தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குமணன் (தொடர்கதை)

குமணன் (தொடர்கதை)

குமணன் (தொடர்கதை)


PUBLISHED ON : ஜூலை 30, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர் - 1

சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிலப்பகுதிக்கு பழைய காலத்தில் கொங்கு நாடு என்ற பெயர் இருந்தது. இது மலைப்பகுதிகளை மிகுதியாகக் கொண்டது. இம்மலைப்பகுதியில் குறிப்பிடத்தக்க மலை ஒன்றும் இருந்தது. அதன் பெயர் முதிர மலை. அது எல்லா வளங்களும் நிரம்பியது. மூங்கில், பலா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன.

இம்முதிர மலை, உடுமலைப்பேட்டை வட்டத்தை மையமாகக் கொண்டுள்ள நிலப்பகுதியாகும். இந்த முதிர மலை நாட்டை அரசர் பலர் ஆண்டு வந்தனர். அவர்களுள் பெயரும் புகழும் கொண்டவன் குமணன்.

அவன் கடையேழு வள்ளல்களுக்கு அடுத்த நிலையில் வைத்து சிறப்பிக்கப்பட்டான். நற்குணங்கள் பலவும் நிறைந்தவன். பிறர் துயர் காண பொறுத்துக் கொள்ளாதவன். அவன் விரும்பியவற்றைக் குறிப்பறிந்து உடனே கொடுப்பான். அவர்களுடைய வறுமை நீங்குமாறு வாரி வாரி கொடுப்பான்.

இவ்வாறு வறியவர்க்கெல்லாம் வள்ளலாக விளங்கிய குமணன், புலவர்களை அவர்களுடைய பாடல்களில் உள்ள சிறப்பை உணர்ந்து பாராட்டிப் போற்றுவான். பொன்னும், பொருளும் அளவில்லாமல் வாரி வழங்குவான். அணியும் மணியும் அள்ளி அள்ளிக் கொடுப்பான். களிறும் மாவும் களித்து வழங்குவான். ஊரும் தேரும் உவந்து கொடுப்பான். பிறர்க்குக் கொடுத்து அவருடைய இனிய முகத்தைக் கண்டு இன்புறுவதையே தன்னுடைய இன்பமாகக்கருதி வாழ்ந்து வந்தான்.

இவனது புகழ் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவியது. இப்படிப்பட்ட குமண வள்ளலுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன் என்பதாகும். அவன் இயற்கையிலே நல்ல குணங்களைக் கொண்டவன். ஆயினும், சின்னஞ் சிறியோர் பலருடன் சேர்ந்து சிறுமை பல அடைந்து விட்டான்.

அவன் தன் அண்ணன் செய்யும் அறச் செயல்களைக் கண்டு வெறுப்பு அடைந்தான். நல்ல செங்கோலாட்சி, வள்ளல் தன்மை ஆகியவற்றில் தன் அண்ணன் பெரும் புகழ் அடைவதைக் கண்டு பொறாமை கொண்டான். செய்யத் தகாத செயல்களைச் செய்யவும் துணிந்தான். அருமை அண்ணனை அரியணையிலிருந்து அகற்றிவிட்டு, அதில் தான் அமர்வதற்கான வழிவகைகளை எல்லாம் செய்தான்.

அண்ணன் குமணன் அன்புள்ளம் படைத்தவன். அவன் தன் தம்பி இளங்குமணனின் மனக்கருத்தை உணர்ந்து, நிலையில்லாச் செல்வத்தின் பொருட்டு அவன் தன்னிடம் பகைமை கொண்டிருப்பதை எண்ணி வருந்தினான். ஆகையால், நாடு, நகரம், செல்வம் முதலிய எல்லாவற்றையும் தம்பிக்கே கொடுத்துவிட முடிவு செய்தான். அதன்படி நாட்டைத் துறந்து காட்டிற்குச் சென்றான். அங்கு மறைந்து வாழ்ந்து வந்தான். அடர்த்தி மிக்க அழகிய காடு அவனுக்கு அழகிய காட்சிகளை வழங்கி மகிழ்வூட்டியது.

இளங்குமணன் தன் அண்ணனுக்குரிய அரிய செல்வம் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் கவர்ந்து கொண்டு, அரசனும் ஆனான். செல்வம் பெற்ற சிறப்பினால் செருக்கு அடைந்தான். அண்ணன் செய்த அரிய அறச் செயல்களை எல்லாம் தடுத்து நிறுத்தினான். பரிசில் பெற வந்த வறுமையாளர்களையும் இகழ்ந்துரைத்தான். தன் அண்ணனிடம் மதிப்பு வைத்திருந்தவர்களையும், அன்பு செலுத்தியவர்களையும் தண்டித்தான்.

இப்படிப்பட்ட செயல்களால் முதிர மலை நாட்டில் அமைதி குலைந்தது. துன்பம் அடைந்த குடிமக்கள் குமணனையே புகழ்ந்தனர். இளங்குமணனை இகழத் தொடங்கிவிட்டனர். இவற்றை எல்லாம் உணர்ந்தான் இளங்குமணன். பொறாமை மிகுதியாக ஏற்பட்டது.

தன் அண்ணன் திரும்பவும் அரசாட்சியைப் பெற முயன்றால் என்ன செய்வது என்ற எண்ணம் அவனை வாட்டி வருத்தியது. ஆகவே, தன் அண்ணன் உயிரோடு இருக்கும் வரை, தான் சிறப்படைய முடியாது எனக் கருதினான். அதனால், அவனைக் கொல்லவும் துணிந்தான். தன் அண்ணன் குமணனின் தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு கோடிப் பொன் கொடுப்பதாகவும் பறை அறிவித்தான்.

பறையொலி எங்கும் கேட்டது. காட்டில் மறைந்து வாழ்ந்த குமணன் காதிலும் ஒலித்தது. இந்தச் செய்தி அறிந்த நாட்டு மக்கள் இளங்குமணன் மீது கோபம் கொண்டனர்.

பழைய காலத்தில் வறுமையால் வாடிய புலவர்கள் பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக புலமையை விற்று அறியாதவர்கள், வீரரைப் புகழ்வர். கோழையை இகழ்வர். வரிசை அறிந்து வழங்கும் வள்ளல்களை வாழ்த்துவர். அப்படி பொருட்களைக் கொடுக்காதவர்களை இகழ்வர். அவர்களுக்கு கிடைத்ததைக் கொண்டு பெரிதும் மகிழ்வர். மற்றவர்களுக்கும் உதவுவர்.

இத்தகைய புலவர்களுள் ஒருவர் பெருஞ்சித்திரனார் என்பவர் ஆவார். இவர் பெரும் புலவர். பெருந்தலை எனும் ஊரில் பிறந்தவர். அவ்வூர் 'மூங்கிழார்' எனும் புலவரின் அருமை மைந்தர். 'சாத்தனார்' எனும் இயற்பெயரையும் கொண்டவர். வறுமையில் வாடியவர். எதையும் அழகுபடச் சித்தரித்துப் பாடும் ஆற்றல் பெற்றவர். பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டவர்.

இவர் தமது வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக நாடு பல சுற்றினார். நல்லோரைக் கண்டார். நல்லறிவு ஊட்டும் பாடல்களை அவர்கள் முன் பாடினார். அவர்கள் விரும்பிக் கொடுக்கும் பொருட்களைப் பெற்று மகிழ்ந்தார்.

இவர் குமண வள்ளலின் புகழையும் கொடைத் தன்மையையும் கேள்வியுற்றார். அவனைக் கண்டு தன் வறுமை நோயைப் போக்கிக் கொள்ளலாம் எனக் கருதினார். அதன் பொருட்டு முதிர மலையை அடைந்தார். அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைக் கேட்டு உணர்ந்தார். மிகவும் வருத்தப்பட்டார்.

வள்ளல் குமணன் காட்டில் மறைந்து வாழ்வதைக் கேட்டுக் கலங்கினார். அவன் தம்பி இளங்குமணன் அரியணையில் அமர்ந்து அரசாட்சி புரிந்து வருவதையும் அறிந்தார். அவர் மனம் அரசு புரியும் இளங்குமணனைக் காண ஆசைப்படவில்லை. காட்டில் வெறுங்கையனாய் மறைந்து வாழும் குமணனையே காண விரும்பியது. உடனே அவர் காட்டை நோக்கி விரைந்து நடந்தார். அங்கு பல இடங்களில் தேடினார். இறுதியில் இருள் நிறைந்த காட்டில்கண்டு தலை தாழ்த்தி வணங்கினார்.

இப்படி காட்டில் மறைந்து வாழும் அந்த நிலைமையிலும், வள்ளல் குமணன், வந்தவர் தமிழ் புலவர் பெருமகன் என்பதை அறிந்தான். அவரை அன்புடன் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்தான்.இருவரும் சிறிது நேரம் இனிமையாக பேசிக் கொண்டு இருந்தனர். குமணனுடைய அருங்குணங்களில் ஈடு கொண்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார்,

''வள்ளலே! நீ வசையறிந்த குடியில் பிறந்து இசை மிக்கவன். என் குடும்ப நிலையை சிறிது சொல்வேன். கேட்பாயாக!'' என்றார்.

(— தொடரும்)

***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us