் குகன் தன் படைகளுடன் நின்று கொண்டிருந்தான். அவன், கங்கையின் வடகரையில் தன் பரிவாரங்களோடு வந்து நின்ற பரதனைக் கண்டு, இவர்கள் ராமனோடு போர் புரியவே வந்திருக்கின்றனர் என்று எண்ணிக் கடுங்கோபம் கொண்டான்.

தன் படை வீரர்களை நோக்கி, ''அதோ! எதிர்க் கரையில் படைகளோடு வந்து நிற்பவன், ராமரின் தம்பி போலக் காணப்படுகிறான். ராமருக்குத் தீங்கு இழைக்கவே இங்கு வந்திருக்கிறான். இவனையும் இவன் படைகளையும் கொன்று, நாட்டின் அரசுரிமையை நம் ராமருக்கே உரிமையாக்குதல் வேண்டும். நீங்கள் போர் புரியத் தயாராக இருங்கள். அவர்கள் கங்கையைக் கடப்பதற்கு எவரும் ஓடம் செலுத்தாதீர்கள்!'' என்று கட்டளையிட்டான்.

கங்கையின் வடகரையில் வந்து நின்ற சுமந்திரன், தென்கரையில் நின்ற குகனைக் கண்டவுடன் பரதனை நோக்கி, ''அதோ நிற்பவன் இங்கு ஓடம் செலுத்துபவன், குகன் என்னும் பெயருடையவன், ராமனிடத்தில் பேரன்பு கொண்டவன். உங்களைக் காண விரும்பி நிற்கிறான்!'' என்று கூறினான்.

குகன், தன் வீரர்களை அருகில் அழைத்தான். ''இப்படைகள் ராமனுக்குத் தீங்கிழைக்க வந்தனவே. இப்படைகளெல்லாம் எலியாகும். யானோ இவற்றை தின்னும் பாம்போவேன். இப்படைகளை வானுலகேற்றுங்கள். ராமருக்கு மணிமுடி சூட்டுங்கள். ராமருக்குக் கொடுக்காமல் வஞ்சனையால் அரசாட்சியைப் பெற்ற மன்னரும் இக்காடு நோக்கி வந்தார்களோ?

''என் வில்லிலுள்ள அம்புகள் சீறிக்கொண்டு செல்லாதோ? நண்பர் ராமனுக்கு உதவி செய்யாவிட்டால் உலகம் என்னைப் பழிக்காதோ? இவர்கள் ஆற்றைக் கடப்பது எவ்வாறு? படையைக் கண்டு அஞ்சுபவன் நானல்லன். நண்பர் ராமருக்காக ஏழை வேடன் இறந்தான் என்ற பெயர் வாங்க மாட்டேனா?

''ராமரைத் தமையன் என்றும், லட்சுமணனை தம்பி என்றும் நினைத்தானல்லன். இவ்வெல்லையைத் தாண்டியல்லவா போர் புரிய வேண்டும். வேடர் விடும் அன்பு, வேந்தர் மார்பில் பாயாதோ? ஆட்சி வெறி கொண்டவர்கள் பாவமும் பழியும் நினைக்கமாட்டார்களோ? இன்னார், இனியர் என்று பார்க்கமாட்டார்களோ? பிறர்க்குத் துன்பம் செய்வதைப் பெருமையாக எண்ணுவார்களோ?

''நட்பை அளித்த ராமனைக் காப்பாற்றாமல் விடுவேனோ? என் நண்பன் காடாள, இவனை மட்டும் நாடாள விடுவேனோ? நான் ராமரோடு செல்லாமல் இருந்ததும் நல்லதாகவே முடிந்தது. படைகளே! நாட்டைக் கொடுத்த ராமருக்குக் காட்டையும் கொடுக்கக் கூடாது என்று படையெடுத்தார்களோ? வேடர்கள் ராமருக்கு நாட்டை வாங்கிக் கொடுத்தோம் என்ற பெரும் புகழ் அடையமாட்டார்களோ?'' என்று வீரமொழி பகர்ந்தான்.

சுமந்திரன் பரதனிடம் குகனைப் பற்றிக் கூறியவுடன் பரதன், ''நானே சென்று அவனைக் காண்கிறேன்!'' என்று கூறினான். உடனே கங்கை நீரின் ஓரத்தில் வந்து நின்றான். எதிர்க்கரையில் நின்ற குகன், பரதனுடைய கோலத்தையும், கண்ணீரையும் கண்டான். பரதனின் கண்ணீர், குகனின் உள்ளத்தை நெகிழ்வித்தது.

ராமருக்குத் தீங்கிழைக்க வந்துள்ளான் என்று தவறாக எண்ணினோமே என்று எண்ணி வருந்தினான் குகன். உடனே ஓர் ஓடத்தில் ஏறி வடகரை சென்றடைந்தான். தசரத குமாரனாகிய பரதனும், சிருங்கிபேரத் தலைவனாகிய குகனும் ஒருவரையொருவர் அன்புடன் தழுவிக் கொண்டனர்.

அந்நிலையில் குகன் பரதனை நோக்கி, ''தாங்கள் இங்கு வந்த காரணம் யாது?'' என்று வினவினான்.

அதற்குப் பரதன், ''என் தந்தையாகிய தசரதர் முன்னோர் முறையிலிருந்து தவறினார். அந்தத் தவறை போக்க ராமனை அழைத்துச் செல்ல வந்தேன்!'' என்று பதில் கூறினான்.

அதைக் கேட்ட குகன், கண்களில் நீர் பெருகப் பரதனைப் பணிந்து நின்றான்.

(-முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us