PUBLISHED ON : ஜூன் 17, 2011

சீன அரசில் உயர் பதவியில் இருந்தவர் சென்காய் ஜென் குரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சக அதிகாரி ஒருவனின் மனைவி மீது ஆசை கொண்டு விட்டார். கண்மூடித்தனமான மயக்கத்தில் அந்த அதிகாரியைக் கொலை செய்யவும் அவர் தயக்கவில்லை.
பெண்ணின் அழகு மனிதர்களை அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கும். அவரும், அவளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் கண்காணாத தொலைவில் வாழத் தொடங்கினர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க அவர் திருடவும் தயங்கவில்லை.
ஒருநாள் அவளைவிட்டு, விலகிச் சென்றார் சென்காய் . அந்தப்பெண் ஊதாரி. அவளுடைய செலவுகளுக்கு அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. அவர் சிக்கனத்தை வலியுறுத்தினார். அவளால் முடியாத காரியம் அது. அவர்கள் பிரிவதற்கு வேறு காரணமும் வேண்டுமா என்ன?
சென்காய் தொலைதூரக் கிராமம் ஒன்றில் தங்கினார். வாழ்க்கை நெடுகிலும் தாம் செய்த தவறுகளை எண்ணி வருந்தினார். மிச்சமுள்ள வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்கிக் கொள்ள விரும்பினார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்குச் செல்வதென்றால் மலையேறிச் செல்ல வேண்டும் அல்லது மலையைச் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டியிருக்கும்.
அந்த ஊர் மக்களுக்காக மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தனியொரு ஆளாக அவரே சுரங்கப் பாதையை அமைக்கத் தொடங்கினார். தம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார்.சுரங்கப்பாதை செப்பனிடுவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும். அவருக்கும் அது தெரிந்ததுதான். தெரிந்தே தான் அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார்.
ஒருநாள் இளைஞன் ஒருவன் அவர் முன்பாக வந்து நின்றான்.
''சென்காய் யாரென்று ஊரில் கேட்டேன், அவர்கள் உம்மைக் காட்டினார்கள்.'' என்றான்.
''அது சரிதான். ஆமாம் நீ யார்?'' கேட்டார் சென்காய்.
''உம்மைக் கொல்ல வந்திருக்கிறேன்,'' என்றான் அவன்.
''நீ என்னைக் கொல்லுமளவிற்கு நான் என்னப்பா செய்தேன் ?'' அமைதியாகக் கேட்டார் சென்காய்.
''என்னுடைய தந்தையை நீ கொன்றாய்... உன்னை நான் கொல்வேன்.'' என்றான்.
அவன் யாரென்று அவருக்கு புரிந்துவிட்டது. முன்பு அவரால் கொல்லப்பட்ட சக அதிகாரியின் மகன் அவரைப் பழிவாங்க வந்திருக்கிறான்.
''நல்லது இளைஞனே! இவ்வளவு தூரம் என்னைத் தேடிக் கண்டுப்பிடித்து விட்டாய். என்னைக் கொல்லப் போவதாக என்னிடமே சொல்கிறாய். உன்னுடைய துணிவும் நேர்மையும் என்னை வியக்கச் செய்கிறது. ஆனாலும், கொஞ்சநாள் பொறுமையாக இரு. நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் இந்தச் சாலைப் பணியை முடித்து விடுகிறேன். சில நாளில் அது முடிந்துவிடும். பிறகு உன் விருப்பத்தை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றார்.
அவனும் அவருடைய வேண்டுகோளை ஏற்றான். அவர் வேலை செய்கிறபோது, தான் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பதா என்று அவனும் அவருடன் வேலையில் ஈடுபட்டான். அதனால் வேலை சீக்கிரமே முடிந்தது. சுரங்கப்பாதையில் மக்கள் போய் வரத் தொடங்கினர். சென்காயின் பணியை அவர்கள் மனமுவந்து பாராட்டினர்.
சென்காய் அந்த இளைஞனிடம் சொன்னார், ''நல்லது அப்பா, இனி என்னைக் கொன்று போடு!'' என்றார்.
இளைஞன் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு ''ஐயனே உம்மீது எனக்கிருந்த பகை முற்றிலுமாய் நீங்கி விட்டது. உம்மை எனது குருவாய்க் கொண்டேன்.'' என்றான்.
காலம் தான் மனக்காயத்துக்கு அருமருந்து என்பர். அது காயத்தை மட்டுமா ஆற்றுகிறது? மனதையும் அல்லவா மாற்றுகிறது. தவறுகளே வாழ்க்கையாய்க் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகம் இது. அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும்போதும் மாறுவது அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல; சுற்றுப்புறமுந்தான்.
***
