PUBLISHED ON : ஜூலை 13, 2018

'பூமி தட்டையானது; அதன் விளிம்பிற்குப் போனால், பாதாளத்தில் விழுந்து மடிவது உறுதி' என்று, ஒரு காலத்தில் பயந்து கொண்டிருந்தான், மனிதன். எல்லையில்லாது பரந்து கிடக்கும், கடலைப் பார்த்து பீதியும், வியப்பும் அடைந்தான். கடல் வழியில் பயணம் செய்வது பற்றி, கனவு கூட காண பயந்தான்.
பழங்காலத்தில் தமிழக மன்னர்கள், கப்பல் படை உதவியால், ஜாவா, சுமித்ரா போன்ற நாடுகளில், ஆட்சியை, நாகரிகத்தை விரிவு படுத்தியதாக வரலாறு உண்டு. இவையெல்லாம், குறுகிய எல்லலைக்குள், பாய்மரக் கப்பல், படகு போன்றவை வழி நடந்த மாற்றங்கள்.
கடல் பயணங்களில், சாகசம் செய்தவர்கள், ஐரோப்பா கண்டத்தில் ஸ்வீடன், நார்வே நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள், 'வைக்கிங்' என்று அழைக்கப்பட்டனர். ஐரோப்பிய நதிகள் வழியே, கண்டத்தின் பல பகுதிகளிலும், ரஷ்யாவிலும் ஊடுருவினர்.
பின், ஐரோப்பாவின் மேற்கே, அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து நிலப்பகுதிகளைக் கண்டு குடியேறினர். கொலம்பசுக்கு முன், அமெரிக்காவில், கால் பதித்தது வைக்கிங்குகள் தான். மேய்ச்சல் நிலங்களைக் காணவும், புதிய நிலப்பகுதியில் குடியேறவும், வீடு, கப்பல் கட்ட, மரங்களைத் தேடியும், உடை, போர்வைக்கு தோல், பர் போன்றவை நாடியும், வைக்கிங்குகள் அலைந்தனர்.
உடல் பலமும், மனோதிடமும், போர்க் குணமும் கொண்டவர்கள் வைக்கிங்குகள். ஐரோப்பிய மன்னர்களிடம் பீதியை உண்டாக்கி, கடல்களைக் கலக்கி, ஆட்சி புரிந்தனர். எல்லையற்ற கடலில், கப்பல்களில் பயணம் செய்தனர்.
கடல் கொள்ளையர் என்றும் வர்ணிக்கப்பட்டனர். கப்பல்களில் செல்லும் போது, காகங்களை பறக்க விடுவர்; அவை திரும்பி வந்தால், அருகே நிலம் ஏதுமில்லை என முடிவு செய்வர்; திரும்பாவிட்டால், காகம் பறந்த திசையில் பயணித்து, புதிய நிலத்தை அறிவர்.
அவர்கள் சரித்திரம் விரிவானது.
ஐரோப்பாவுக்கு மேற்கே, அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஐஸ்லாந்தையும், கிரீன்லாந்தையும் கண்டு, வட அமெரிக்காவில் உள்ள கனடா நிலப்பரப்பில் கால் வைத்தவர் வைக்கிங், லீப் எரிக்ஸன்.
கி.பி.,989 ல், வர்த்தகக் கப்பல்களை வழி மறித்துக் கொள்ளையடித்து வந்தனர் வைக்கிங்குகள். வட அட்லாண்டிக் கடலில் இவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஒரு சமயம், அட்லாண்டிக் சமுத்திரத்தில் இவர்கள் கப்பல், புயலில் சிக்கி, மேற்கு நோக்கி இழுத்து செல்லப்பட்டது. அப்போது, விந்தை நிலப்பகுதியை கண்டனர். ஆனால், அங்கு அவர்கள் இறங்கவில்லை. கப்பல் தலைவர் ஹெர்ஜுல்பிஸன், தன் நண்பர் லீப் எரிக்ஸனிடம், அந்த புதிய நிலப்பரப்பு பற்றி கூறினார்.
அந்த தகவலால் ஆர்வம் கொண்ட எரிக்ஸன், புதிய நிலப்பரப்பைக் காணப் புறப்பட்டார். அவர் சிறந்த மாலுமி. சில நாட்கள் பயணம் செய்து, தேடி வந்த புதிய நிலத்தில், கப்பலை நங்கூரமிட்டார். அந்த பகுதிக்கு, 'நியூ பவுண்ட்லாண்ட்' அதாவது, புதிதாக கண்ட பூமி என்று பெயரிட்டார். தொடர்ந்து, பயணப்பட்டு, வட அமெரிக்கா கண்டத்தில் கனடாவின் லாப்ரடார், நோவாஸ் கோஷியா மற்றும் மாஸாசூஸெட் வரை ஆராய்ந்ததாக தெரிகிறது.
புதிய நிலம் கண்ட எரிக்ஸன், அப்போது அங்கு தங்கவில்லை; தாய்நாடு திரும்பி விட்டார். ஆறு ஆண்டுகளுக்கு பின், 160 பேர் கொண்ட, வைக்கிங் குடும்பங்களுடன், புதிதாக கண்ட நிலத்தில் குடியேறக் கிளம்பினார். கால்நடைகளுடன் சென்ற இவர்களுக்கு, தலைமை தாங்கி நடத்தியவர், தார் பின் கார்ஸ்பின் என்ற வீரர். புதிய உலகில் குடியேறியவர்கள், கால்நடைகளை மேய்த்து, மூன்று ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தனர்.
ஆனால், அந்த நிலத்தின் சுதேசிகளான செவ்விந்தியர்கள், அவர்களுக்கு தொல்லை தந்தனர். தொல்லை அதிகமானதால், வாழ்க்கை கடினமாயிற்று. உணவுப்பற்றாக் குறை ஏற்பட்டது; செவ்விந்தியர்களின் இடைவிடாத தாக்குதல், வைக்கிங்குகளை வெளியேறும் நிலைக்கு தள்ளியது.
குடியிருப்புகளை கைவிட்டு, மீண்டும் கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் கிளம்பினர். கடல் வழி அவர்களுக்கு கை வந்ததாகிவிடவே, ஐஸ்லாந்தை அடைந்தனர். அமெரிக்காவை, கொலம்பஸ் அறிவதற்கு, 400 ஆண்டுகளுக்கு முன், அங்கு காலடி வைத்த ஐரோப்பிய இனத்தவர், வைக்கிங்குகள் தான்.
