
மதுரையிலுள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியில் வருடா வருடம் கோடை சுற்றுலாவாக ஏதாவது ஊருக்கு அழைத்துச் செல்வர். அந்த வருடம் குற்றாலம், கன்னியாகுமரி என இரண்டு பஸ்களில் சுற்றுலா சென்றோம்.
நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் இருந்து இரவு 3 மணிக்கு பயணம் துவங்கி, அதிகாலை 7 மணியளவில் குற்றாலத்தை அடைந்தோம். குற்றாலத்திலுள்ள அருவிகளில் குளித்து முடித்துவிட்டு, கன்னியாகுமரிக்கு சென்று முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்தோம். பிறகு, இரவு ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம்.
நாங்கள் சுற்றுலா பயணம் செய்த பஸ்ஸிற்கு பின்னால் இரு வாலிபர்கள் எங்கள் பஸ்ஸை பின் தொடர்ந்து வந்து, நாங்கள் தங்கி உள்ள ஹாஸ்டலில் மறைந்து கொண்டனர்; எங்களுக்கு இது தெரியாது. நாங்களும், ஈர உடைகளை ஹாஸ்டல் வராண்டாவில் உள்ள கொடியில் உலர போட்டு விட்டு, பயணம் செய்த களைப்பில் ஆழ்ந்து தூங்கிவிட்டோம். ஹாஸ்டல் வாட்ச்மேனும் தூங்கி விட்டார்.
மறைந்திருந்த வாலிபர்கள் கொடியில் கிடந்த எங்கள் ஈர உடைகளை அணிந்து பெண் போல் வேடம் போட்டு வந்து, எங்கள் பக்கத்தில் படுத்துக் கொண்டனர். நாங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் உருண்டு, புரண்டு படுக்கையில், எங்கள் கை, கால்கள் அந்த வாலிபர்கள் மேல்படவே, எங்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது.
விழித்த நாங்கள் அதிர்ச்சியில் கூச்சல் போட, ஹாஸ்டல் பெண் வார்டன் எழுந்து விளக்கை போடவே, வாலிபர் இருவரும் எங்கள் தாவணி, பாவாடையை கழற்றிப் போட்டு விட்டு, ஹாஸ்டல் சுவர் ஏறி தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் பயந்து நடுங்கினோம். பெண்கள் எவ்வளவு உஷாராய் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
- அ.மஹ்மூதா, ராஜபாளையம்.