PUBLISHED ON : ஜூலை 13, 2018

சென்றவாரம்: சிறுவர்களிடம், நேருக்கு மாறாக பேசிக் கொண்டிருந்தான் காளியப்பன். இனி -
அந்த மரத்தை, ஆத்திரம் தீர அடித்தார் பெரியவர். அனைத்து பழங்களும் உதிர்ந்து ஓடி, குவியலாகின.
பெரியவரின் கோபம் அடங்கவில்லை; காளியப்பன் சிரிப்பும் அடங்கவில்லை. ''என் மவன புடுச்சிருக்க ஆவியை இறக்கியாகணும்; அதுக்கு நீ தான் உதவணும் தம்பி...'' என்றார்.
''சொல்லுங்க பெரியவரே...'' என்றான் ராமு.
''என் குடிசையில, ஒரு சுத்தியலும், பெரிய ஆணியும் வெச்சிருக்கேன். அதை எடுத்துட்டு வா...'' என்று கூறினார். உடனே அதை எடுத்து வந்து கொடுத்தான்.
ஆணியை மரத்தில் வைத்து, சுத்தியலால் ஓங்கி அடித்தார் பெரியவர். அடிக்க அடிக்க, ''ஐயோ... வலிக்குதே,'' என்று அழுதான், காளியப்பன்.
''நீ யாருன்னு தெரிஞ்சு போச்சு; நீ ஒரு நம்பிக்கை துரோகி; இனி உன்னை விட மாட்டேன்; இது சத்தியம்,'' என்ற பெரியவர் பலம் கொண்டு ஆணியை அடித்து, முழுவதுமாக இறக்கினார்.
அழுது கொண்டிருந்த காளியப்பன் அடங்கி, மீண்டும் கால்கள் பெற்று, தரையில் விழுந்தான். துள்ளி குதித்த சப்போட்டா பழங்கள் எல்லாம், பழையபடி குவியலாகி விட்டன.
சிறுவர்கள் மூவரும் கைதட்டி, பெரியவரை கட்டி பிடித்து, துாக்கி கொண்டாடினர்.
பெரியவர் மரத்தை பார்த்து, ''அடே படு பாதகர்களே... உங்க அக்கிரமங்கள் இன்னும் அடங்கலயா... என்ன செய்றேன்னு பாருங்க...'' என்று உணர்ச்சியுடன் கூறினார்.
'அது நடக்காது; நடக்கவும் விடமாட்டேன்...' என்று பெரும் சத்தம் கேட்டது. பெரியவரும், சிறுவர்களும் திரும்பி பார்த்தனர். மெல்ல எழுந்தான் காளியப்பன்.
அதே சமயம், ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. குவியலாக கிடந்த சப்போட்டா பழங்கள் கலைந்து, மனித உருவமாக வடிவமைந்தன. இதை பார்த்ததும், சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தாலும், அச்சமடைந்தனர்.
''அடே கிழவா... எங்க உப்ப தின்ன நீ, எங்க வம்சத்துக்கே துரோகம் செய்றியா... நீ உயிரோட இருந்தா தானே, அது நடக்கும்; இனியும் உயிரோட விட மாட்டேன்,'' என்று, பெரும் குரலில் கூறிய காளியப்பன், பெரியவரையும், சிறுவர்களையும் நோக்கி ஓடி வந்தான்.
''தம்பிங்களா... நிலைமை கை மீறி போயிடுச்சு; நாம, உடனே குடிசைக்கு போயிடலாம்...'' என்றார்.
அதற்குள், ராமுவின் தந்தை, கோவிந்தநாத சிம்மர் வந்து விட்டார். பெரியவர் கை அசைத்தபடி இருக்க, திரும்பி பார்த்த சிறுவர்களும், கை அசைத்ததும், கண் ஜாடைக்காட்டி, நாளை வருவதாக சென்றனர்.
பொழுது புலர்ந்தது. காலை, 9:00 மணிக்கே புத்தகத்தை எடுத்தபடி, மூவரும், பெரியவர் வீட்டை அடைந்தனர்.
''வாங்க தம்பி... உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்,'' என்றவர், உள்ளே சுருண்டு படுத்திருந்த தன் மகனை காட்டி, சிறு பிள்ளை போல் அழுதார்.
''ஐயா... அழாதீங்க,'' என்று, உணர்ச்சியுடன் ராமு பேச, அமைதியான பெரியவர், திடமான முடிவு எடுத்தார்.
அவர்களை அழைத்து, அரண்மனை இடுகாட்டின் கடைசி பகுதிக்கு வந்தார். அதன் பின்பகுதி, பெரிய கம்பிகளால் வேலி போடப்பட்டு இருந்தது. அந்த கம்பி வேலி தாண்டி, குடிசை காணப்பட்டது.
''சின்ன எஜமான்... சொல்றத நல்லா கேட்டுக்கோங்க...'' என்று மெதுவாக பேச துவங்கினார் பெரியவர்.
''எனக்கு அப்போ, 10 வயசு... எங்க குடும்பமே, இந்த ராஜ குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அரண்மனையில, நிறைய பேரு வேலை பாத்தாங்க. ஆனா, மூத்த ராஜா, ராஜா ராஜா சிம்மர், அவரோட அப்பா, என் தந்தையை தான் அதிகமா நம்பினாரு. இதனால, மத்த வேலைக்காரங்களுக்கு, என் அப்பா மேல பொறாமை உண்டு.
''ஒரு நாள், மூத்த ராஜா ஒரு முதியவருடன் பேசிக்கொண்டிருந்தார். என் அப்பாவும், நானும் அருகில் நின்றோம். 'ஜோசியர் ஐயா... என்ன இப்படி சொல்லிட்டீங்க...' என, மூத்த ராஜா கோபமாக கேட்டார். 'ஐயா... நான் சொல்லலீங்க; இந்த சோழிகள் தான் சொல்லுது...' என்றபடி மவுனமாக நின்றார்.
'அதற்கு பரிகாரம் இல்லை' என்று ஜோதிடர் கூறியதும், ஆத்திரத்தில் பெரிய ராஜா, துப்பாக்கியால் அவரை சுட்டார்.
''உடனே, என் அப்பா குழியை வேகமா தோண்ட, ஜோதிடரை அதில் புதைத்தனர். அந்த இடம் தான் அது... பெரிய ராஜா கோபப்படுவாருன்னு சொல்லுவாங்க... ஆனா, கொலையும் செய்வாருன்னு அப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்...''
கதையை சொல்லி கொண்டிருக்கும் போதே, ஜோதிடரை புதைத்த இடத்தில் இருந்து, ஒரு பெரிய பாம்பு சீறியபடி மேலே வந்தது.
அனைவரும் தப்பிக்க நினைத்த போது, பெரியவரால் காலை துாக்க முடியவில்லை; புதைந்திருந்தது.
மனதுக்குள், 'ஜோதிடர் ஐயா... நான் செய்த பாவத்துக்கு மன்னித்து விடுங்கள்; என் காலை ஏதோ ஒரு சக்தி இழுக்குது; நான் இறந்தால் பரவாயில்லை; ஆனால், சின்ன ராஜாவும், அவர் நண்பர்களும் என்ன பாவம் செய்தனர்; அவர்களை பழி வாங்குவது எந்த விதத்தில் நியாயம்...' என்று அழுதார். என்ன ஆச்சரியம், மேலே வந்த பாம்பு, கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் மறைந்து சென்றது.
நண்பர்கள், ஆச்சரியத்துடன் பார்த்தனர். இப்போது, பெரியவர் முழு பலத்தையும் உபயோகித்து, காலை புதை மணலில் இருந்து எடுத்ததும், மண்ணின் உள்ளிருந்து மேலே தெறித்து விழுந்தது ஒரு மக்கிய பை.
அதன் உள்ளே, நான்கு சோழிகளும், ஒரு ஓலைச்சுவடியும் இருந்தன. அதில், 'பஞ்சமிமி திதி' என்று எழுதப்பட்டு இருந்தது. ஜோதிடரை புதைத்த இடத்தில், அந்த சோழிகள், மல்லாக்க விழுந்ததும் மகிழ்ந்தார் பெரியவர்.
''இனி, இந்த ராஜ வம்சத்துக்கும் ஜெயம்; நமக்கும், ஜெயம் தான்,'' என்றார்.
நான்கு பேரும் குடிசைக்கு வந்தனர். அங்கு, ''ஆஹா... நீ வெச்சிருக்கிற சாம்பார் பிரமாதம்... இன்னும் கொஞ்சம் ஊத்து,'' என்று மலர்ந்த முகத்துடன் மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தான் காளியப்பன்.
ஆச்சரியம் தாங்க முடியாமல் ஆனந்த கண்ணீர் விட்ட பெரியவர், ''மகனே... நல்லா இருக்கியாடா... பித்து பிடித்தவன் மாதிரி இருந்தவன், பழைய நிலைக்கு வந்திருக்கான்,'' என்று பெருமிதத்துடன் கூறி, மகனை தழுவிக்கொண்டார்.
''தம்பிங்களா... இந்த ஏழை குடிசையில, ஏதோ பெயருக்கு சோறும், குழம்பும் இருக்கும்; சாப்பிடுறீங்களா?'' என்று கேட்கவும், மூவரும் சிரித்தபடி, 'எது கொடுத்தாலும் சாப்பிடுவோம்...' என்றனர்.
சாப்பிட்டு முடித்ததும், இடுகாட்டில் நடந்த அனைத்தையும் காளியப்பனிடம் கூறினர்.
''ஐயோ... அப்படி எல்லாம் நடந்துச்சா... ஆச்சரியமா இருக்கேப்பா...'' என்றபடி, ஜோதிடரை புதைத்த இடத்தை தோண்ட, ஐவரும் கிளம்பினர்.
காளியப்பன் குழியை தோண்டிய போது, அதிர்ச்சியுடன், ''அப்பா...'' என்றான்.
''ஏன்டா... என்ன ஆச்சு,'' என்று பெரியவர் கேட்டபடியே, பார்த்த போது, ஜோதிடரின் எந்த உடல் பாகமும் அங்கு இல்லை; மாறாக, ஆள் உயரத்துக்கு, ஒரு பொம்மை படுக்க வைக்கப்பட்டிருந்தது.
'ஏதேனும் மர்மம் இருக்கும்' என்று நினைத்தப்படி, அதை எடுத்து பார்த்தால், அதன் கீழ், நிறைய முட்டைகள் இருந்தன.
அந்த பொம்மைக்குள், ஒரு வெங்கல தகடு இருந்தது. அதில், ஒரு பக்கம் சப்போட்டா மரமும், அடுத்த பக்கம் சப்போட்டா பழமும் படமாக வரையப்பட்டு, கீழே இருபக்கமும் மண்டை ஓடு வரையப்பட்டிருந்தது.
''கண்டிப்பா இந்த பொம்மையை அவன் தான் வெச்சிருக்கணும்...'' என்றார் பெரியவர்.
''அவன் மிக கொடியவன்; பெயர் சோமன்; ஆறடி உயரம்; நல்லா, 'தகதக'ன்னு இருப்பான்; ஆனா, அவன் தொழில், பொம்மை விற்பது அல்ல; மந்திரம் செய்வது. அப்படித் தான் மூத்த ராஜாவை வசியப்படுத்தி விட்டான். இதை, என் தந்தை விரும்பவில்லை. அவன் வந்தாலே, உள்ளே விட மாட்டார்.
''ஒருநாள், அவன் வந்தால், என் அப்பா நாகப்பன் அந்த இடத்தில் இருக்க கூடாதுன்னு மூத்த ராஜாவே கட்டளை இட்டு விட்டார். அந்த அளவுக்கு வசியம் செய்து விட்டான், பொம்மை மந்திரவாதி சோமன். அவன் போடுற ஆட்டத்தை என் தந்தையால் கவனிக்க முடியவில்லை. மாறாக நான், கவனித்து அப்படியே என் அப்பாவிடம் வந்து சொல்வேன்.
'-'ஒருநாள், 'சப்போட்டா பழம் சப்போட்டா பழம்' என்று கூவியபடியே வந்த ஒருத்தி, அரண்மனைக்குள் பிரவேசித்தாள். அவள் சோமனின் சகோதரி. இந்த அரண்மனையையே, தன் கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கம் அவள் செயலில் தெரிந்தது.
''அதற்கு ஏற்றாற்போல், அவள் கருவுற்றாள்; ஆண் குழந்தையும் பிறந்தது. அவளை மன்னரிடம் அழைத்து வந்து, விவரம் கூறி, 'ராஜ பரம்பரைக்கே இது மகிழ்ச்சியான செய்தி...' என்று அறிவிக்க செய்தான் சோமன். ஆனால், மூத்த ராஜா அதை ஏற்கவில்லை.
''பட்டத்து ராணி இருக்கும் போது, மாலையிடாத ஒருத்திக்கு பிறந்த குழந்தை பற்றி யாரிடமும் கூற அவர் விரும்பவில்லை. ஆனால், சோமன் விடவில்லை. அவரை நச்சரித்தான். வேறு வழியில்லாமல், உற்றார், உறவினருக்கும், மக்களுக்கும் தனக்கு வாரிசு பிறந்துள்ளதாக அறிவித்து, விழா எடுத்தார் மூத்த ராஜா.
''சோமனின் தொல்லை தாங்காத மூத்த ராஜா, அவளை, அரண்மனையிலேயே வைத்துக்கொண்டார். ஆனால், தாலி கட்டவில்லை; மாறாக அவளுக்கு பட்டத்து ராணியை விட, அதிக அதிகாரம் கொடுத்திருந்தார். அங்கேயே தங்கி விட்டான் சோமன்...'' என்றார்.
- தொடரும்...
