PUBLISHED ON : அக் 28, 2023

பெரம்பலுார், புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 9ம் வகுப்பு படித்தபோது, மாணவியர் தலைவியாக இருந்தேன்.
சமூக அறிவியல் ஆசிரியை இசபெல்லா, ஒவ்வொரு நாளும் நடத்தும் பாடத்தில் வினாக்களுக்கான விடையை, வீட்டுப்பாடமாக எழுதி வர சொல்வார். மறுநாள் அவற்றை சேகரித்து மேஜையில் அடுக்கி, ஆசிரியை பார்வைக்கு வைப்பது என் பொறுப்பு.
அன்று தோழியும், நானும் வீட்டுப்பாடம் எழுதியிருக்கவில்லை. வகுப்பில் நுழைந்ததும், அடுக்கியிருந்த விடைத்தாள்களை எண்ணியபடி, 'இன்று யாரெல்லாம் எழுதி வரவில்லை...' என கேட்டார் ஆசிரியை. யாரும் பதிலளிக்கவில்லை. அனைவரையும் எழுந்து நிற்க சொன்னார். பின், என்னிடம், 'விடைத்தாள்களில் இருக்கும் பெயரை நீ வாசி... அந்த மாணவியர் மட்டும் உட்காரட்டும். மற்றவர்கள் நிற்கட்டும்...' என்றார்.
பயத்தில் மனம் படபடத்த போதும், வெளிக்காட்டாமல் வாசித்தேன். இறுதியில் தோழியும், நானும் மாட்டிக் கொண்டோம். கண்டிப்புடன், 'நன்றாக படிக்கும் நீங்கள் இப்படி செய்யலாமா... தலைமை பொறுப்பு வகித்தால் முன்னோடியாக திகழ வேண்டும்; அதை உணர்ந்து செயல்படு...' என்றார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டேன்.
எனக்கு, 30 வயதாகிறது; இல்லத்தரசியாக இருக்கிறேன். நம் மீது நம்பிக்கை வைப்பவரை ஏமாற்றி, வீணாக சிரமம் கொடுக்க கூடாது என்று அன்றைய வகுப்பு நிகழ்வில் கற்றுக்கொண்டேன். அதை நினைவில் தாங்கி இன்றும் செயல்படுத்தி வருகிறேன்.
- நிவேதா, சென்னை.
