PUBLISHED ON : ஆக 30, 2013

முல்லைநகர் என்னும் ஊரில் முல்லை என்னும் பால்காரி இருந்தாள். அவளுக்குத் தாய் தந்தை இல்லை. அவள் ஒரு கன்னிப் பெண். அவளை ஆதரிக்க உற்றார், உறவினர் யாரும் இல்லை. எனவே, தன் வயிற்றுப் பிழைப்புக்குத் தானே வழி செய்து கொள்ள வேண்டிய ஏழ்மை நிலையில் அவள் இருந்தாள்.
ஒரு பெருநிலக் கிழாரின் தோட்டத் தில் வேலைக்காரி யாக அவள் பணி புரிந்து வந்தாள். அப்பெரு நிலக் கிழாரிடம் பல பசுக் களும், எருமைகளும் இருந்தன. பாலை ஒரு குடத்தில் எடுத்துச் சென்று அருகிலுள்ள நகரத்தில் விற்பது முல்லை செய்ய வேண்டிய பணி.
நாள்தோறும் பாலை ஒரு குடத்தில் எடுத்துச் சென்று, விற்று, பணத்தைக் கொண்டு வந்து, தன் நிலக்கிழாரிடம் கொடுத்து வந்தாள். அவள் மிகவும் நேர்மை யானவள்; உண்மையான உழைப்பாளி.
பெருநிலக்கிழார் அவளுடைய நேர்மை யான பணியைப் பாராட்டினார். அவள் உழைப்புக்கு பரிசாக ஒருநாள் விற்பனை யாகும் பணத்தை அவளே வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கினார். ஒரு குடம் பாலை விற்றுப் பணம் தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.
வழக்கம் போல், அன்றும் பால் நிறைந்த குடத்தை தன் தலையின் மீது சுமந்து கொண்டு சாலை வழியாக அருகி லுள்ள நகருக்குச் சென்றாள் முல்லை.
கல்லும், முள்ளும் நிறைந்த சாலை வழியே மிகக் கவனமாகச் சென்றாள். தன் ஏழ்மையை எண்ணிக் கொண்டே நடந்து சென்றாள்.
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது ஒன்றே ஆகும். ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால், வறுமை நிலையில் எவ்வகை யாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
இவ்வாறு நடந்து செல்லும் போது அவள் உள்ளத்தில் பற்பல எதிர்கால எண்ணங்கள் தோன்ற லாயின. பின் வருமாறு மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டே நடக்கலானாள்.
'என் தலையின் மீதுள்ள குடத்திலுள்ள பால் முழுவதும் எனக்குச் சொந்தமானது, பெருநிலக்கிழார் பெருந்தன்மையுடன் இதை எனக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
பணம் சம்பாதிக்க இப்போது ஒரு வழி கிடைத்தது. இக்குடத்திலுள்ள பாலை, லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் விற்பேன். இக்குடத்திலுள்ள பத்து லிட்டர் பாலை விற்றால் முப்பது ரூபாய் எனக்குக் கிடைக்கும். இத்தொகையைக் கொண்டு, மூன்று கோழிகள் வாங்குவேன். அவை முட்டையிட்டு ஏராளமான குஞ்சுகள் பொரிக்கும்.
மேலும், முல்லையின் கற்பனை கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. கோழிக் குஞ்சுகள் பெரியதாகும். அவற்றை விற்றால், நிறையப் பணம் கிடைக்கும். அத்தொகையைக் கொண்டு, ஒரு பசுவின் கன்றுக் குட்டி வாங்குவேன்.
கன்று விரைவில் பெரிய பசு வாகும். அது கன்று ஈன்று பால் சுரக்கும்!
முல்லையின் கற்பனை மேலும், மேலும் விரிந்தது.
'பாலை விற்று, பெரிய பணக்காரி ஆவேன். எனது சொந்த ஊராகிய முல்லைநகரில், ஒரு பெரிய வீடு கட்டுவேன். பட்டுப் புடவைகளும், பொன் நகைகளும் வாங்கி அணிந்து கொள்வேன். அப்போது நான் மிகவும் அழகாகத் தோன்றுவேன். என்னை மணந்து கொள்ள பலர் விரும்புவர். பல செல்வம் படைத்த இளைஞர் என் இல்லத்திற்கு வந்து என்னை மணந்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிப்பர்.
'நான் பெரிய சீமாட்டி' பேரழகி. உன்னைத் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன்,' என்று கூறுவேன்.
இவ்வாறு மனக்கோட்டை கட்டிய முல்லை, தன் தலையை தன்னையும் அறியாமல், விரைவாக ஆட்டினாள். உடனே, அவள் தலையின் மீது வைத் திருந்த பாற்குடம் கீழே விழுந்தது; குடம் சுக்கு சுக்காக உடைந்தது; பால் முழுவதும் தரையில் கொட்டிப் போயிற்று.
ஏழை முல்லை என்ன செய்வாள்? அவள் ஆவலுடன் கட்டிய மனக் கோட்டை இடிந்து தகர்ந்தது. மிகவும் வருத்தத்துடன், தன் ஊருக்கு வெறுங்கையோடு திரும்பினாள்.
பேராசைப் பட்டதால், தனக்கு ஏற்பட்ட பெரு நட்டத்தை எண்ணி, எண்ணி வருந்தினாள்.
***
