தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (16)

மாய விழிகள்! (16)

மாய விழிகள்! (16)


PUBLISHED ON : அக் 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். கிராமத்துக்கு சென்ற வழியில், காட்டில் மர்ம வேனை கண்டனர். முயற்சி செய்து வேனை அடைந்தனர். அங்கு பள்ளி வார்டன் மற்றும் சில மாணவியரை கண்டு விசாரித்தனர். இனி -

''மிகவும் பதற்றமாக இருக்குறீயே தியா...'' என்றார் வார்டன்.

''இங்கு வந்ததும், தானும் வந்து விடுவதாக அனு கூறினாள். இன்னும் வரல; அதுதான், என் பதற்றத்திற்கு காரணம்...''

''இப்போ என்ன செய்யலாம்...''

கேள்விக்கு பதில் தரும் வகையில் பார்வையை சுழற்றினாள் தியா.

கல்திட்டு என்ற அந்தப் பகுதி, சற்று மேடான பாறை சூழ்ந்த இடமாக இருந்தது. அதன் அருகில் மரங்கள், ஒரு தோப்பு போல நெருக்கமாக வளர்ந்து இருந்தன.

''வார்டன்... நீங்கள் நால்வரும், இந்த மரங்களுக்குள் பாதுகாப்பாய் மறைந்திருங்கள். நான், அனுவை அழைத்து வருகிறேன்...''

''நாங்க தனியா எப்படி இருப்போம்...''

''இது பாதுகாப்பான இடமாக தான் இருக்கிறது. இந்த மரங்களுக்குள் ஒளிந்தால், எங்கிருந்து பார்த்தாலும், நீங்கள் இருப்பது தெரியாது; வந்த வழியே சென்று, அனுவை அழைத்து வருகிறேன்...''

''சரி... ஜாக்கிரதை தியா...''

''எக்காரணம் கொண்டும் வெளியில் வந்து விடாதீர். நானும், அனுவும் வரும் வரை காத்திருங்கள். ஒருவேளை, அனு எனக்கு முன் வந்தால், அவளுடன் இங்கேயே காத்திருங்கள்...''

தெளிவாக எடுத்துரைத்து நகர்ந்தாள் தியா.

'வேனில் இருந்த தோழியரையும், வார்டனையும், தியா பாதுகாப்பான துாரம் அழைத்துச் செல்லட்டும்' என எண்ணி, கண் சிமிட்டாமல் காத்திருந்தாள் அனு.

அப்போது, செல்வாவும், வீராவும் வேனை நெருங்கி வந்தனர். அதேசமயம், அனு இருந்த இடத்திற்கு வந்தாள் தியா.

அனு, கண் சிமிட்டாமல் தன் பார்வையை தொடர்ந்து கொண்டிருக்க, அருகில் வந்து, தொட்டு தன் வருகையை நாசுக்காக தெரிவித்தாள் தியா. பின், செல்வாவையும், வீராவையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

''செல்வாண்ணா... அங்கு பாருங்கள். வேன் கதவு, திறந்து இருக்கிறது...''

பதற்றத்துடன் கூறினான் வீரா.

உற்று கவனித்து, ஓட்டமும், நடையுமாக வேனை நெருங்கினர் இருவரும்.

அதன் உட்புறம் குழந்தைகளும், வார்டனும் இல்லாததை கண்டு அதிர்ந்தனர்.

''என்னாச்சு... வேன் ஓட்டுநர் எங்கு சென்றான்...''

ஓட்டுநர் இருப்பிடம் நோக்கி வந்தான் செல்வா.

ஓட்டுநரை உற்றுப் பார்த்திருந்த அனுவின் கண்ணில், செல்வா பட்டதும், தன்னை அறியாமல் கண்ணை சிமிட்டினாள். சிறிய அதிர்வுடன் அசைந்தான் ஓட்டுநர். உணர்வுக்கு வந்ததும் தடுமாறினான். என்ன நடந்தது என பிடிப்படவில்லை.

''வேனுக்குள் இருந்த வார்டனும், குழந்தைகளும் தப்பித்துள்ளனர். நீ என்ன செய்கிறாய்...''

செல்வா கேட்டது உரைப்பதற்கு ஓட்டுநருக்கு சற்று நேரம் பிடித்தது.

''செல்வாண்ணா... நீ, எப்போ வந்த... இங்கு என்ன நடக்குது...''

''அது கூட தெரியாமல், துாங்கிட்டு இருந்தீயா...''

''திடீர்ன்னு எனக்கு என்னவோ போல ஆயிற்று; கை, கால்களை அசைக்கவோ, பேசவோ முடியவில்லை. எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியவில்லை...''

பதறினான் ஓட்டுநர்.

அதை கேட்டு, அந்த இரண்டு குழந்தைகளை தேடி சென்ற போது, தனக்கு நிகழ்ந்ததை போல் ஓட்டுநருக்கும் நடந்துள்ளது என செல்வாவுக்கு புரிந்தது.

''பின்பக்கம் ஏதாவது சத்தம் கேட்டதா...''

''ஆமா... ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. ஆனால், அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை...''

''வேனை நோக்கி யாராவது ஓடி வந்தனரா...''

''தெரியவில்லை. அந்த சமயத்தில் கழுத்தை திருப்ப கூட முடியவில்லை; இருக்கையில் இருந்து, எழவும் முடியவில்லை...''

செல்வாவுக்கு தெளிவாக புரிய, ''வீரா...'' என அழைத்தான்.

சிறிது துாரம் தள்ளிச் சென்று தேடிய வீரா, ஓடி வந்தான்.

''என்ன அண்ணா...''

''நாம, குழந்தைகளை தேடிய போது, எனக்கு ஏற்பட்டது போல இவனுக்கும் நடந்திருக்கு. அந்த சமயத்தில், அந்த சிறுமியர் எனக்கு எதிரில் தான், ஒரு புதரில் ஒளிந்திருந்தனர். அதே போல், இப்பவும், இங்கு எங்கேயாவது பக்கத்தில் தான், மறைந்து இருக்கணும். தேடு...'' என கூறி, ஓட்டுநர் பக்கம் திரும்பினான் செல்வா.

''கீழே இறங்கு. உனக்கு இப்போ எப்படி இருக்கு...''

''சரி ஆகிடுச்சுண்ணா...''

மூவரும், மூன்று திசையில் தேட ஆரம்பித்தனர். அனுவும், தியாவும் இதை கவனித்தனர்.

அவர்கள் இருக்கும் திசை நோக்கி ஓட்டுநர் வர, மீண்டும் அவனை உற்றுப் பார்த்தாள் அனு.

அவள் கண் முன் புகை மூட்டம் தோன்ற ஓட்டுநர் உறைந்தான்.

அங்குமிங்கும் பார்த்து வந்த செல்வா, ஓட்டுநர் உறைந்து நிற்பதை கவனித்தான்.

வேகமாக ஓடி வந்து, ''என்ன ஆச்சு...'' என்று ஓட்டுநரை உலுக்க, தொடர்ந்து அவனை உற்றுப் பார்த்தவாறே இருந்தாள் அனு.

உறைந்து போய் நின்றிருந்த ஓட்டுநரை அசைக்க கூட முடியாமல், திகைத்தான் செல்வா.

சற்று வசதியாக வந்து நின்றவன், ஓட்டுநரை பிடித்து உலுக்க முயற்சித்தான். அந்நிலையில், ஓட்டுநருக்கும், அனுவுக்கும் இடையில், அவன் வர, ஓட்டுநர் மீதான அனுவின் பார்வை தடைப்பட்டு செல்வா மீது பதிந்தது.

இதனால், ஓட்டுநர் சுய நினைவுக்கு வந்து விட, செல்வா உறைந்தான். செல்வா வந்ததையும், உலுக்கியதையும் உணர்ந்திருந்த ஓட்டுநர், தற்போது, தன்னை போலவே உறைந்த நிலையில் செல்வா நிற்பதை பார்த்து மிரண்டான்.

''ஐயோ...''

கத்தியவாறு, அவன் விலக, இந்த சத்தத்தில், கண் சிமிட்டினாள் அனு.

செல்வா இயல்பு நிலைக்கு வந்தான். சத்தம் கேட்டு வீராவும், அவர்களை நோக்கி ஓடி வந்தான்.

''இங்கே தான் எங்கேயோ பக்கத்தில் அந்த சிறுமியர் இருக்கின்றனர். தேடுங்கள்...''

படபடப்புடன் கூறினான் செல்வா.

இந்த உறைவு நிகழ்வுகளால் அதிர்ந்து போயிருந்த ஓட்டுநர் தயங்கியபடி, ''செல்வா அண்ணா... எனக்கு பயமா இருக்கு...'' என்றான்.

''பயப்படாதே... தைரியம் தான் எப்போதுமே துணையாக இருக்கும். அந்த சிறுமியர், இங்கு தான் பக்கத்தில் எங்கேயாவது இருக்க வேண்டும்...''

சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் பார்வையிலிருந்து தப்ப, மரத்தின் மீது ஏற முயன்றாள் அனு. அவளது அசைவு செல்வாவின் பார்வையை ஈர்க்க கண்டுபிடித்தான்.

''அங்கே இருக்கா பாரு...''

அனுவை நோக்கி ஓடி வந்தான். அப்போது பார்வையில், தியாவும் பட இருவரையும் சுற்றி வளைத்தனர்.



- தொடரும்...

ஜே.டி.ஆர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us