PUBLISHED ON : ஆக 01, 2020

உலகின் இரண்டாவது நீண்ட சுற்றுச் சுவர் என்ற புகழ் பெற்றது, கும்பால்கர்க். இது ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அருகே உள்ளது.
மேவார் நாட்டை ஆண்ட மகாராணா கும்பா என்பவரால், கி.பி.1443ல் கட்டப்பட்டது. இதன் நீளம், 36 கி.மீ., இதற்குள் உள்ள குன்றின் உச்சியில், 1,100 மீட்டர் உயரத்தில் ஓர் அரண்மனை உள்ளது. இதை கும்பால் கர்க் என்பர். அரண்மனையை பாதுகாக்கும் வகையில், ஐந்து மலைகளை இணைத்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மேவார் நாட்டையும், மன்வார் நாட்டையும் பிரித்தது சுற்றுச்சுவர்.
இந்த பகுதிக்குள், 360 புராதன வழிபாட்டு இடங்கள் உள்ளன. இவற்றில், 300 சமண மத வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டவை. முக்கியமாக, சமண சமய முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதருக்காக அமைக்கப்பட்டுள்ள கோவில், 40 ஆயிரம் சதுர அடி பரப்புள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
குன்றின் மீதுள்ள கும்பால் கர்க் அரண்மனையில் நின்று பார்த்தால், ராஜஸ்தான், ஆரவல்லிமலைத்தொடர் அட்டகாசமாக தெரியும். மற்றொரு புறம் தார் பாலைவனம் காட்சி தரும். மணல் குன்றுகளையும், அதில் பயணிக்கும் ஒட்டகங்களையும் காண்பது அபூர்வ காட்சி. அரண்மனை அருகே, அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சுவரைக் கட்ட மன்னர் கும்பா, பல முறை முயன்றார். இடைஞ்சல்கள் வந்தன. நொந்து போனவர் ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டார். ஓர் உயிரை பலி கொடுத்தால் தான், முடியும் எனக்கூறி விட்டனர்.
இந்த தகவலை மக்களிடம் அறிவித்தார் மன்னர். யாரும் முன் வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பின், ஒரு சுற்றுலா பயணி முன்வந்தார். அவரிடம், 'உன் தலை விழும் இடத்தில், ஒரு கோவில் எழுப்பப்படும்...' என உறுதியளித்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னர் கும்பா, 84 கோட்டைகள் கட்டியுள்ளார். அவற்றில், 32 அவரே வடிவமைத்ததாக வரலாறு கூறுகிறது. 19ம் நுாற்றாண்டில் பிரபலமாக விளங்கிய மன்னர் மகாராணா பிரதாப் சிங், கும்பால் கர்க் அரண்மனையில் பிறந்தவர் தான்.
இந்த சுற்றுச்சுவரை, உலக பாரம்பரிய சின்னமாக, 2013ல் அறிவித்தது, 'யுனெஸ்கோ' நிறுவனம்.
- திலீப்
